பொருளாதார நெருக்கடியில் மக்களை கைவிட்டு ஓடிய சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

• மக்கள் வாழக்கூடிய நாட்டை நான் உருவாக்கியுள்ளேன்.

•  'சான்ஸ்' (வாய்ப்பு) கேட்கும் அரசியல்வாதிகளிடம் உங்கள் எதிர்காலத்தை ஒப்படைக்கும் சந்தர்ப்பமல்ல இது.

• பொருளாதாரப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றிய எனது கேள்விகளுக்கு அநுர பதிலளிக்க வேண்டும்.

•  நாட்டை வெற்றிபெறச் செய்வதற்கு செப்டம்பர் 21 இல் கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள்-  கேகாலை வெற்றி பேரணியில் ஜனாதிபதி தெரிவிப்பு.

அரசியல் மேடைகளில் நீலிக் கண்ணீர் வடிக்காமல், கடந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் வரிசையில் கஷ்டப்பட்ட போது அதனைக் கண்டுகொள்ளாமல் ஓடியதற்காக சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கேகாலையில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதிக்கு  மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர்.

பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து, மக்கள் வாழக்கூடிய நாட்டை தானே உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மக்களின் எதிர்காலத்தை 'சான்ஸ்' ஒன்று வழங்குமாறு கோரும் அரசியல்வாதிகளுக்கு வழங்கும் சந்தர்ப்பம் இதுவல்ல என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கஷ்டப்பட்டு காப்பாற்றப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு  செப்டெம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

''ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி வாரத்தில் நாம் இப்போது இருக்கிறோம். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அன்று மக்கள் கஷ்டப்பட்ட போது இவர்களில் யாரும் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு இன்றி மக்கள் படும் துன்பத்தையும், மாணவர்களை பாடசாலை அனுப்ப முடியாமல் தவித்ததையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் வந்து நீலிக் கண்ணீர் வடித்தாலும் அன்று ஒளிந்து கொண்டனர். நாடு கஷ்டத்தில் இருக்கும் போது மக்களை கைவிட்ட சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் அளித்து வாழ்வதற்கான நம்பிக்கையை நான் ஏற்படுத்தினேன். இன்று நாட்டின் பொருளாதாரம் ஸ்தீரமடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைச் சுமையை படிப்படியாக குறைத்து வருகிறோம். அதற்காக கடந்த  தடவை நிவாரணம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினோம்.

உர நிவாரணம்  வழங்கப்பட்டது. ஓய்வூதியம் மற்றும் முதியோர் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டது. ஒரு பக்கம் பொருட்களின் விலையைக் குறைக்கும் அதேவேளை, மறுபுறம் பணத்தைக் கொடுத்து மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் பணியை செய்து வருகிறோம். அடுத்த ஆண்டுக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமை குறையும்.

நான் மேடையில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் நபரல்ல. பொறுப்பை நிறைவேற்றிய பின்னர் அதனை மக்களுக்கு அறிவிக்கிறேன். எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் தொடர்பில் யாருக்காவது 'சான்ஸ்' கொடுப்பதா அல்லது  நிரந்தர எதிர்காலத்திற்கு செல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். எங்களுக்கு ஒரு 'சான்ஸ்' கொடுங்கள் என்று திசைகாட்டி கோருகிறது.

அவர்களின் பட்ஜெட்  ஊடாக அனைத்து IMF நிபந்தனைகளும் மீறப்படுகிறது. நிபந்தனைகளை உடைத்து, IMF ஆதரவை இழந்த பிறகு, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சரிவடையும். அதேபோல்,  பொருளாதாரப் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்று நான் கேட்ட கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்க வேண்டும்.

அவர்களிடம் திட்டம் எதுவும் இல்லாததால் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை. திட்டுவதை மட்டுமே செய்கின்றனர்.  ஆனால் மக்களின் கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியும். எனவே மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தாமல் உண்மையைப் பேசுமாறு சஜித்திடமும்  அநுரவிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

முன்னோக்கி செல்லும் பாதையை நாம் காட்டியுள்ளோம். அந்த பாதையில் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டை வெற்றிபெற செய்ய அனைவரும் செப்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் அலி சப்ரி:

''ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  நாட்டை பொறுப்பேற்ற போது அவரின் வீட்டிற்கு தீவைத்தனர். ஜனாதிபதி மாளிகையையும் ஜனாதிபதி செயலகத்தையும் கைப்பற்றினர். ஆனால் அவர் அச்சப்படவில்லை. மாற்றம் என்பது சட்டியிலிருந்து அடுப்பில் விழுவதல்ல. இருக்கும் நிலையை விட உயர் நிலைக்கு வருவதில் தான் மாற்றம் இருக்கிறது. நோயை குணப்படுத்தியவரை திரும்பிச் செல்லுமாறு கூறும் எதிரணிக்கு மக்கள் நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் பெருந்திரளான மக்கள் மட்டுமன்றி மலையக மக்களும் ஜனாதிபதி வெல்லவைக்கத் தயாராக உள்ளனர். ரிசாதும், ஹக்கீமும் மறுபக்கத்தை ஆதரித்தாலும் பெருந்திரளான முஸ்லிம் மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக உள்ளனர்.

