ஏனைய மக்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களைத் தோட்ட மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பேன்

• அதிகாரத்தைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் தலைவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க அனுமதிக்கமாட்டேன்.

• இந்த நாட்டின் மிகப்பெரிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக புரட்சியை அடுத்த 05 வருடங்களில் நிகழ்த்துவோம்.

• சஜித்தும் அனுரவும் முகத்தை மாற்ற வாக்கு கேட்கிறார்கள்: நான் புரட்சி செய்ய மக்கள் ஆணையை கேட்கிறேன்.

• இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது - நுவரெலியாவில் ஜனாதிபதி தெரிவிப்பு.

பெருந்தோட்ட மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் தோட்ட மக்களுக்கு லயன்களுக்கு  பதிலாக கிராமங்களில் வாழும் உரிமையை வழங்கி சட்டபூர்வமான காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுள்ளதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்ற 'ரணில் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விகிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன், ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் தலைவர்களுக்கு நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க இடமளிக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, படிப்படியாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அடுத்த 5 வருடங்களில் இந்த நாட்டில் பாரிய பொருளாதார, அரசியல், சமூக புரட்சியை ஏற்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.

சஜித்தும் அநுரவும் மாற்றங்களை செய்வதாகச் சொன்னாலும், முகங்களை மாற்றும், மாற்றம் நாட்டுக்கு அவசியமற்றதெனவும், மக்களைப் பற்றி சிந்திப்பவர்களாக இருந்தால் வரிசையில் நின்ற மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான மாற்றத்தில் அன்றே இணைந்திருப்பார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐ.எம்.எப் உடன் பேசி, வரிச்சுமையை குறைப்பதாக சஜித் போலி வாக்குறுதிகளை வழங்கினாலும், இதுவரையில் எவரும் ஐ.எம்.எப் உடன் பேசவில்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் மறுசீரமைப்புக்களால் ஏற்பட்டிருக்கும் வெற்றிகளைப் பாதுகாக்க வேண்டுமென ஐ.எம்.எப் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக நுவரெலியா காமினி மத்திய மகா வித்தியாலய மாணவர்களை நுவரெலியா ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த ஜனாதிபதி மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலைக்கு புதிய காணியொன்றை வழங்குவதற்கான ஆவணங்களை அதிபரிடம் கையளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"1973 களில் முதலில் நுவரெலியாவிற்கு வந்தேன். காமினி திசாநாயக்க, ஜே.ஆர் ஜயவர்தன ஆர். பிரேதமதாச, லலித் அத்துலத்துமுதலி போன்ற தலைவர்களுடன் வந்திருக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஐக்கிய தேசிய கட்சியை மறுசீரமைத்து பாரிய வெற்றியை கண்டோம். அவர்களில் இன்று நான் மாத்திரமே உயிரோடு இருக்கிறேன். அதனாலேயே ஐக்கிய தேசிய கட்சியருக்கு சிறப்புச் செய்தியொன்றை சொல்ல வேண்டும்.

இலங்கையில் ஒரேயொரு ஐக்கிய தேசிய கட்சியே உள்ளது. அதன் தலைவரான எனக்கே ஐக்கிய தேசிய கட்சியினர் ஆதரவளிக்க வேண்டும். நானும் சௌமியமூர்த்தி தொண்டமானும், ஒரே நாளில் தான் அமைச்சு பதவியேற்றோம். அவரோடு இணைந்து தோட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்திருக்கிறேன். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தோம். 1986 களில் இந்திய வம்சாவளி மக்களுக்கு வாக்குரிமை வழங்கினோம்.

1994 இல் நுவரெலியா வந்தபோது தோட்டங்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுத்தேன். புதிய தோட்டங்களை அமைத்தோம். பின்னர் ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து ஏனையோருக்கும் பிரஜாவுரிமை வழங்கினேன். நான் பிரதமராக இருந்த காலத்தில் உள்நாட்டு விவகார அமைச்சராக இருந்த வஜீர அபேவர்தனவுடன் இணைந்து இப்பகுதியிலுள்ள பிரதேச சபைகளை அதிகரிக்குமாறு கூறினேன்.

