வெறுமனே மாற்றமன்றி, நாட்டில் புரட்சியை ஏற்படுத்தவே மக்கள் ஆணையைக் கோருகிறேன்

• என்மீது ரணில் - ராஜபக்ஷ என்று குற்றம் சாட்டப்பட்டாலும்,  ஐ.தே.க கொள்கைகளை நானே பாதுகாத்தேன்.

• உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியினர் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தில் எம்மோடு இணைய வேண்டும்.

• கோட்டாபயவிற்கு வாக்களித்த மக்களின் தீர்வு, திசைகாட்டிக்கு வாக்களிப்பது அல்ல:

• நாட்டை வெல்ல ஒன்றுபடுவோம்!- இரத்தினபுரியில் ஜனாதிபதி தெரிவிப்பு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘மாற்றத்திற்காக’ மக்கள் ஆணையைக் கோரவில்லை என்றும் மாறாக நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவதற்காகவே கோருவதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஏற்றுமதி பொருளாதாரம், விவசாய நவீனமயமாக்கல், டிஜிட்டல், பசுமை மற்றும் அறிவு சார் பொருளாதாரத்தின் ஊடாக பொருளாதாரப்  புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேவேளை, 'அஸ்வெசும', 'உறுமய' திட்டங்களை செயற்படுத்துதல் மற்றும் சமூக நீதி ஆணைக்குழுவை உருவாக்குதல் ஊடாக சமூக புரட்சியை ஏற்படுத்தவும் பெண்களை வலுவூட்டுதல் மற்றும் ஊழலுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துதல், மாவட்ட அபிவிருத்தி சபைகள் மற்றும் மக்கள் சபைகளை உருவாக்குவதன் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து அரசியல் புரட்சியை அடுத்த 05 ஆண்டுகளில் ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இரத்தினபுரியில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் ஜனாதிபதிக்கு  மிகுந்த உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாடு நெருக்கடியில் இருக்கும் போது ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பது ஆரம்பமுதலே ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையாக உள்ளதாகவும் அதனை கடைப்பிடித்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தமது தலைவர்களிடம் இருந்து பெற்ற பயிற்சியின் பிரகாரம் அந்தக் கொள்கையை தான் பின்பற்றியதாகவும் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த மக்களுக்கு நாடு முகங்கொடுத்த நிலைமையினால் வெறுப்படைந்திருப்பர் எனவும்,  திசைகாட்டிக்கு வாக்களிப்பது அதற்கு பரிகாரமாக அமையாது எனவும் குறிப்பிட்டார்.

எனவே, நாட்டை வெல்லவைப்பதற்கு தம்முடன் ஒன்றிணைவதே தீர்வு எனவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய போதும், அந்தக் கட்சியைத் சேர்ந்த பெரும்பான்மையானோர் நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு பங்களித்ததாகவும்  குறிப்பிட்டார்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

''நாடு பிரச்சினையில் இருக்கும் போது ஒன்றிணைந்து செயற்படுவது என்பது ஐக்கிய தேசியக் கட்சி நீண்டகாலமாக பின்பற்றி வந்த பண்பு. அந்தக் கொள்கைகளைப் பின்பற்றியதற்காக என்னை ரணில் ராஜபக்ச என்று நான் குற்றம் சாட்டினர். பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மையினர் என்னுடன் இருந்தனர்.   ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட சிலர் எதிரணிக்கு சென்றார்கள். அதற்காக  நாங்கள் சஜித் - பீரிஸ் என்று அவரைக் கூறவில்லை. நாட்டைப் பற்றி சிந்தித்துத் தான் நாம் செயற்பட்டோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களிடம் இருந்து பெற்ற பயிற்சிக்கு அமைய நான் செயற்பட்டேன். இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியுள்ளோம். நாம் அனைவரும் இணைந்து நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கினோம்.

பொருளாதாரம் சரிந்த நாட்டை, இறக்குமதிக்குக் கொடுக்க அந்நியச் செலாவணி இல்லாத நாட்டை இரண்டாண்டுகளில் மீட்க முடியாது. எனவே, இந்த ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி, நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான பொருளாதார வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மக்கள் ஆணை வழங்க வேண்டும் என்று கோருகின்றேன்.

உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியினர் என்றால் எனக்கு வாக்களிக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு துரோகம் இழைப்பதாக இருந்தால் சஜித் - பீரிஸுக்கு வாக்களியுங்கள். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய அனைவரையும் மீள இணையமாறு அழைக்கின்றேன். நாட்டைக் காப்பாற்ற பாடுபடுவோம். கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு வாக்களித்தவர்கள் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியினால் மனம் நொந்திருப்பர். ஆனால் திசைகாட்டிக்கு வாக்களிப்பது அதற்கு தீர்வாக அமையாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய போதும் கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மால்  முடிந்தது. எனவே, நாட்டின் வெற்றிக்கான உங்கள் கடமையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதே எமது நோக்கமாகும். இப்பகுதிகளில் விவசாயத்தை நவீனமயமாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், சர்வதேச இரத்தினக்கல் வலயமொன்றை உருவாக்கவும், இரத்தினக்கல் தொழிலை மேம்படுத்தவும் திட்டங்களைத் தயாரித்துள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களைப் பாதுகாத்துக்கொண்டு நாம் முன்னேற வேண்டும். ஏனைய  வேட்பாளர்களிடம் எந்த திட்டமும் இல்லை. மக்களுக்கு அனைத்தையும் இலவசமாக தருகிறோம் என்று கூறி வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர். அதை ஒருபோதும் செய்ய முடியாது.  

இந்த நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக  பாராளுமன்றத்தால் எனக்கு இரண்டு வருட ஆணை வழங்கப்பட்டது. இதனை நிறைவேற்றியுள்ளேன். நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான ஆணையை நான் இப்போது மக்களிடம் கேட்கிறேன்.

ஏற்றுமதி பொருளாதாரம், விவசாய நவீனமயமாக்கல், டிஜிட்டல், பசுமை மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கி புதிய பொருளாதாரத்தை உருவாக்கும்  புரட்சியை மேற்கொள்ள இருக்கிறேன். மேலும், அஸ்வெசும, உறுமய திட்டங்களைச் செயல்படுத்தி, பெண்களுக்கு அதிகாரம் அளித்து, சமூக நீதி ஆணைக்குழுவை நிறுவி சமூகப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறோம்.

செப்டம்பர் 21 ஆம் திகதி பொருளாதார, அரசியல் மற்றும் சமூகப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான ஆணையை எனக்கு வழங்குமாறு நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்." என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் அலி சப்ரி;

''இந்நாட்டில் 76 வருடங்கள் என்ன செய்தார்கள் என்று ஒரு சிலர் கேட்கின்றனர். 76 வருடங்கள் ஆட்சி செய்த அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரம் என்பவற்றால் தான் இன்று அநுரகுமார திஸாநாயக்கவுக்கு  பட்டதாரியாக வெளியேறவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் முடிந்துள்ளது. இன்று எமது நாட்டில் 99.3 % வீதமான வீடுகளில் மின்சாரம் உள்ளது.  நாம் சுதந்திரம் அடையும்போது சுமார் 8000 கார்களே இருந்தன. ஆனால் இன்று மோட்டார் சைக்கிள் உட்பட 800,000 அதிகமான வாகனங்கள் இருக்கின்றன. 1971 மற்றும் 1988, 1989 களில் கலவரம் செய்யாமல் இருந்திருந்தால், பல்கலைக்கழக மாணவர்களை வீதிகளுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால், தொழிற்சங்கங்கள் என்ற பெயரில் இந்நாட்டின் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கதாமல் இருந்திருந்தால், அத்தோடு 26 வருடங்கள் யுத்தம் செய்யாமல் இருந்திருந்தால் கூடுதலான சேவைகளை செய்திருக்க முடிந்திருக்கும்   .

அதேபோன்று, கடந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனைத்து கட்சிகளும் கட்சி, இன, மத வேறுபாடின்றி எமது ஆதரவை வழங்க ஒன்றிணைந்துள்ளோம். அரசியல் செய்ய வேண்டுமென்றால் நாம் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அனைவரும் மாற்றம் வேண்டும் என்கிறார்கள். மாற்றம் எதற்கு வேண்டும்? இருக்கும் இடத்தில் இருந்து கீழே விழுவதற்கா, அல்லது முன்னேறுவதற்கா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

2006 எதென்ஸ் ஒலிம்பிக் போட்டியை நடத்திய, அபிவிருத்தி அடைந்த கிறீஸில் மாற்றம் வேண்டும் என்று இடதுசாரி சோசலிச அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டு வந்ததால், அந்த நாடு பொருளாதார வீழ்ச்சி அடைந்தது.  இன்று நாம் இருக்கும் இடத்தில் இருந்து கீழே விழுவதற்காகவன்றி, முன்னேறுவதற்கான மாற்றத்தையே நாம் ஏற்படுத்த வேண்டும். 2022 இல் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியதே எமது நாட்டில் ஏற்பட்ட சிறந்த மாற்றம் என்பதைக் கூற வேண்டும். எனவே, இந்நாட்டைக் கட்டியெழுப்ப நாம் மீண்டும் அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர:

''கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு, மலையகம் தோற்கும் போது தெற்கில் நாம் வென்றோம். இம்முறை வடக்கு கிழக்கில் மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்க உள்ளனர். ஜனவரி முதல் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க இருக்கிறோம். தொட்டதற்கெல்லாம் ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பதாக சஜித் கூறுகிறார். ஆணைக்குழு அமைத்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியுமா? இரத்தினபுரி மாவட்டத்தில் 125,000 பேர் அஸ்வெசும பெறுகின்றனர்.  சேவை செய்து காட்டியவர் இருக்க பரீட்சார்த்தமாக வேறொருவருக்கு நாட்டை வழங்கப் போகிறோமா? அரச சொத்துக்களைப் பாதுகாப்பதாக அநுர சொல்கிறார். பஸ்களை எரித்து மின்மாற்றிகளை நாசமாக்கியவர்கள் தான் இதனைச் சொல்கிறார்கள். இரத்தினபுரி மாவட்டத்தில் தலதா அதுகோரள மாத்திரமே மறுபக்கம் இருந்தார். அவரும் எமது பக்கம் வந்துவிட்டார். சஜித் வெல்வதாக இருந்தால் அவர் எம்மோடு வருவாரா?

முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள:

''எனது 20 வருட அரசியல் வாழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினதும்  சஜித் பிரேமாஸவினதும் தலைமைத்துவத்திற்கு இடையிலான வித்தியாசத்தை நான் கடந்த காலத்தில் உணர்ந்தேன். எனது சகோதரருக்கு கட்சியை உடைக்கும் நோக்கம் ஒருபோதும் இருக்கவில்லை. ஆனால் நான் கட்சியை உடைத்துக் கொண்டு சென்றேன். அந்தத் தவறை தற்பொழுது திருத்திக் கொண்டுள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அவர்களுக்கே கொடுத்து விட்டு வந்துள்ளேன். எமது மாவட்டத்தில் ஜனாதிபதி பெருவெற்றி பெறுவார்.'' என்றார்.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி:

''எம்முடன் இருந்த 69 இலட்சம் மக்களில் இருந்து பிரிந்து சென்ற சிறு குழுவினர் பரீட்சார்த்தமாக வேறொருவருக்கு ஆட்சியை ஒப்படைக்க விரும்புகின்றனர்.

எமது நாடு மீண்டும் பங்காளாதேஷாகவோ கொங்கோவாகவோ கானாவாகவோ மாறுவதை காண நீங்கள் விரும்புகிறீர்களா? எமது நாடு படிப்படியாக மீண்டு வருகிறது. உலகில் பல நாடுகள் பட்டினியில் உள்ளன. கிணற்றின் ஆழம் தெரியாமல் இறங்கப் பார்க்கிறார்கள். 75 வருடங்களாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களாக இருந்து செய்த சேவையினால் தான் அநுரகுமார இன்று தேர்தலில் போட்டியிடுகிறார். நாம் வழங்கிய சேவைகளினால் பயன்பெற்றுக் கொண்டு என்ன செய்தீர்கள் என்று திசைகாட்டி இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இரு எழுச்சிகளுக்கு முகங்கொடுத்தும். சுனாமி, கொவிட், போரட்டம் என்பவற்றுக்கும் முகங்கொடுத்தோம். ஆனால் நாம் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம்.  கொடுத்துப் பார்ப்போம் என்று ஆட்சியைக் கையளித்து அடிவாங்கிய நாடுகள் பல உள்ளன. திருடர்களைப் பிடித்து சிறையில் இடுவதாக அநுர கூறுகிறார். இந்த மேடையில் திருடர்கள் எவரும் கிடையாது.  விஜய குமாரதுங்கவை கொலை செய்து விட்டு அதனை நியாயப்படுத்த துண்டுப்பிரசுரம் வெளியிட்டனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பாசிசவாதத்தை அமுல்படுத்துவர்.  மிலேச்சத்தனமாக அநியாயங்கள் செய்த அநுர இன்று ஆட்சிக்கு வர கனவு காண்கிறார். பொய் வாக்குறுதிகளை அளிக்காமல் உண்மையை பேசும் ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெற வைப்போம்" என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இங்கு உரையாற்றினார்கள்.

''மகா சங்கத்தினர் உள்ளிட்ட ஏனைய மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான அகில எல்லாவல,  முதித டி சொய்சா, மற்றும் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் அரசியல் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்த வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டனர்.

Read more