இந்நாட்டு விவசாயிகள் உரமின்றி தவிக்கும் போது இன்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் சஜித்தும் அநுரவும் எங்கே இருந்தார்கள்?

• மக்கள் வரிசையில் நின்று கஷ்டப்படும் போது சஜித்தும் அனுரவும் எங்கே இருந்தார்கள்?

• மக்கள் பிரச்சினையில் சிக்கிய போது தப்பியோடியவர்கள் தற்போது தமது எதிர்காலத்திற்காக அதிகாரத்தை கோருகின்றனர்.

• வர்த்தகம் மற்றும் விவசாயத்தை வலுப்படுத்த யாரால் முடியும் என்று முஸ்லிம் காங்கிரஸிடம் கேளுங்கள்.

• முஸ்லிம்களுக்கு, சட்டத்தின் மூலம் அடக்கம் செய்ய உரிமை வழங்கப்படும்.

• நான் ஜனாதிபதியாக இருப்பதால் இந்த தேர்தலில் இனவாதமோ, மதவாதமோ பேசப்படவில்லை.

• தேர்தல் மேடையில் மற்ற தலைவர்கள் வாக்குறுதி அளிக்கும்போது, ​​நான் மக்கள் முன் வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறேன் - சாய்ந்தமருது மக்கள் பேரணியில் உரையாற்றுகையில் ஜனாதிபதி தெரிவிப்பு.

உரங்களின் விலைகளை  குறைப்பதாகவும் விவசாயக் கடன்கள் வெட்டிவிடுவதாகவும் அறிவிக்கும் சஜித்தும் அநுரவும் இந்நாட்டு விவசாயிகள் உரமின்றி தவிக்கும் போது எங்கே இருந்தார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.

தாம் உலகத் தலைவர்களுடன் பேசி உர மானியங்களைப் பெற்றுக்கொடுக்க பாடுபட்டதன் காரணமாகவே விவசாயியை மீண்டும் வயலுக்கு அனுப்பி நாட்டில் அரிசி உற்பத்தியை அதிகரிக்க முடிந்ததையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

இன்று மக்களின் வாழ்க்கைச் சுமை பற்றிப் பேசும் சஜித்தும் அநுரவும் கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க எவ்வித ஆதரவையும் வழங்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்கள் கஷ்டப்படும் போது ஓடியவர்களே இன்று அவர்களின் எதிர்காலத்திற்காக அதிகாரம் கேட்கின்றனர் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (11) பிற்பகல் கல்முனை, சாய்ந்தமருது பௌசி விளையாட்டரங்கில் நடைபெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டில் முஸ்லிம்களின் பிரதான வருமானமாக இருக்கும் வர்த்தகம் மற்றும் விவசாயம் என்பன இல்லாமல் போனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும். எனவே இந்த நாட்டில் வியாபாரத்தையும் விவசாயத்தையும் வலுப்படுத்துவது யாரால் முடியும் என்பதை முஸ்லிம் காங்கிரஸிடம் வினவும் படி அங்கு குழுமியிருந்த  மக்களிடம் கோரிய  ஜனாதிபதி, தான் திட்டங்களுடனே மக்கள் முன் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இன, மத பிரச்சினைகளை முன்னிறுத்தி தேர்தலை நடத்த மாட்டோம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, முஸ்லிம் மக்களுக்கு இறந்தோரின் உடல்களை அடக்கம் செய்யும்  உரிமையை  சட்டத்தின் மூலம் வழங்கவுள்ளதாகவும், ஏனைய தலைவர்கள் தேர்தல் மேடைகளில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் போது,  தான்  வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டே வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

உங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் இல்லாத வேளையில் அனைத்து தேவைகளையும் பெற்றுத் தந்தேன். உங்களுக்கு எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் போன வேளையில் எதிர்பார்ப்புக்களை மீட்டுத் தந்தேன். மக்களின் கஷ்டங்களை வேடிக்கை பார்ப்பது கஷ்டமானதாக இருந்தது.