பின்னர் ஜீவன் தொண்டமானுடன் சம்பள அதிகரிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். தோட்டத்தில் முதியவர்களுக்கு அஸ்வெசும நிவாரணம் தருகிறோம். லயன்களை ஒழித்து கிராமங்களை உருவாக்குவோம். பிராஜவுரிமையை முழுமையாக வழங்க வழி செய்திருகிறோம்.

வலப்பனை சிங்கள மக்களையும் நான் மறக்கவில்லை. எஸ்.பீ.திசாநாயக்கவுடன் அப்பகுதிகளின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டிருக்கிறேன். இனி நான் வெல்ல வேண்டியது மட்டுமே மீதமிருக்கிறது. எவரும் நாட்டை ஏற்க வராத வேளையிலேயே நான் ஏற்றேன். மக்கள் கஷ்டப்பட்ட போது அநுரவும், சஜித்தும் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. அவர்களுக்கு மக்கள் மீது அனுதாபம் வரவில்லை. தாமாக முன்வந்து மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமெனவும் அவர்கள் நினைக்கவில்லை.

உங்களுக்கு அந்த கேள்வி இல்லையா? பொறுப்புகளை ஏற்க முடியாமல் ஓடிவிட்டு இப்போது எதற்காக வந்து அதிகாரம் கேட்கிறார்கள். நாம் கட்சி அரசியல் வேறுபாடுகளை விடுத்தே மக்களை மீட்க வழி செய்தோம். எதிர்கட்சியினர் மக்களை வாழவைப்பது குறித்து சிந்திக்கவில்லை. தேர்தல் காலத்தில் மட்டுமே மக்களிடம் வருகிறார்கள். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா?

அவர்களை "போடா, போடா" என்று சொல்லி அனுப்பிவிடுங்கள். நெருக்கடி காலத்தில் சில கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது.  ஐ.எம்.எப் கடன் பெற வேண்டாம் என்று எதிர்க்கட்சி கூறியது. பணம் அச்சிடுதல், வங்கிகளிடம் கடன் பெறுதல் போன்ற செயற்பாடுகளுக்கும் ஐ.எம்.எப் முட்டுக்கட்டடை போட்டது. கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு ஓடச் சொன்னார்கள்.

ரூபாவை பலப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கச் சொன்னார்கள். அதனால் விருப்பமின்றி வரியை கூட்டினோம். பொருட்களின் விலை கூடியது. மக்கள் உட்பட கஷ்டங்களை அறிவேன். சிறுவர்களுக்கு உணவு இருக்கவில்லை. பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்ப முடியாதிருந்தது.

ஆனாலும், ஆறு மாதங்களில் ரூபா வலுவடைந்து பொருட்களின் விலை குறைந்தது. மேலும் விலைகளை குறைக்கவே விரும்புகிறோம். நாம் கஷ்டமான தீர்மானம் எடுக்கும்போது பதவி விலகச் சொன்னார்கள். தேர்தலை நடத்தச் சொன்னார்கள். தொடர் பணி நிறுத்தங்களை செய்தனர். மக்கள் வாழ்க்கை சிறக்க சிறிதும் உதவி செய்யவில்லை. ஆனால் நாம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறோம். பொருளதாரத்தை ஸ்திரப்படுத்தியிருக்கிறோம்.

இந்த வளர்ச்சி முடங்கலாம். பொருளாதாரத்தை பலப்படுத்தவே மக்கள் ஆணையை கேட்கிறேன். பின்னர் அச்சமின்றி பயணிக்கலாம். நல்ல எதிர்காலத்தைத் தருவேன். நல்லதொரு பொருளாதாரம் நாட்டிற்கு வேண்டும்.

ஏற்றுமதி பொருளாதாரம், தேயிலை உற்பத்தியை அதிகப்படுத்தல், விவசாயத்தை நவீனமயப்படுத்தல், லயன்களை கிராமங்களாக மாற்றியமைத்தல், நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை மலையகத்தில் முன்னெடுப்போம்.  

