கடந்த காலத்தை மறவாதீர் : உங்கள் எதிர்காலத்திற்கான பயணத்தில் இணைந்துகொள்ளுங்கள்!

• சஜித்துக்கும் நாமலுக்கும் அளிக்கப்படும் வாக்குகள் தட்டில் வைத்து அநுரவுக்கு அளிக்கப்படும் வாக்குகளாக அமையும்!

• பியகமவை அபிவிருத்தி செய்த பாணியில் நாட்டையும் அபிவிருத்தி செய்வேன் - தெல்கொட மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு.

2022ஆம் ஆண்டில் தங்கள் எதிர்கொண்ட துன்பங்களை மறவாது, சரியான தீர்மானத்தை எடுத்து தமது எதிர்காலத்திற்கான பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடுன், ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளையில் தானே அவரையும் ஐக்கிய தேசிய கட்சியையும் பாதுகாத்து முன்னோக்கி கொண்டுச் சென்றதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மயிரிழையில் உயிர்தப்ப தானே காரணமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தெல்கொட பிரதேசத்தில் இன்று (17) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனது அரசியலை ஆரம்பித்த பியகமவில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தி குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதன் பலன்களை இன்று அரசியல்வாதிகள் மட்டுமன்றி அனைவரும் அனுபவிக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

பியகமவை அபிவிருத்தி செய்த பாணியிலேயே நாடு முழுவதும் வர்த்தக வலயங்களை ஆரம்பித்து முழு நாட்டையும் அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதே தனது நோக்கமென ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, தனக்கென இருந்த ஒரே வீடு தீயில் எரிந்ததைக் கூட பொருட்படுத்தாமல் நாட்டு மக்களின் துயரத்தீயை அணைக்க ரணில் விக்ரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றதாக முன்னாள் அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ருவன் விஜேவர்தன:

''பியகமவிலிருந்து அரசியலுக்கு பிரவேசித்த ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவிற்கு வீடு வீடாக சென்று ஆதரவு வழங்கியவர்களும் இங்கு உள்ளனர். அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பியகமவிற்கு பெரும் சேவைகளை ஆற்றியிருக்கிறார்.  

பியகம சுதந்திர வர்த்தக வலயம் அவரின் திட்டமாகும்.  அதேபோல் பியகமவில் சர்வதேச தரத்திலான வைத்திசாலையொன்றை அமைப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார். எவ்வாறாயினும், மக்கள் சேவை செய்வதற்கு அவருக்கு பதவி அவசியமும் இல்லை.

தனக்கென இருந்த ஒரே வீடு தீயில் எரிந்ததை பொருட்படுத்தாமல் நாட்டு மக்களின் துயரத்தீயை அணைக்க முன்வந்தார். எதிர்க்கட்சிகளுக்கு நாடு குறித்து தெளிவான பார்வை இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் 2022 ஆம் ஆண்டில் அவர்கள் நாட்டை பொறுப்பெடுத்திருப்பார்கள். மக்களுக்குகாக எதையும் செய்ய முடியாது என்பதாலேயே அவர்கள் பின்வாங்கினர். எவ்வித வேலைத்திட்டமும் இல்லாதவர்களிடம் தற்போது நாட்டை ஒப்படைக்கும் அளவிற்கு நாட்டு மக்கள் தௌிவற்றவர்கள் அல்ல." என்று அவர் தெரிவித்தார்.

மகா சங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, பிரதேச அரசியல் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

Read more