வேறு எவரும் இந்த பொறுப்பை ஏற்க வராத வேளையிலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ என்னிடம் பொறுப்பை கையளித்தார். சஜித்துக்கும் அனுரவிற்கும் மக்களின் கஷ்டங்கள் புரியவில்லை. மக்கள் கஷ்டத்திலிருந்த வேளையில், இந்த நெருக்கடியில்  கைவைக்கமாட்டோம் என்று கூறினர். அவர்களின் மனசாட்சி இன்று என்ன சொல்கிறது. இப்போதுதான் மக்களை பற்றி நினைவு வந்ததா?

இப்போது மக்களுக்கு நிவாரணம் தருவதாக சொல்கிறார்கள். மக்களுக்கு நிவாரணம் தேவைப்பட்ட வேளையில் அனுரவும் சஜித்தும் ஏன் அவற்றை பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் நான் ஐஎம்எப் மற்றும் உலக தலைவர்களுடன் பேசி மக்கள் கஷ்டத்தை போக்க வழி செய்தேன்.

கடன் பெறுதல், பணம் அச்சிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஐஎம்எப் சில நிபந்தனைகளை விதித்தது. அதன்படியே விருப்பமின்றியேனும் வரியை அதிகரித்தோம்.  எல்லோரும் என்னை திட்டித்தீர்த்தனர். ஆனால் ஆறு மாதங்களில் நாட்டில் எதிர்பார்த்த வளர்ச்சி கிட்டியது. பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. நாம் பணத்தை தேடிக்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். அடுத்த வருடத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மேலும் அதிகரிக்கவுள்ளோம்.

வீதியோரங்களில் மூடிக்கிடந்த கடைகளை திறக்க வழி செய்திருக்கிறேன். இவை தற்காலிகமான தீர்வுகள் தான். தற்போதிருக்கும் நிலைபேற்றுத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். நாம் தொடர்ந்தும் கடன் பெறும் நாடாகவே இருக்க முடியாது. எனவே ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு சென்று வருமானத்தை அதிகரிக்க வேண்டும். புதிதாக சிந்தித்து முன்னேற வேண்டும்.

இன்று நான் ஜனாதிபதியாக இருப்பதால் இந்த தேர்தலில் இனவாதமோ, மதவாதமோ பேசப்படவில்லை. மாறாக பொருளாதாரம் பற்றி பேசப்படுகிறது. முஸ்லிம் மக்களின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு தந்திருக்கிறேன். நல்லடக்கம் செய்யும் உரிமையை சட்டத்தினால் உறுதி செய்திருக்கிறேன்.முன்னெடுக்கவேண்டிய ஏனைய பணிகளையும் செய்து  முடிப்பேன். நான் ஒருபோதும் தேர்தலை இலக்கு வைத்து பேசுவதில்லை.

முஸ்லிம்கள் வர்த்தகம், விவசாயம் செய்கிறார்கள். அவை இரண்டும் இல்லாவிட்டால் முஸ்லிம் சமூகம் வீழ்ச்சியடையும். எனவே அவை இரண்டையும் வளப்படுத்தக்கூடியவர் யார் என்பதை  முஸ்லிம் காங்கிரஸிடம் கேளுங்கள். இன்று வாழ்க்கை சுமை அதிகம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அடுத்த வருடம் வாழ்கை சுமையை குறைப்பதற்கான வழிகளை செய்வேன். இன்று வாழ்க்கைச் சுமை அதிகம் என்று சொல்லும் அனுரவும் சஜித்தும் அன்று ஏன் ஓடிப்போனார்கள். அவர்களிடம் மீண்டும் நாட்டையும் பொருளாதாரத்தையும் வழங்க முடியுமா? வருகின்ற வழியில் ஒரு கடையைக் கண்டேன். அங்கு தடகள போட்டிகளுக்கான நல்ல சப்பாத்துக்கள் உள்ளன. அவற்றை எதிர்கட்சியினருக்கு வாங்கிக் கொடுங்கள்.