இப்பகுதியிலிருக்கும் சிங்கள கிராமங்களுக்கு மரக்கறி உற்பத்தியைப் பலப்படுத்த உதவுவோம். பால் உற்பத்தி, கல்வி அபிவிருத்தி, தொழில் பேட்டை அமைத்தல், சுற்றுலாத் துறையை மேம்படுத்தல் உள்ளிட்டச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.

தாஜ் ஹோட்டல் நுவரெலியாவில் அமைக்கப்படவுள்ளது. சீதா எலிய, நானுஓயா, மஸ்கெலியா போன்ற பகுதிகளை சுற்றுலா துறையின் கீழ் அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்திருக்கிறோம்.

சுற்றுலா துறையின் ஊடாக வாழ்வாதாரத்தை அதிகரித்துக்கொள்ள வழி செய்வோம்.   தோட்டங்களில் வௌ்ளையர் காலத்தில் கட்டப்பட்ட வீடுகளை, சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவோம். நிறைவேற்று அதிகாரிகளுக்கு புதிய வீடுகள் அமைக்கப்படும். காலியை போன்றே நுவரெலியாவையும் சுற்றுலாத் துறையில் முன்னேற்றுவோம்.

சஜித் எல்லாவற்றையும் இலவசமாக தருவதாகச் சொல்கிறார். தலைவலியையும் இலவசமாக தருவார். எல்லாவற்றையும் இலவசமாக தந்தால் நாட்டைக் கொண்டுச் செல்ல முடியுமா?

வரி குறைக்கப்படும்,  வரி வரம்பு அதிகரிக்கப்படும், விவசாய உபகரணங்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமாரவும் சொல்கிறார்கள்.

ஐ.எம்.எப் உடன் இந்த திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்க அழைப்பு விடுத்தேன். இன்றுவரையில் அதற்கு தயாரில்லை. மறுமுனையில் விவாதத்திற்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். நான் ஏற்றுக்கொண்டேன். இன்று வரை அதற்கான ஏற்பாடுகளை செய்து எனக்கு பதில் அழைப்பு விடுக்கவில்லை. விவாதத்திற்கு வர அநுரகுமார அச்சப்படுகிறார? எதிர்கட்சியினர் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதுவரையில் எவரும் பேசியதில்லை.

ஆனால், சர்வதேச நாணய நிதியம் மூன்று வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களைப் பார்த்துவிட்டு அறிவிப்பொன்றை விடுத்திருக்கிறது. அந்த அறிவிப்பில் "இலங்கை வரலாற்றி மிகக் கடினமான நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. நெருக்கடியிலிருந்து மீள தற்போதைய வேலைத்திட்டம் மிக அவசியமானது. தற்போதைய மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். மக்களே நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்க வேண்டும். இப்போதைய வேலைத் திட்டங்கள் நல்ல முன்னேற்றங்களை தந்திருக்கிறது. அதனால் பெறப்பட்ட வெற்றிகளை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்." என்று கூறியுள்ளது.

எனவே இப்போதைய வேலைத்திட்டம் சிறந்தது என்பது உறுதியாகியிருக்கும் பட்சத்தில் மற்றையவர்கள் எதற்கு என்ற கேள்வி எழுகிறது. அதனால் இப்போதைய பயணத்தை மாற்றி, காட்போர்ட் வீர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா?

அதேபோல் அநுரகுமார மாற்றம் செய்வதாக சொல்கிறார்கள். மாற்றம் என்றால் முகத்தை மாற்றுவது மட்டுமல்ல என்பது அவர்களுக்கு புரிய வேண்டும். தமக்கு ஒரு வாய்ப்பு தருமாறு கேட்கிறார். அவ்வாறான வெறுமையான மாற்றங்களுக்கு நான் இடமளிக்க மாட்டேன்.

நாட்டில் புரட்சி செய்யவே நான் மக்கள் ஆணை கேட்கிறேன். இறக்குமதி பொருளாதாரம், விவசாய நவீனமயமாக்கல், சுற்றுலாத்துறையை இரட்டிப்பாக்கல், டிஜிட்டல் பொருளாதாரம், பசுமை பொருளாதாரம், அறிவை மையைப்படுத்திய பொருளாதாரம் ஆகியவற்றை பலப்படுத்துவே மாற்றங்களாகும். அதுவே புரட்சிகர மாற்றங்களுக்கு வித்திடும்.  

