'இயலும் ஸ்ரீலங்கா' தேசிய வேலைத் திட்டத்திற்கு நாட்டின் பெரும்பாலான மக்களின் ஆதரவு!

• நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கப்படும். மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்படும்.

• கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை சிலாபம் வரை விரிவுபடுத்தப்படும்.

• விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் சிலாபம் தெங்கு மேம்பாட்டுக்கு நடவடிக்கைகள்.

• மாதம்பேவில்  பொருளாதார வலயம் உருவாக்கப்படும்: சிலாபம்  துறைமுகம் பிரதான துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும்.

• சஜித்தும் அனுரவும் அரசியல் மேடைகளில் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்குகிறார்கள் - சிலாபத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு.

'இயலும் ஸ்ரீலங்கா' என்ற 5 வருட தேசிய வேலைத்திட்டத்திற்கு இன்று நாட்டின் சகல பிரதேசங்களிலும் மக்களின் ஆதரவு கிடைத்திருப்பதாகவும், அந்த வேலைத்திட்டம் வலுவாக அமுல்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் வகையில் செயற்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

சிலாபத்தில் இன்று (01) பிற்பகல் இடம்பெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் சிலாபம் தெங்கு செய்கையை அபிவிருத்தி செய்யவும் மாதம்பே பொருளாதார வலயத்தை உருவாக்கவும் சிலாபம்  துறைமுகத்தை பிரதான துறைமுகமாக அபிவிருத்தி செய்யவும்  இந்த அனைத்து பொருளாதாரங்களையும் அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,

''ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தும் முதற் தடவையாகவே எதிர்கட்சித் தலைவர் ஒருவர் அதனை நிராகரித்தார். இது கின்னஸ் சாதனையாகும். போராட்டத்தின் போது பாராளுமன்றத்தைக் கைப்பற்ற ஆர்ப்பாட்டக்காரக்கள் முயன்ற போது அங்கிருந்த அனைவரும் வெளியேறினார்கள். இன்று தலைமைத்துவம் கோரும் அனைவரும் பயந்து ஓடினார்கள்.

நான் நிலைமையை கட்டுப்படுத்தியிருக்காவிட்டால் பங்களாதேஷத்தைப் போன்று எம்.பிகள் கொல்லப்படும் நிலை ஏற்பட்டிருக்கும்.  பிரதமர் பதவியை ஏற்று  என்னுடன் இணைந்து பணியாற்ற வருமாறு சஜித்திற்கு நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் டளஸை போட்டிக்கு நிறுத்தி அந்த வாய்ப்பையும் சஜித் ஏற்கவில்லை. என்னை ரணில் ராஜபக்‌ஷ என்று விமர்சித்தார்கள். இன்று அவர்கள் விலகிச் சென்றுள்ளனர்.

பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன. மொத்தத் தேசிய உற்பத்தியை அதிகரித்துள்ளோம். உலக நாடுகளினதும் அமைப்புகளினதும் ஆதரவு கிடைத்தது. பொருளாதாரத்தை முன்னேற்ற முடிந்துள்ளது. அரச ஊழியர்களின் சம்பளத்தைப் போன்றே ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவும் அதிகரிக்கப்படுகிறது.

பங்களாதேஷில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டும் தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது. எம்.பிகள் கொல்லப்பட்டுள்ளனர். சபாநாயகரை காணவில்லை. பிரதம நீதியரசர் துரத்தப்பட்டுள்ளார். ஆனால் நாம் நிலைமையை சீராக்கி தேர்தல் நடத்துகிறோம். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சியாலே அதனை செய்ய முடிந்தது.

மக்கள் ஆணையைப் பெற்று நாம் ஆரம்பித்த திட்டங்களை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறேன். மக்களுக்கு வாழ்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பொருளாதாரம் எனும் வீடு உடைந்தது. அதனை கட்டியெழுப்பி வருகிறோம். எனது 5 அம்சத் திட்டத்தை 5 வருட இக்காலத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கிறேன்.