நான் இப்பகுதியில் விவசாயத்தை மேம்படுத்த எதிர்பார்க்கிறேன். அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். புதிய அரிசி ஆலையை அமைக்க வேண்டும். அரசாங்கம் விவசாயிகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்யும். கடந்த போகங்களில் மக்களுக்கு பணம் கிடைத்தது. அடுத்த சிறுபோகத்திலும் நல்ல வருமானம் கிடைக்கும். நான் உலக வங்கியுடனும் சமந்தா பவருடனும் பேசியே மக்களுக்கு தேவையான உரத்தை பெற்றுத் தந்தேன். அன்று சஜித்தும் முஸ்லிம் காங்கிரஸூம் அதற்காக முன்வரவில்லை.

எனவே இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வழி செய்வேன். ஹிங்குரங்கொட, மத்தளை விமான நிலையங்களை மேலும் பலப்படுத்துவோம். வர்த்தக முதலீட்டு வலயங்களை உருவாக்குவோம். திருகோணமலையை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வோம். டிஜிட்டல் பொருளாரத்தை உருவாக்குவேன். சூரிய சக்தி திட்டம் உருவாக்கப்படும். மீன்பிடித்துறை வளர்ச்சிக்காக துறைமுகம் பலப்படுத்தப்படும் அதற்காகவே மக்கள் ஆணை கோருகிறேன்.

மற்றையவர்கள் அதனை செய்யப்போவதில்லை. சஜித் போகும் இடங்களில் எல்லாம்  எல்லாவற்றையும் இலவசமாக தருவதாக வாக்குறுதி அளிக்கிறார். மக்களுக்கு தலைவலியையும் இலவசமாக அவர் தருவார். தேவைப்படும் பட்சத்தில் அவரிடம் கேட்டு வாங்கிக்கொள்ள முடியும். அன்று பயந்தோடியவர்கள் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இன்று மீண்டும் வந்திருக்கிறார்கள். நான் மக்களின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்தேன். அதனாலேயே எனது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.

எனவே உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிலிண்டர் சின்னத்து வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது எதிர்காலமும் சிறக்காது " என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் அலி சப்ரி:

கேஸ் இல்லாத நிலையில் பல்பொருள் அங்காடிகளில்   கூட  விறகுகள்  விற்கப்பட்டன. விவசாயம் செய்வதற்கு உரம் இருக்கவில்லை. மத்திய வங்கியில் 20 மில்லியன் டொலர்கள் மட்டுமே இருந்தன. 20 மில்லியன் நாட்டு  மக்களுக்கும் ஒரு டொலர் வீதம் வழங்குவதற்குக் கூட அது போதாது.  ஆட்சியைப் பொறுப்பேற்பதற்காக சஜித் பிரேமதாஸவுடன் உரையாடுமாறு அன்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய எனக்கு அறிவித்தார். நான் அவருடன் பேசினேன். அவர்  கோரியதற்கு ஏற்ப மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளருடன் கலந்துரையாட சந்தர்பம் பெற்றுக் கொடுத்தேன். ஆனால் நாடு பயங்கரமான நெருக்கடியில் இருப்பதாக கூறி சஜித் பின்வாங்கினார். ஆனால் இன்று நாட்டை ஒப்படைக்குமாறு கோருகின்றனர்.

நாடு நெருக்கடியில் இருந்து மீண்டுள்ள நிலையில், நாம் பரீட்சார்த்தமான வேறொருவருக்கு பொறுப்பைக் கொடுக்கப் போகிறோமா?

1989 ,1994 மற்றும் 1999 இல்  மாமனிதர் அஷ்ரப் யாருடன் இருந்தார்? நமது முஸ்லிம் தலைமைகள் யாருடன் இருக்கிறார்களோ அந்த அணி தோற்பது உறுதி. சமுதாயத்தைக் காட்டிக் கொடுக்கும் முஸ்லிம் தலைவர்களின் பின்னால் செல்ல வேண்டாம். நாம் சுயநலத்திற்காக அரசியல் செய்யவில்லை. கடந்த 5 வருட காலத்தில் அரசாங்கத்திற்குள் இருந்து நாம் செய்த போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அது எமக்கும் இறைவனுக்கும் தான் தெரியும்.