அஸ்வெசும , உறுமய போன்ற வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. தோட்டங்களிலும் அதனை செயற்படுத்துவோம். மொத்தமாக 20 இலட்சம் பேருக்கு காணி உறுதி கிடைக்கும். பெண்களை வலுவூட்டுவோம். பொலிஸ்  நிலையங்களில் பெண்களுக்கான தனிப் பிரிவு உருவாக்கப்படும். வீடுகளில் கணவர்கள் மனைவியரை துன்புறுத்துவதற்கு கூட இடமளிக்கப்படாது. பெண்களின் முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்வோம். சாதி, மத வேறுபாடுகளை கலைவதற்கு சமூக நீதி ஆணைக்குழு அமைக்கப்படும்.

இவ்வாறான சமூக மாற்றத்தையே ஐ.எம்.எப் விரும்புகிறது. ஊழல் எதிர்ப்புச் சபை, ஜன சபா என்பவற்றை ஏற்படுத்தி சமூக மாற்றத்தை செய்யும் அதேநேரம், பொருளாதார புரட்சி, சமூக புரட்சி, அரசியல் புரட்சி, சமதான புரட்சியையும் ஏற்படுத்துவோம்.

அதனை அறியாதவர்கள் எம்மிடம் வந்து கற்றுக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் என்ற ஆணையே எனக்கு கிடைத்தது. மக்கள் ஆணை கிடைக்கவில்லை. எனவே அடுத்த ஐந்து வருடங்களில் மக்கள் சுமையைக் குறைப்பதற்காகவே இப்போது மக்கள் ஆணையை கோருகிறோம்." என்றார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

"தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தோட்ட தொழிலளார்களுக்குப் பெற்றுத் தருவதாக சொன்ன சம்பள அதிகரிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சஜித் பிரேதாசவிடம் சிறந்த தலைமைத்துவம் இல்லை. தோட்ட தொழிலாளர்களுக்கு 2500 சம்பள அதிகரிப்பு தருவதாக பொய் சொல்கிறார்.  சிறுதோட்ட உரிமையாளர் ஆக்குகிறேன் என்றும் பொய் சொல்கிறார்கள்.

நாம் ஒருபோதும் மலையகத்தைப் பிரித்து ஆள வேண்டும் என்று நினைக்கவில்லை.  இன்று ஜனாதிபதி தந்த அஸ்வெசும போன்ற திட்டங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர். அவரின் முதுகில் குத்தக்கூடாது. இன்று பலர் பிரதேச சபைகளை அமைத்ததாக சொல்கிறார்கள். ஆனால் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவே அதற்கும் வழி செய்திருந்தார் என்பதே உண்மையாகும்.  

வாக்குச்சீட்டின் கீழ் இருந்து மூன்றாவது இடத்தில் ஜனாதிபதியின் சிலிண்டர் சின்னம் இருக்கும். அதற்கு வாக்களியுங்கள். கடந்த ஒரு வருடம் ஜனாதிபதியோடு பயணித்திருக்கிறோம். மக்கள் உரிமை சார்ந்த விடயங்கள் ஜனாதிபதி ரணில் ஆட்சியிலேயே அதிகளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது." என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,

"2022 களில் நாட்டு மக்கள் எவராவது தம்மை மீட்க வருவார்களா என்று ஏக்கத்துடன் காத்திருந்த காலத்தில் இன்றிருக்கும் வேட்பாளர்கள் எவரும் வரவில்லை.  நாடு சமூகமான நிலைமைக்கு வந்திருக்கும்போது இன்று மற்றையவர்கள் ஆட்சி அதிகாரம் கேட்கிறார்கள். எனவே நாட்டைப் பாதுகாத்த ஜனாதிபதியுடன் பயணிப்பதே பாதுகாப்பு. ஜனாதிபதி ஒருவர் ஒருபோதும் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. அவர்களைத் தெரிவு செய்யப்போகும் நாட்டு மக்களே வரிசையில் நின்று அல்லல்பட நேரிடும். இன்று 1,350 ரூபா சம்பள அதிகரிப்பைப் பெற்றுத் தந்திருக்கும் அரசாங்கம் விரைவில் மிகுதித் தொகை சம்பள அதிகரிப்பையும் பெற்றுத் தரும்.

