நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும்!

• இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன்.

• ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று அன்று கூறியது பொருளாதார சவாலை எதிர்கொள்ளவே: இன்று ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று கூறுவது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக.

• நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மக்களுக்கு உள்ளது.

• சஜித்துக்கும் அநுரவுக்கும் நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் இருந்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏன் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை?

• நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என பகிரங்கமாக கூறியது சஜித்துடன் இருக்கும் குழுவே - மாத்தறையில் ஜனாதிபதி தெரிவிப்பு.

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச இறையாண்மை பிணைமுறிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளது.

அந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கையின் வங்குரோத்துநிலை முற்றாக முடிவுக்கு வந்து, மீண்டும் அனைத்து நாடுகளின் ஆதரவையும் எமது நாடு பெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தம்மிடம் ஏதேனும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தால் அந்தப் பொறுப்பு, வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை, செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கூறினார்.

மாத்தறை உயன்வத்தை விளையாட்டரங்கில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று கூறி அன்று பொருளாதார சவாலுக்கு முகம் கொடுத்து அதில் வெற்றி பெற்றதாகக் கூறிய ஜனாதிபதி, இன்று ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்பது நாட்டை அபிவிருத்தி செய்வதாகும் என்றும், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய தலைவரைத் தெரிவு செய்வது மக்களின் பொறுப்பாகும் எனவும் வலியுறுத்தினார்.

சஜித்தும், அநுரவும் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் இருப்பதாகக் கூறினால், ஏன் அன்று நாட்டை பொறுப்பேற்கவில்லை என கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, தன்னிடம் சிறந்த அணி இருப்பதாக இன்று சஜித் கூறினாலும்,  அந்த அணிதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியவில்லை  என  பகிரங்கமாக கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது;

எங்களின் தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. செப்டெம்பர் 21ஆம் திகதி இந்நாட்டு மக்கள் தமது எதிர்காலம் குறித்துத் தீர்மானிக்க வேண்டும். நான் ஒரு அரசியல்வாதியாக வாழ்க்கையை எதிர்கொண்டேன். குடிமக்களாகிய நீங்கள் அரசியல்வாதிகளை நம்பினீர்கள். கடந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. நீங்கள் நம்பிய தலைவர்கள் இந்நாட்டின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கத் தவறி, தங்கள் பொறுப்புகளில் இருந்து ஓடிவிட்டனர்.

அரசியல்வாதிகளாக நாம் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மகிழ்ச்சியும் சோகமும் உண்டு. எமக்கு நல்லதும் கூறுகிறார்கள், கெட்டதும் கூறுகிறார்கள். நாம் பிரபலமாகினோம். அதேபோன்று, நம் பெயர் மறந்தும்விடும். அரசியல் செயல்பாட்டின் மூலம் இலாபம் அல்லது இழப்பும் ஏற்படும், அதேபோன்று  முடிவுகள் எடுக்க வேண்டியேற்படும்.

மக்கள் என்னை நிராகரித்த போதும், என்னால் மக்களை நிராகரிக்க முடியாது என்று முடிவு செய்தேன். நாட்டின் தலைவர் என்ற முறையில் மக்களை நிராகரிக்காமல் மக்களுக்கான சவாலை ஏற்றுக்கொண்டேன். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட கப்பலில் ஓட்டைகள் இருந்தன. டைட்டானிக் கப்பல் போல் மூழ்கியிருக்கலாம். கப்பலுக்குள் தண்ணீர் புகுந்தது. கேப்டன் இல்லை. ஆனால் நாங்கள் கப்பலை எடுத்துக்கொண்டு மற்றவர்களுடன் சேர்ந்து பயணத்தைத் தொடங்கினோம்.

கடனை அடைக்க முடியாத நாட்டை நான் பொறுப்பேற்றேன். வங்குரோத்தான நாடு, அந்நியச் செலாவணி இல்லாத நாடு. எங்கள் பிணைமுறிப் பத்திரதாரர்கள் எங்களை நிராகரித்தனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் அந்தச் செயற்பாடுகளை நிறைவுசெய்து எமது கடன் நிலைபேற்றுத் தன்மையையும் வங்குரோத்து நிலையையும் நீக்குவதன் மூலம் அபிவிருத்தியடைவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அதற்காக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, வங்குரோத்து நிலையை முடிவுக்குக் கொண்டுவந்து முன்னேறுவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது.

மேலும் எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளும் உள்ளன. அந்த 18 நாடுகளுடன் ஒரு ஒப்பந்தமும், சீனாவுடன் தனி ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டது.