76 வருடங்களாக என்ன செய்தீர்கள் என திசைகாட்டியினர் கேட்கின்றனர். தம்புத்தேகம விவசாயின் மகனாகப் பிறந்த அநுர குமார, ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு 76 வருட சாபம் தான் காரணம்.  சாதாரண தரம் மற்றும் உயர்தரம் கற்று பல்கலைக் கழகம் சென்று கற்பதற்கு புலமைப் பரிசிலும் வழங்கி தொழிலும், பெற்றுக் கொடுப்பது எமது நாட்டில் மாத்திரம் தான். 71 ஆம் ஆண்டுபோராட்டமும் 88 - 89 வன்முறையும் செய்யாதிருந்தால் அதனைவிட சிறப்பான இடத்திற்கு சென்றிருக்கலாம். பரீட்சார்த்தம் செய்து பார்த்து இருண்ட யுகத்திற்குச் செல்ல முடியாது.

மாற்றம் வேண்டும் என இருக்கும் ஆட்சியைத் துரத்தி, கிரீஸில் புதிய அரசு ஆட்சிக்கு வந்தது. ஐஎம்.எப்பை துரத்தினர். 13 வீதமாக இருந்த வரி 23 வீதமாக வரி உயர்த்தப்பட்டது. 13 வருடங்கள் துன்பப்பட நேரிட்டது. 5 வருடங்கள் பாதி சம்பளம் தான் வழங்கப்பட்டது. நமது நாட்டிலும் டொலர் 400 ரூபாவாக உயர்ந்து, உரத் தட்டுப்பாடு ஏற்படும் மாற்றத்தையா விரும்புகிறீர்களா?'' என்றார்.

சப்ரகமுவ ஆளுநர் நவீன் திசாநாயக்க:

''அனைத்து கட்சிகளும் இணைந்திருப்பது பெரும் பலமாகும். இவ்வாறான மேடை சஜித்திற்கோ அநுரவுக்கோ கிடையாது. இவ்வாறான ஒற்றுமையான அணியை ரணில் விக்ரமசிங்க தான் ஏற்படுத்தினார். உங்கள் தலைவரைத் தெரிவு செய்யும் இந்தத் தேர்தலில் சரியாக முடிவெடுக்க வேண்டும்.  எந்தக் கட்சியை வெல்ல வைப்பதற்கும் நாம் அணிதிரளவில்லை. நாட்டின் எதிர்காலமே பிரதானமானது. அதற்காகவே ஒன்று சேர்ந்துள்ளோம். கடந்த அனைத்து தேர்தல்களிலும் இரு அணிகளே இருந்தன. இம்முறை முத்தரப்பு போட்டியுள்ளது. முத்தரப்பு போட்டியிருப்பது ரணில் விக்ரமசிங்கவுக்கு தான் சாதகமானது. முத்தரப்பு போட்டியால் எதிரணி வாக்குகள் தான் சிதறும்" என்றார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய:

'அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளது. கட்டம் கட்டமாக  கடந்த இரண்டு வருடங்களில் அனைத்தையும் ஜனாதிபதி சீர்செய்துள்ளார். ஏனையவர்கள் முன்கூட்டியே பிரசாரத்தை ஆரம்பித்தனர். நீங்கள் நாட்டிற்கு சேவையாற்றுவதில் நேரத்தை ஒதுக்கினீர்கள். ஆரம்பத்தில் ஏனைய தரப்பு ஆரவாரமாக பிரசாரம் செய்தன. நாம் இன்று முன்னணியில் இருக்கிறோம்" என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஜிகா விக்ரமசிங்க:

'நன்றி மறவாத மனிதர்கள் என்ற வகையில் நாம் சுதந்திரமாக வாழும் சூழலை ஜனாதிபதி பெற்றுத் தந்தார். எனவே, அனைவரும் இணைந்து அவரின் வெற்றியை பெருவெற்றியாக மாற்றுவோம்" என்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள:

