செப்டம்பர் 21ஆம் திகதி நாம் வெற்றி பெறுவது உறுதி... !

• வலுவான பொருளாதாரம் கொண்ட வளர்ந்த நாடொன்றை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்போம்.

• நாட்டை வங்குரோத்தில் தள்ளும் சஜித் மற்றும் அநுரவின் கொள்கைகளைத் தோற்கடிப்போம்.

• நாட்டை வெல்லும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்போம் - மத்திய கொழும்பு  இறுதி வெற்றி பேரணியில்  ஜனாதிபதி முழக்கம்!

செப்டெம்பர் 21ஆம் திகதி தனது வெற்றி உறுதியானது என்று தெரிவித்த  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனைவரையும் ஒன்றிணைத்து வலுவான பொருளாதாரத்துடன் அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு 2022ஆம் ஆண்டு அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டுக்காகவே தான்  முன்னோக்கி வந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அனைவரும் இணைந்து இளைஞர் யுவதிகளுக்கு வளர்ந்த நாடொன்றைப' பெற்றுக் கொடுப்பதற்கான பொறுப்பை நிச்சயம் நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு கிரேண்ட்பாஸில்  இன்று (18)  இரவு நடைபெற்ற 'ரணிலால் இயலும்' இறுதி வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற பொதுக் கூட்டங்களின் தொடரில் இறுதிப் பொதுக்கூட்டம் இதுவாகும். இதில் மத்திய கொழும்பைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியை பொதுமக்கள் பெரு வரவேற்பளித்தனர்.

''இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளாத பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு மக்களின் ஆணையைக் கோருவதாகவும் தெரிவித்தார்.

நாட்டை வங்குரோத்தில் தள்ளும் சஜித் மற்றும் அநுரவின் கொள்கைகளை இந்நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி தோற்கடிப்பார்கள் என தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை வெற்றிகொள்ளும் வேலைத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் வலியுறுத்தினார்.

இந்த பேரணிக்கு முன்னர் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற  பூஜையிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்கு ஆசிர்வாதம் வழங்கும் முகமாக இளம் தொழில்முனைவோர்கள் இந்த விசேட பூஜையை  ஏற்பாடு செய்திருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது,

''கட்சி சார்பாக அன்றி சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் களமிறங்கியுள்ளேன். 2 வருடத்திற்கு முன்பிருந்த நிலையை நினைவில் கொள்ள வேண்டும். வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. ஒன்றில் வெற்றி பெறும் போது மற்றொரு சவால் எழும். வாழ்வில் பாராட்டும் விமர்சனமும் மாறி மாறிக் கிடைக்கும். நான் பொறுப்பை ஏற்ற போது அனைவரும் தப்பி ஓடினார்கள். மக்கள் என்னை நிராகரித்தாலும் எனக்கு மக்களை நிராகரிக்க முடியாது. சஜித்திற்கும் அநுரவிற்கும் உங்களை நிராகரிக்க முடிந்தது. மக்கள் என்னை மறந்தாலும் நான் அவர்களை மறக்கவில்லை.

எனது வீட்டை எரித்த போதும் நான் ஒதுங்கிச் செல்லவில்லை. மக்கள் கஷ்டப்பட்டார்கள். வங்குரோத்தடைந்த நாடாக அறிவிக்கப்பட்ட நிலையில்தான் நாட்டை பொறுப்பேற்றேன். மக்களுக்காக முடிவுகளை எடுத்தேன். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுகள் கேட்க நேரிட்டது. எமது முன்னெடுப்பினால் வருமானம் அதிகரித்தது. அடுத்த வருடம் வாழ்க்கைச் செலவை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவேன்.

கடனை மீளச் செலுத்த முடியாததே பிரதான பிரச்சினையாக இருந்தது. 18 நாடுகளிடம் கடன் பெற்றிருந்தோம். சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் பெறப்பட்டிருந்தது. கடனை மீளச் செலுத்த முடியாது என அந்த நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டது. 17 நாடுகளுடனும் சீனாவுடனும் உடன்பாடுகள் எட்டப்பட்டன. நாளை சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். ஐ.எம்.எப் ஒப்பந்தத்தை மீற செயற்பட்டால் நிவாரணம் கிடைக்காது. வங்குரோத்து நிலையில் இருந்து நாடு விடுபட்டால் வெளிநாட்டு உதவிகளைப் பெற முடியும். எம்மால் முன்னேற முடியும். நாம் எந்தநாளும் வறுமையில் இருக்கப் போகிறோமா? பொருளாதாரத்தைப் பலப்படுத்தி அனைவரையும் செல்வச் செழிப்புள்ளவர்களாக மாற்ற வேண்டும்.

ஐ.எம்.எவ். ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டால் இரு வேளை பட்டினியாக இருக்க நேரிடும்.  ஒரேயொரு ஐக்கிய தேசியக் கட்சி தான் உள்ளது என்பதை  ஐதேகவினருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பிரேமாஸவின் பின்னர் நான் தான் கட்சியைப் பாதுகாத்தேன். எந்தநாளும் பிச்சையெடுக்க முடியாது. இதனை மாற்றியமைக்க வேண்டும்.