எங்களின் கடன் நிலைபேற்றுத் தன்மையை அங்கீகரிப்பதற்காக ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதற்கும், நாங்கள் வங்குரோத்தானவர்கள் அல்ல என்பதை ஏற்றுக்கொண்டு, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் ஒரு உடன்படிக்கைக்கு வர முடிந்தது.

எஞ்சியிருப்பது சர்வதேச இறையாண்மை பிணைமுறிப் பத்திரதாரர்களுடனான பேச்சுவார்த்தை.

அதன்படி நாளை அவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம் எட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த பின்னர் இலங்கையின் வங்குரோத்து நிலை ஒழிக்கப்பட்டு அந்த நாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளோம். என்னிடம்   ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை, அந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம் என்பதை செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்,  என்னால் அறிவிக்க முடிந்ததில்  மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தத் திட்டத்தில், நாங்கள் கடினமான, பிரபலமற்ற முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் மாற்று  வழியில்லை. மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அந்த பிரச்சினைகளைத் தீர்க்க நான் உழைத்தேன். இன்று ரூபாயின் மதிப்பு வலுப்பெற்று பொருட்களின் விலைகள் படிப்படியாகக் குறைந்து மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. மேலும், 2025 இல் வாழ்க்கைச் சுமை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்க்கிறேன்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாக இன்று சஜித்தும் அனுரவும் கூறுகின்றனர். அந்த ஒப்பந்தங்களை இரத்து செய்து நாட்டை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டுமா என்று கேட்கிறேன்.

சஜித்துக்கும் அனுரவுக்கும் எந்த திட்டமும் இல்லை. அவர்களுக்கு வேண்டியது அதிகாரம் மட்டுமே. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அது இலகுவான விடயமல்ல. அப்போது இலங்கை மீதான நம்பிக்கை இழக்கப்பட்டு மீண்டும் வரிசை யுகத்தை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் எம்முடன் பயணித்தால் ரூபாயை பலப்படுத்தி வாழ்க்கைச் சுமையை இலகுவாக்கி நாட்டை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும். எனவே தெரிந்த வீதியில் செல்வதா அல்லது தெரியாத வீதியில் சென்று தொலைந்து போவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

சஜித்துக்கும் அநுரவுக்கும் தீர்வுகள் இருந்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏன் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை என நான் கேட்கின்றேன்.

நாட்டின் பொறுப்பை ஏற்க முடியாமல் வெளியேறியவர்களிடம் இந்த நாடு மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டுமா? எனவே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய தலைவரை தெரிவு செய்யும் பொறுப்பு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் கிரிக்கெட் அணி போன்ற அணிகள் தெரிவு செய்யப்படாது. பாராளுமன்ற தேர்தல் மூலம் ஆட்சியமைக்கும் குழு  தேர்ந்தெடுக்கப்படுகிறது.

சிலர் தன்னிடம் சிறந்த அணி இருப்பதாகக் கூறுகிறார்கள். அப்படியானால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அந்த அணி ஏன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவில்லை என நான் கேட்கின்றேன். நாட்டைப் பொறுப்பேற்க வேண்டாம் என்று கூறியது அதே குழுதான் என்பதை இங்கு நினைவு கூர்கிறேன். எனவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்.

இளைஞர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். அந்தப் புதிய பயணத்தை மேற்கொள்ள மக்கள் ஆணையை வேண்டுகிறேன். நாளை தனியார் பிணைமுறிதாரர்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டு 22ஆம் திகதி முதல் புதிய பயணத்தை மேற்கொள்ளத் தயாராகவுள்ளோம்.

வாழ்க்கைச் சுமையைக் குறைத்து, வேலை வாய்ப்பை அளித்து, புதிய பொருளாதாரத்தை உருவாக்கி, அந்நியச் செலாவணியை பிச்சை கேட்காமல் நமது நாட்டைப் பெருமைமிக்க நாடாக முன்னெடுத்துச் செல்ல, செப்டம்பர் 21ஆம் தேதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தென் மாகாண  ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,

பதில் ஜனாதிபதியாக  ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்கும்போது இந்த நாடு எவ்வாறு இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். முழு நாடும் அராஜக நிலையில் காணப்பட்டது. நாம் எங்கே இருந்தோம் என்று சிந்தித்துப் பாருங்கள். சஜித், அநுரவுக்கு ஆட்சியைப் பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்தபோதும் யாரும் முன்வரவில்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே முன்வந்தார். அவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.  

எமது நாடு அதுவரை காணாத ஒரு வித்தியாசமான நிலையில் இருந்தது. எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இரண்டு வருடங்களில் நாம் அந்த நிலையை மாற்றினோம்.  அவர் இந்த இரண்டு வருடங்களில் செய்த சாதனையை நாம், இந்த இரண்டு நாட்களில் நினைவூட்ட வேண்டும். நாம் வெற்றியின் அருகில் இருக்கின்றோம். அது நிச்சயமானது என்பது மாத்தறை மாவட்ட மக்களுடன் கதைக்கும்போது தெளிவாகிறது.