இறந்தவர்களின் உடல்களை கட்டாயப்படுத்தி தகனம் செய்ய முடியாது என சட்டம்  கொண்டுவரப்படுகிறது. கடந்த காலத்தில் செய்த தவறுக்கு அரசாங்கம் என்ற வகையில் மன்னிப்புக் கோரினோம்.  

தெற்கிலுள்ள மக்களும் மலையக தமிழ் மக்களும் ஜனாதிபதியை வெல்ல வைக்க தயாராக உள்ள நிலையில் நாமும் அந்த வெற்றியில் பங்காளர்களாவோம்" என்று  தெரிவித்தார்.

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அலி சாஹிர் மௌளானா:

"இன்று நாட்டு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்கிறது. நாட்டு மக்களுக்கு படிப்படியாக சலுகை கிடைக்கிறது. மக்கள் சந்தோஷமாக வாழக்கூடிய நிலைமை காணப்படுகிறது. அனைத்து இன மக்களும் பண்டிகைகளை சந்தோஷமாக கொண்டாடினர். இந்த நிலைமை தொடர வேண்டும்.

அதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி நீடிக்க வேண்டும். இன்று முஸ்லிம்களுக்கு எதிராக வைத்தியர் சாபியை நெருக்கடிக்குள் தள்ளிய சன்ன ஜயசுமன, சம்பிக்க ரணவக, தயாசிறி ஜயசேகர போன்றவர்களும் ரிஷாதுக்கு எதிராக குரல் தொடுத்த ஆனந்த சாகர தேரர் மற்றும்  ரிஷாதை ஒரு பயங்கரவாதி அவரை கைது செய்வேன் என்று சொன்ன மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவும் இன்று சஜித்துடனேயே உள்ளனர்.  

அதேபோல் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு துணைபோன நாளக கொடஹேவா போன்றவர்களும் இன்று சஜித் அணியிலேயே உள்ளனர். எனவே மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டியது அவசியம்." என்றார்.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி:

முழு நாடும் அனுரவிற்கு என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மறு முனையில் சஜித் இப்போதே ஜனாதிபதியாகிவிட்டதாக நினைத்துகொண்டிருக்கிறார். இவர்கள் வேடிக்கை பாத்திரங்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதிர்ச்சியானவர். அன்று நாட்டில் கோட்டாபய ராஜபக்‌ஷ மட்டுமே மிஞ்சியிருந்தார்.

இறுதியாக தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டை காப்பாற்ற வந்தார். நாட்டு மக்கள் வாழத் தகுந்த வகையில் நாட்டின் நிலைமையை மாற்றியமைத்தார். அதன் பலனாக இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 50 இலட்சம் வாக்குகளுக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே இலங்கை வரலாற்று அதிகபடியான வாக்குகளை பெற்று வெற்றிபெறப்போகும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே இருப்பார்." என்றார்.

அகில இங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்  எம்.முஷர்ரப்:

ஜனாதிபதியை வெற்றி பெற வைக்க அனைத்துப் பிரதேசங்களிலும் மக்கள் தயாராகி வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி மூன்றாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு பின்னோக்கிச் சென்று வருகிறது. அன்று ஓடி மறைந்தவர்கள் இன்று ஆட்சியை கோருகிறார்கள். இந்தத் தேர்தலில் நாம் நன்றியுடையவர்களாக  இருக்க வேண்டும்.மக்கள்  வரிசையில் இருந்த போது மீட்க எவரும் வரவில்லை. அன்று பொறுப்பேற்க இருந்தோம் .ஆனால் ஜனாதிபதி ரணில் அவசரமாக ஏற்றுவிட்டதாக மு.க செயலாளர் காரியப்பர் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில்  கூறினார்.