பொய்யான அரசியலால் பயனில்லை. எமது மக்களை வசதிபடைத்தவர்களாக மாற்ற வேண்டும். எம்மால் இயலும். நாம் வெல்வது உறுதி" என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன,

2022 ஆம் ஆண்டு இலங்கையில் நாடும் அரசாங்கமும் இருந்தாலும் தலைவர் ஒருவர் இல்லாத  நிலை உருவானது. அன்று ​​எதிர்க்கட்சிகள் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை. அப்போது அனுபவமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவாலை ஏற்றுக்கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி பதவியைப் பெற்றார். அவ்வேளையில், சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் ஜனாதிபதி போட்டிக்கு முன் வராமல் டலஸ் அழகப்பெருமவை வேட்பாளராக நிறுத்தினார். சஜித் பிரேமதாச அனைத்து சவால்களில் இருந்தும்  ஓடிய தலைவர். அநுர திஸாநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் மூன்று வாக்குகளே கிடைத்தன. அநுர திஸாநாயக்க அந்த மூன்று வாக்குகளைக் கொண்டே நாட்டை ஆட்சி செய்வதாகக் கூறுகிறார். அவர் எவ்வாறு சட்டமொன்றை நிறைவேற்றுவார்? சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு எதிராக மூன்று நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டு வந்தார்.

மூன்று நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் தோற்கடிக்கப்பட்டன. மக்களின் துயரங்களை துடைக்க ஜனாதிபதி செயற்பட்டுக் கொண்டிருந்த போது, ​​சஜித் பிரேமதாசவும், அனுர திஸாநாயக்கவும் இழுத்தடிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக ஜனாதிபதி தேர்தலுக்காக அவர்கள் உழைத்தார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த இரண்டு வருடங்களாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உழைத்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த தலைவர்கள் இருவரும் ஆற்றிய பணிகளை ஒப்பிட்டுப் பார்த்து இந்தத் தேர்தலில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்று வலியுறுத்துகிறேன். அவரது வெற்றிக்காக கொழும்பு மக்கள் அணி திரள்வார்கள் என நான் நம்புகிறேன்.'' என்றார்.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க,

''இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைக் கையளிக்க ஒரு தலைவரைத் தேடியபோது, முப்பது பேர் எப்படிப்போனாலும்  ஒரு தலைவர் கூட முன்வரவில்லை. சவாலுக்கு  அஞ்சி ஓடிய தலைவர்களிடம் இந்த நாட்டை ஒப்படைப்பதா இல்லையா என்பதை எதிர்வரும் 21ஆம் திகதி எமது மக்கள் தீர்மானிப்பார்கள்.

அன்று ரணில் விக்ரமசிங்க சவாலை எதிர்கொண்டு நாட்டைப் பொறுப்பேற்று இந்த நாட்டில் வரிசை யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். ஆறு மாதங்களுக்குள் உணவு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு இன்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இது பொருளாதாரத்தில் கட்டமைப்பு மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

பொருளாதார பரிமாற்றச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் புதிய பொருளாதார மேலாண்மை திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளார். அதற்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நம்பிக்கையை சர்வதேச சமூகத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த நம்பிக்கையை தொடர்வதா இல்லையா என்பது இந்த தேர்தலில் முடிவு செய்யப்படும்.

கடன் வழங்கிய ஒவ்வொரு நாடுகளுடனும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நடவடிக்கை எடுத்தோம். தேர்தல் மேடைகளின் மூலம் சர்வதேச ஒப்பந்தங்களை மாற்ற முடியாது என்பதைக் கூற வேண்டும். அந்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட்டால், நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது. திட்டமிட்ட முறைப்படி கட்டியெழுப்பப்படும் நாட்டின் பொருளாதாரத்தை முன்நோக்கி கொண்டு செல்லும் திறன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மாத்திரமே உள்ளது. அந்த பொறிமுறை அழிக்கப்பட்டால், பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். தற்போது ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதுடன், நாட்டுக்குத் தேவையான பொருட்களுக்கு தட்டுப்பாடும் இல்லை, அதேசமயம் மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.

'உறுமய'  வேலைத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஏற்கனவே பல சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மக்கள் உலகின் முன் தலை நிமிர்ந்து வாழக்கூடிய சூழலை உருவாக்க முடியும். ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத் திட்டங்களினால் அதனை நிறைவேற்ற முடியும். ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியால் இலங்கை வெற்றி பெறும். அதற்காக மத்திய கொழும்பின் சக்தியை சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் சட்டத்தரணி நவின் திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, பிரேமநாத் .சி. தொலவத்த, முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல, கொழும்பு  மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சர்வமதத் தலைவர்கள், பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அமைச்சர் டிரான் அலஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன, ஏ.எச்.எம். பௌசி,  மாகாண, பிரதேச அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Read more