ஒரு சதம் கூட சம்பள அதிகரிப்பு பெற்றுத்தராவர்கள், தொழிலாளர் சம்பள பிரச்சினை பற்றி பேச தகுதியற்றவர்கள். அதேபோல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லயங்கனை கிராமங்களாக மாற்றியமைக்கத் தீர்மானித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு அநுரகுமார திசாநாயக்க விவசாய அமைச்சு, காணி அமைச்சுக்களில் இருந்த வேலையில் ஒரு அங்குல காணியைக் கூட மக்களுக்கு வழங்கியதில்லை. சஜித் பிரேமதாச 2015 - 2019 வரையில் வீடமைப்பு அமைச்சராக இருந்தார். இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு மிஞ்சியதாக ஒரு வீட்டைக்கூட கட்டித்தரவில்லை. அமைச்சராக இருந்தபோது மலையகத்தை தெரியாதவர் கண்களுக்கு ஜனாதிபதியான பின்னர் மலையம் தெரியுமா.

ஆனால் இன்று எதிர்தரப்பு வேட்பாளர்கள் வாக்கு கோரும் சுதந்திரமான நிலையைக்கூட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே உருவாக்கினார்.  இ.தொ.கா வேறு எவருக்கும் ஆதரவளிக்காது என்பதையும் உறுதியாக சொல்கிறோம். 1988 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் சௌமியமூர்த்தி தொண்டமானே மலையக மக்களுக்கு வாக்குரிமையைப் பெற்றுத்தந்தார். அதற்கும் மற்றைய வேட்பாளர்கள் உரிமை கோருவது தவறானது. எனவே, ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பாகும்." என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திசாநாயக்க,

''அநுரகுமார திசாநாயக்க விவசாய அமைச்சை ஏற்ற காலத்திலிருந்தே அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை வந்தது. நாட்டு மக்கள் 2022 இல் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் வீதியில் அல்லல்பட்ட வேளையில் ஏற்பட்ட எதிர்ப்பை வன்முறையாக மாற்றுவதற்கும் ஜேவீபியினரே வழி செய்தனர்.  

ஆனால் நாட்டை ஏற்கச் சொன்னப்போது சஜித்தும், அநுரவும் ஔிந்துகொண்டார்கள். தனி யானை போல வந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஏற்றுக்கொண்டார். கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டின் பொருளாதாரத்தை தன்னால் வளர்த்தெடுக்க முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிருபித்துக் காட்டினார்.

இன்று ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பல கட்சிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துகொண்டுள்ளனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்த காணி உறுதியை வழங்கி அவர்களின் நிலத்திலேயே அவர்களை வாழ்விக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும்." என்றார்.

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார,

"நாட்டில் நெருக்கடி வந்த போது அதிலிருந்து மீண்டு வருதற்கு தோட்ட தொழிலாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி செலுத்தும் விதமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கியுள்ளார். தோட்டங்களைக் கிராமங்களாக்கி மக்களுக்கு வீட்டுரிமை வழங்கவும் தீர்மானித்துள்ளார்.

நாட்டில் பல தேர்தல் அலைகள் எழுந்துள்ளன. உண்டியல்களில் சில்லறை சேர்த்தவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் மாற்றத்தை கண்டு பொறாமை கொண்டுள்ளனர். அதனால் இப்போது அவர்களின் வங்கிகளிலுள்ள பெருந்தொகையான பணத்தை செலவிட ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் சுற்றுலாப் பயணிகள் இன்றி வற்றிப் போயிருந்த நாட்டில் வழமையை விடவும் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகிறார்கள். எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்தால் மட்டுமே நாட்டுக்கு நல்ல எதிர்காலம் கிட்டும். என்றார்"

Read more