மாதம்பே முதலீட்டு வலயத்தை உருவாக்க இருக்கிறோம். சிலாபம் துறைமுகத்தை பிரதான மீன்பிடித்துறைமுகமாக அபிவிருத்தி செய்வோம்.  மீனவர்களின் உற்பத்திகளை கட்டுநாயக்கவிற்கு அனுப்பலாம். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை  சிலாபத்துடன் இணைக்க இருக்கிறோம். கற்பிட்டியில்  துறைமுகம் ஒன்றை உருவாக்கவும் சுற்றுலா வலயம் ஒன்றையும் அமைக்க இருக்கிறோம்.  இரணவிலயிலும் சுற்றுலா வலயம் ஏற்படுத்தப்படும். சகல தரப்பினரதும் ஒத்துழைப்பைப் பெற்று இந்தத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

எமது அணியினர் பிரிந்து சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியினால் வெல்ல முடியாது. சஜித்திற்கு வழங்கும் வாக்கு அநுரவிற்கு வழங்கும் வாக்குகளைப் போன்றதாகும். எனவே ஐ.தேக. ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து வெற்றிக்காக செயற்பட வேண்டும்" எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த:

28 வருடங்களாக பாடசாலை செல்லாத தொழிற்சங்க தலைவர் ஒருவரை தொலைக்காட்சி விவாதமொன்றில் சந்தித்தேன். இவர்கள் தான் சிறந்த ஆசிரியர் சேவையை உருவாக்கப் போகிறார்கள். ஜே.வி.பியின் பொய்களுக்கு ஏமாறாதீர்கள். கிராமங்களில் சேவை செய்திருப்பதால் எமக்கு தைரியமாக சென்று வாக்கு கோர முடியும்" என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்:

இயற்கை தான் நாட்டை அவருக்கு கொடுத்தது. இயற்கையின் தீர்ப்பினால் தான் அவர் நாட்டை மீட்டார். இறைவன் எடுத்த முடிவை எம்மால் மாற்ற முடியுமா? இந்த முடிவுகள் யாவும் இயற்கையினால் எடுக்கப்பட்டவையாகும். ரணிலுக்கு முதுகெலும்பில்லை என அன்று சந்திரிகாவும் மஹிந்த ராஜபக்‌ஷவும் கூறினார்கள். ஆனால் அவர் தான் நாட்டை மீட்டார். அவருக்கு முதுகெலும்பு இருப்பதாலே வீழ்ச்சியடைந்த நாட்டை காப்பாற்றினார்"என்றார்.

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாந்து:

மக்கள் நன்றிக் கடனாக செலுத்தும் வாக்குகளினால் தான் நீங்கள் ஜனாதிபதியாக தெரிவாவீர்கள்.சிலர் முகநூலில் ஜனாதிபதியாகிறார்கள்.

2005 இல் புலிகள் வாக்களிக்க இடமளிக்காததால் நீங்கள் தோற்கடிக்கப்பட்டீர்கள். ஒரு காலமும் யுத்த வெற்றிக்கான கௌரவத்தை உங்களுக்கு வழங்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கும் சரத் பொன்சேக்காவுக்கும் அந்த கௌரவம் வழங்கப்பட்டது. கருணாவை பிரித்து புலிகள் இயக்கத்தை பிரித்தது நீங்கள் தான்.கல்விக்கு நீங்கள் பெரும் சேவையாற்றியுள்ளீர்கள்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை சிலாபம் வரை நீடிக்க வேண்டும் என எமது மக்கள் சார்பில் கோருகிறோம்.ஆம் அந்த கோரிக்கையை  நிறைவேற்றுவதாக ஜனாதிபதி இந்த மேடையில் வாக்குறுதியளித்துள்ளார்" என்றார்.

அமைச்சர் அலி சப்ரி:

ஜனாதிபதியின் வெற்றி  மக்களின் மனங்களில் உள்ள நன்றிக் கடனின் ஊடாகவே  முடிவாகிறது. ஒப்பந்தங்களினாலோ டீல்களினாலோ  அது முடிவாகாது. செப்டம்பர் 21 ஆம் திகதி தேர்தலில் ஜனாதிபதி வெற்றி பெறுவார். இல்லாவிடின் 6 மாதங்களின் பின்னர் ஜனாதிபதியாவார்.வேறொருவர் வென்றாலும் நாடு வீழ்ச்சியடைந்து அவருக்கு ஆட்சியை ஏற்க நேரிடும். பங்களாதேஷின் வெளிநாடுகளுடான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.ஏற்றுமதிப் பொருளாதாரம் வீழ்ந்துள்ளது. அத்தகைய நிலை எமக்கும் ஏற்பட வேண்டுமா?

நாம் அடைந்த முன்னேற்றத்தை தொடர வேண்டும்.2010 இல் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நன்றிக் கடன் செலுத்தியது போன்று எமது மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நன்றிக் கடன் செலுத்துவது உறுதி" என்றார்.

Read more