''இயலும் என நாட்டை பெறுப்பேற்ற ஜனாதிபதியை வெல்ல வைக்க மக்கள் இன்று திரண்டுள்ளனர். தனியாக பாராளுமன்றம் வந்த ரணில் விக்ரமசிங்க தான் உங்களை காப்பாற்றினார். ஜனாதிபதியுடன் மிகவும் நெருக்கமான என்னுடைய நண்பர் ஒருவர் இந்தப் பிரதேசத்தில் இருக்கிறார். ஜனாதிபதியுடன் அனைத்து விடயங்கள் பற்றியும் பகிர்வார். அவருடன் இணைந்து பல்வேறு விடயங்களைத் திட்டமிடுவார். பொருளாதாரச் செயற்பாடுகளுக்கு உதவி வழங்குவார். சிறந்த மூளைசாலியான கபீர் ஹசீமிற்கு தனியாக முடிவெடுக்க முதுகெழும்பில்லை. என்ன செய்யலாம் என இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்.  அவரைப் போல நான் யாருடனும் பேசி முடிவு எடுக்கவில்லை. எனது மக்கள் எனக்கு வாக்களித்து தெரிவு செய்த எம்.பி பதவியை திருப்பிக் கொடுத்து விட்டு வெளியில் வந்திருக்கிறேன். மக்கள் வாழும் உரிமையை உறுதி செய்யும் இறுதித் தேர்தல் இது. 50 வீத பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்த்துள்ளார். எஞ்சியவற்றை எதிர்வரும் 5 வருடங்களில் அவர் நிறைவேற்ற வேண்டும். IMF ரணிலுக்கு பணம் வழங்க மாட்டார்கள் என்றனர். தவணைத் தொகை கிடைக்காது என்றனர். அவர் தேர்தலில்  போட்டியிட மாட்டார் என்றனர். எதிரணி கூறிவந்த அனைத்தும்  பொய்யாகியுள்ளன" என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதயகாந்த குணதிலக:

''கடந்த 2 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையை கேகாலை மக்கள் மறக்கவில்லை. கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து ஜனாதிபதியை மீளத் தெரிவு செய்ய வேண்டும்" என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால:

''ஹிரு தொலைக்காட்சியில் மாத்திரம் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகியுள்ளார். அநுர முகநூலில் மாத்திரமே ஜனாதிபதியாகியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற வைப்பதற்காக பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி, ஐ.தேக, இ.தோ.க என அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன" என்றார்.

இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்:

''ஏனைய கட்சிகள் வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை திரட்டி கேகாலையில் கூட்டம் நடத்தின. ஆனால் கேகாலை மாவட்ட மக்கள் மாத்திரமே  இன்றைய எமது கூட்டத்தில் திரண்டுள்ளனர். இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் 4.7 வீதமாக வளர்ந்திருப்பதாக புலும்பேர்க் தெரிவித்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்கள்  கூட ஜனாதிபதி குறித்து நம்பிக்கை வைத்துள்ளன. வரிசை யுகம் மீண்டும் வராது என மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை அவர்  பலப்படுத்தியுள்ளார். 22 ஆம் திகதி காலை ரணில் விக்ரமசிங்க தான் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாவார்.

எமது அமைச்சர்கள் வாகன பேர்மிட் எடுத்துள்ளதாக அநுர குமார இங்கு நடந்த கூட்டத்தில் தெரிவித்தார். முடிந்தால் அந்த கோப்புகளை தேர்தலுக்கு முன்னர் வெளியிடுமாறு சவால் விடுகிறேன். 400 கோப்புகள் இருப்பதாக ஒவ்வொரு நாளும் பொய் கூறி வருகிறார். அதனை அவர் ஒருநாளும் வெளியிட்டது கிடையாது. அந்த கோப்புகள் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி கூறுகிறார். ஜனாதிபதி செயலகத்திற்கு வந்தால் அவற்றை பார்க்கலாம் என்றும் ஜனாதிபதி சொல்கிறார்" என்று தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய:

''தோட்ட மக்களும் வடக்கு கிழக்கில் வாழும் மக்களும் ஜனாதிபதியின் வெற்றிக்கு பங்களிக்க தயாராக உள்ளனர். இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ் டிப்போ, மக்கள் வங்கி அலுவலகம், பிரதேச செயலகம் என்பவற்றை தேர்தலுக்கு முன்னர் திறக்க இருந்தோம். ஜனாதிபதியே அவற்றை நிர்மாணிக்க நிதி வழங்கினார். கேகாலை அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டன. ஜனாதிபதியின் வெற்றிக்கு எமது மக்கள் பங்களிக்கத் தயாராக உள்ளனர். கேகாலை மாவட்டத்தில் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி மாத்திரமே வென்றுள்ளனர்" என்றார்.

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலரும்  இங்கு உரையாற்றினார்கள்.

மகாசங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்க, சப்ரகமுவ மாகாண முன்னாள் உறுப்பினர் ஆனந்த மில்லங்கொட மற்றும் பிரதேச அரசியல் தலைவர்கள் என பெருந்திரளான மக்கள் இந்தப் பொதுக் கூட்டத்தில்  கலந்துகொண்டனர்.

Read more