ஒருபோதும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என வேட்புமனு தாக்கல் செய்ய ஒரு சில தினங்களுக்கு முன்னர் தயாசிறி ஜயசேகர கூறினார். தோல்வியுறும் தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் என்று தெரிவித்தார். அவர் வெற்றிபெறுவார் என்றால் மாத்திரமே போட்டியிடுவார் என்றும் கூறினார். ஆம் அவர் வெற்றி பெறுவார் என்பதனால்தான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார். இரண்டு வருடங்களில் நாட்டைக் கட்டியெழுப்பிய எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார், அது உறுதியானது.

அன்று முடியாது என்று ஓடியவர்கள் இன்று தேர்தலுக்கு வந்துள்ளனர். இன்று பொருட்களின் விலைகள், மின் கட்டணம், நீர் கட்டணம் போன்றவை குறைந்து வருகின்றன. ஆகவே எமக்கு வேறு ஒரு தலைவர் தேவையில்லை. எமது நாட்டைக் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 5 வருடங்களில் மேலும் முன்னேற்றம் அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர,

இன்று வெற்றிபெறும் வேட்பாளராக முன்னணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருக்கின்றார். அரசுக்கு உரிமையுள்ள காணிகளின் உரிமையை அனுமதிப்பத்திரம் மூலம் அனுபவித்து வரும் மக்களுக்கு வழங்கும் ‘உறுமய’ வேலைத்திட்டத்தை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தி வருகின்றார். இதன் மூலம் 20 இலட்சம் பேர் பயனடைகிறார்கள். இந்தப் பிரதேசத்தில் உள்ள வெள்ள அனர்த்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நான் சுதந்திரக் கட்சியை பிரதிநிநிதித்துவப்படுத்துகிறேன். நாம் கடந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்தோம். அன்று புதிய ஒருவர் வந்தால் நாட்டைக் கட்டியெழுப்புவார் என்று கூறப்பட்டது. நாடு நல்ல நிலைக்குச் செல்லும் என்றார்கள். அன்று இளைஞர்கள் மதில்களில் சித்திரம் வரைந்தார்கள். ஆனால் இறுதியில் முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை துரத்தினார்கள். அவர் கப்பலில் ஏறிச் சென்றார். அனைவரும் முடியாது என்று ஓடியபோது ரணில் விக்ரமசிங்க மாத்திரமே முடியும் என்று இந்த நாட்டை பொறுப்பேற்று எமது நாட்டைப் பாதுகாத்தார்.

அன்று எமக்குக் கடன் வழங்கிய பங்களாதேஷ், இன்று வங்குரோத்தாகியுள்ளது. எம்மை விட மிக மோசமான நிலைக்கு அந்த நாடு சென்றுள்ளது. ஆனால் அந்த நிலைக்கு எமது நாடு செல்லாமல் பாதுகாத்தது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அன்று உரம் இல்லாதபோதே அவர் நாட்டைப் பொறுப்பேற்றார்.  இன்று  உர மானியத்தை அதிகரித்துள்ளார். இது இலகுவாக செய்த விடயமல்ல. இன்று அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியைக் கேட்கிறார்கள். நான் வங்குரோத்தான நாட்டின் விவசாய அமைச்சர்.

அந்த நிலைமையிலேயே  நாம் மக்களுக்கு மானியங்கள் வழங்குகிறோம். ஆனால்  அநுர குமார திசாநாயக்க அன்று பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தபோது நாட்டின் விவசாய அமைச்சர். பத்தாயிரம் குளங்கள் நிர்மாணிக்கப்படும் என்றார். இன்று வெட்டிய ஒரு குளத்தையேனும் காணவில்லை. அவர்கள் வெற்றுப் பேச்சாளர்களே.

அமைச்சர் காஞ்சன விஜேசேகர,

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டபோது இந்த இடத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் நடைபெற்றது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் நடைபெற்றது. இந்த மைதானத்தில் பாதியை கூட நிரப்புவதற்கு இரு குழுக்களிடமும் மக்கள் இல்லை. இன்றைய பேரணிக்கு மாத்தறை மாவட்டத்திற்கு வெளியில் இருந்து எவரும் அழைத்து வரப்படவில்லை. இன்று, கடினமான வெயிலில், ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்த 5 வருடங்களை வழங்குவதற்கு இந்த மக்கள் அர்ப்பணிப்புகளை செய்கிறார்கள். அன்று 13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மருந்து, உரம், எரிபொருள், உணவு இன்றி மக்கள் நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருந்தனர். கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு 69 இலட்சம் வாக்குகள் வழங்கி வரிசையில் நிற்கும் எங்கள் மக்களைப் பார்த்து நாமும் வருத்தப்பட்டோம்.