ராஜபக்‌ஷவினரை  ஜனாதிபதி காப்பாற்றுவதாக எதிரணியினர்  குற்றஞ்சாட்டுகின்றனர். ஜனாதிபதிக்குத் தான் ராஜபக்‌ஷவினருடன் மிகப் பெரிய பகை உள்ளது.

2005 தேர்தலில்  வெல்ல இருந்த ரணில் விக்ரமசிங்கவை,  மோசடி செய்து ராஜபக்‌ஷவினர் தான்   தோற்கடித்தனர். அவர் வென்றிருந்தால் சிங்கப்பூர் போல எமது நாடு மாறியிருக்கும். ஆனால் ராஜபக்‌ஷவினருடன் பகையிருந்தாலும் நாட்டு மக்களை மீட்பதற்காக ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து செயற்பட்டார்.

நடைமுறைச்சாத்தியமற்ற சஜித்தினதும் அநுரவினதும் பின்னால் செல்ல வேண்டுமா? மீண்டும் வரிசை யுகம் வந்தால் ஜனாதிபதி  எங்கிருப்பார் என்று சொல்ல முடியாது.ஏனென்றால் அவருக்கு  இழப்பதற்கு எதுவும் கிடையாது. அவரின் வீடு எரிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டுப் பிள்ளைகளை தனது பிள்ளைகளாக கருதி அவர் செயற்படுகிறார்" என்றார்.

தேசிய காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா:

யுத்தம்,சுனாமி போன்ற அவலங்களின் பின்னர் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.மின்சாரம் இருக்கவில்லை,பாடாசலைகள் நடைபெறவில்லை.பொருட்கள்,கேஸ்,எரிபொருள் இருக்கவில்லை.எதுவும் செய்வதறியாது மக்கள் வீதியில்  இருந்தனர். வாழ்நாளில் அவ்வாறான அவலம் நிகழக் கூடாது என அனைவரும் பிரார்த்தித்தார்கள். நாட்டை மீட்க யார் வருவார்கள் என அவர்கள் ஏக்கத்துடன் பார்த்திருந்தார்கள். பரீட்சைக்கு யார் முன்வருவார்கள் என காத்திருந்தபோது சஜித் வரவில்லை. ஜே.வி.பி பின்வாங்கியது. ரணில் விக்ரமசிங்க தைரியமாக முன்வந்தார். பரீட்சையில் அவர் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார். அன்று பரீட்சை எழுதாதவர்கள் இன்று நாட்டைக் கேட்கிறார்கள். இது விளையாடுகின்ற நேரமல்ல. இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டை கையளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஏனைய வேட்பாளர்கள் இப்பொழுது முன்வந்து பயனில்லை. அவர்கள் ஒரு அமைச்சுப் பதவியைக் கூட சரியாக செய்து காட்டியவர்கள் அல்லர். தமது தேவைகளுக்காக மாத்திரம் அரசியல் செய்யும் ரிசாதையும் ஹக்கீமையும் பற்றி  ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்கு தெரியும். எமது பிரதேச முன்னேற்றத்திற்காக இவர்கள் எதுவும் செய்யவில்லை. இந்தப் பிரதேசத்தில்  தமிழர்கள், முஸ்லிங்கள் ,சிங்களவர் ,கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஒருசில அரசியல்வாதிகள் இந்த ஊர்களை பிளவுபடுத்தி குரோதங்களை ஏற்படுத்தினர் .

நாட்டை செய்து காட்டியவருக்கு வாக்களிக்க வேண்டும்.தமிழ் முஸ்லிம் அனைவரும் இணைந்து மேலும்  5 வருடங்களுக்கு ஜனாதிபதிக்கு நாட்டை ஒப்படைக்க தீர்மானித்துவிட்டோம். 2022 இல் நடந்தது எதிர்காலத்திலும் மீள நடக்க இடமளிக்க முடியாது" என்றார்.  

மகாசங்கத்தினர், சர்வமதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான்,  விமலவீர திஸாநாயக்க, கல்முனைத் தொகுதி ஐ.தே.க அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Read more