அப்போது நமது தலைவர்களால் நேரடியாக முடிவெடுக்க முடியவில்லை. மக்களின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் சில அரசியல் தலைவர்கள் வெளியேறினர். இந்த நாட்டை மீட்க முடியாது என்று சிலர் நினைத்தனர். 149 முன்னாள் ஆளும் கட்சி எம்.பி.க்கள் குழு எதிர்க்கட்சியில் அமர்ந்தனர். இந்த மக்கள் அனைவருக்கும்  நம்பிக்கை உடைந்தது. கோட்டாபய ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர்களை நாட்டைப் பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்தார். அந்தப் பொறுப்பை ஏற்க ஒரு தலைவர் இருக்கவில்லை.

மக்களின் அதிருப்தியால் தமது அரசியல் எதிர்காலம் பறிபோகும் என நினைத்து நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை பொறுப்பேற்று இரண்டாண்டுகளுக்குள் பொருளாதாரத்தை கட்டியெழுப்பப் பாடுபட்டார். அந்த இரண்டு வருடங்களில், ரணில் விக்ரமசிங்க அவர்கள் பொருளாதார சீர்திருத்த முடிவுகளை எடுக்கும்போது அவைகள் பிரபலமா இல்லையா என்று பார்க்கவில்லை. அதன் மூலம் பணவீக்கம் குறைந்துள்ளது. மின்வெட்டு இல்லாமல் மின்சாரத்தை வழங்க முடிந்தது. மின் கட்டணமும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டத்தில் உள்ள 196 உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளில் 170 பேர் ஜனாதிபதியுடன் உள்ளனர். எனவே மாத்தறை மாவட்டத்தில் ஜனாதிபதியின் வெற்றி உறுதியானது.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க,

போராட்டக் காலத்தில் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்க கூடாது என அச்சுறுத்துவதற்காக அவரின் வீட்டை எரித்தனர். அவர் எதனையும் பொறுட்படுத்தாது பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். ஒரு சில மணித்தியாலங்களிலேயே இந்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினார். வரிசை யுகத்தை ஒழித்தார். அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்ள பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டார். சர்வதேச நாணய நிதியம் உட்பட உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.

அதன் மூலம் அவர்களின் ஆதரவு கிடைத்தது. மேலும் நாட்டில் முகாமைத்துவத்தை மேற்கொள்ள அவசியமான மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டார். இந்த குறுகிய காலத்தில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். மத்திய வங்கியை சுயாதீனமாக செயற்பட அவசியமான நடவடிக்கைகள் உட்பட பல்வேறு நிர்வாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார். நாம் சர்வதேச அளவில் உருவாக்கிய நம்பிக்கை இல்லாமல் போனால் நாம் மீண்டும் வீழ்வோம். நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியுற்றால் அன்று இருந்த நிலைமைக்கு இந்த நாடு மீண்டும் செல்லும். எனவே அனுபவம் மிக்க எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறச் செய்வோம்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  தலதா அத்துகோரல,

இந்த மக்கள் வெள்ளத்தை பார்க்கும்போது மக்களின் உயிர்களை காத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி மாபெரும் வெற்றியாக அமையும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரம் தொடர்பில் எடுத்துவரும் சரியான நடவடிக்கையின் காரணமாகவே நான் பாராளுமன்ற ஆசனத்தை மீளக் கொடுத்துவிட்டேன். சஜித் பிரேமதாசவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் உள்ள வித்தியாசம் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான தூரம் போன்றது. ஜனாதிபதியின் வாழ்க்கை மிகவும் எளிமையானது. அவருக்கு குழந்தைகள் இல்லாவிட்டாலும், அவர் குழந்தைகளை மிகவும் நேசிக்கிறார்.

இந்நாட்டில் அதிகளவான சிறுவர் இல்லங்களுக்கு பொறுப்பான அரசியல்வாதி என்றால் அது ரணில் விக்ரமசிங்க மற்றும் திருமதி மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரே. சர்வதேச நாணய நிதியம் ரணிலுக்கு கடன் வழங்காது என எதிர்கட்சியினர் தெரிவித்தனர். அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பார் என்றும்  தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் நடந்தாலும் அதில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடப் போவதில்லை என  தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் தனது அடுத்த 5 வருடங்களின் முடிவில் இந்நாட்டு மக்கள் நலமுடன் வாழ்வதற்கான நல்ல சூழலை உருவாக்குவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

Read more