இன்னும் 20 ஆண்டுகளில் சிறந்த நாட்டில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை இளம் தலைமுறையினருக்கு ஏற்படுத்த வேண்டும்

• அந்த நாட்டை உருவாக்கவே செப்டம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும்.

• பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைந்தால், நாட்டின் எதிர்காலத்தில் நம்பிக்கை வைக்க முடியாது.

• நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை அடுத்த 05 வருடங்களில் தீர்க்கப்படும் - ஜனாதிபதி அம்பாறையில் தெரிவிப்பு.

இன்னும் 20 வருடங்களில் சிறந்த நாட்டில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டை உருவாக்க எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, சஜித்துக்கும் அநுரவுக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப எந்த திட்டமும் இல்லை எனவும் அவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சீர்குலைந்தால் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் எவராலும் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

திருக்கோவில் பிரதேசத்தில் இன்று (11) இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து அனைவரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த 05 வருடங்களில் இந்த வேலைத் திட்டத்தை வலுவாக அமுல்படுத்தி நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் தமது பிள்ளைகளின் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

"2004 ஆம் ஆண்டு சுனாமிக்கு பின்னர் நான் இங்கு வந்தேன். கோவில் பகுதிக்கு சென்றிருக்கிறேன். நாட்டை பொருளாதாரத்தை கட்டியெழுப்பும்போது திருக்கோவில் பகுதியையும் பலப்படுத்துவோம்.

நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்த வேளையிலேயே நாட்டை ஏற்றேன். 2022 அத்தியாவசிய பொருட்கள் ஒன்றும் எமக்கு கிடைக்கவில்லை. மின்சாரமும் இருக்கவில்லை. கஷ்டங்களுடன் வாழ்ந்தோம். பெண்கள் அதனை மறந்திருக்க வாய்ப்பில்லை. அன்று இப்போதிருக்கும் முன்னேற்றம் கிட்டும் என்று நினைக்கவில்லை.

அனுரவும் சஜித்தும் அன்று இருக்கவில்லை. ஆனால் நான் ஏற்றதால் நாட்டில் தட்டுப்பாடுகள் நீங்கி நல்ல நிலைமை காணப்படுகிறது. அதனால் மக்கள் சுமூகமாக வாழ முடிந்துள்ளது.  அன்று பொருட்களின் விலை அதிகரித்தித்து காணப்பட்டது. ரூபாவின் பெறுமதி பெருமளவில் அதிகரித்திருந்தது.

இன்றும் மக்கள் வாழ்க்கை சுமைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். இருப்பினும் எனது முயற்சிகள் ரூபாவின் பெறுமதியை அதிகரிக்கச் செய்தமையால் ஓரளவு சுமூகமான நிலைமை வந்திருக்கிறது. பொருட்களின் விலையும் குறைந்திருக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே மக்கள் மீது சில சுமைகளை சுமத்த வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியம் எமது கடன் சுமை அதிகரித்தால் நாட்டின் நெருக்கடி மேலும் உக்கிரமடையுமென அறிவுறுத்தியது. நான் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீத கடனை மட்டும் பெறுவதற்கு மாத்திரம் அனுமதி கிடைத்தது. இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே முன்னேற்றங்களை ஏற்படுத்தினோம். அதற்காகவே மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம்.

அடுத்த ஐந்து வருடங்களில் சுமையை மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம். பொருட்களை கொள்வனவு செய்யவும் வாய்ப்பளிப்போம். இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்திருக்கிறோம். விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளை இங்கும் முன்னெடுக்கலாம்.

திருக்கோவில் பகுதியிலும் விவசாய அபிவிருத்திக்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இங்குள்ள கடல் வளத்தினாலும் பயனடைய முடியும். மீன்பிடித் தொழில், சுற்றுலாத்துறை, கனிய வள வர்த்தகத்தைப் பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். விவசாயத்தை நவீனமயப்படுத்தி உலக உணவு உற்பத்தியில் பங்கெடுப்போம். திருகோணமலையில் பாரிய முதலீட்டு வலயத்தை உருவாக்குவோம். நாட்டின் அபிவிருத்தியை விரிவுபடுத்துவோம்.

மாகாண சபையை செயற்படுத்தி இப்பகுதி மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும். இன்றைய சிறுவர்களுக்கு 25 வயதாகும்போது அவர்கள் முன்னேற்றமடைந்த நாட்டில் வாழ வேண்டும் என்பதே எமது இலக்காகும்.

சஜித்தினாலும், அநுரவினாலும் அதனை செய்ய முடியாது. வாய் பேச்சினால் எவர் வேண்டுமானாலும் சாதிக்கலாம். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவர்களால் முடியாது. மாறாக வீழ்த்தவே முடியும். எனவே பொருளாதார வீழ்ச்சியை விரும்பாதவர்கள் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது, திருக்கோவிலுக்கு அபிவிருத்தியும் கிட்டாது." என்றார்.

அமைச்சர் அலி சப்ரி,

"இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு பெரும் இக்கட்டான நிலைமையில் இருந்தது. அப்போது ஐஎம்எப் நாட்டில் அனைவரையும் ஒன்றுபட்டு செயற்பட முன்வருமாறு வலியுறுத்தியது. ஆனால் எதிர்கட்சியினர் அதற்கு முன்வரவில்லை. எதிர்கட்சித் தலைவர் சஜித்துக்கு பிரதமர் பதவியை வழங்கவும் தயாராக இருந்தோம். அப்போதும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அன்று மக்கள் பட்ட கஷ்டங்கள் இன்று உள்ளனவா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நல்ல வைத்தியரிடம் சென்று நீங்கள் சிகிச்சைக்கு சென்று அதனால் நல்ல பலன் கிட்டும்போது, வைத்தியரை மாற்றினால் என்ன நடக்கும் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.

சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை சமூகத்துடன் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். சில கட்சிகள் தெற்கின் கட்சிகள் செல்லும் திசைக்கு எதிர்திசையில் பயணிக்க வேண்டும் என்பதையே கொள்கையாக கொண்டுள்ளனர். சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்த பின்பும் அவருக்கு ஆதரவளிப்பதற்கு என்ன தடையிருக்கிறது.

எனவே, மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதால் நாட்டிலிருக்கும் வலுவான தலைவரே நாட்டை மீட்க வேண்டும். சஜித் கூறுவதை போல வௌிநாட்டு செல்வந்தர்களின் உதவிகளை மட்டும் நாம் நம்பியிருக்க முடியாது. ஜே.வீ.பி ஒரு கொள்கையில்லாத கட்சியாக செயற்படுகிறது. எனவே நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்ட அனுபவம் மிக்க தலைவருக்கு நாம் இடமளித்தால் அடுத்த ஐந்து வருடங்களும் செழிப்பான நாடு எமக்கு கிடைக்கும்." என்றார்.  

இராஜாங்க  அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன்,

"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தை கட்டியெழுப்பும்போது, கிழக்கு மக்களும் அதில் பங்குதாரர் ஆக வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரின் ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்துக்கு 3 அமைச்சுக்களையும் நியமித்தார். மாகாண சபைத் தேர்தலையும் விரைவில் நடத்தி அதிகார பகிர்வுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

எனவே, யாழ்ப்பாணத்திலிருந்து சொல்வதை கேட்டுக்கொண்டு அழிவை நோக்கி நகர்வதா ஜனாதிபதியுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் அமைச்சு ஒன்றை பெற்றுக் கொள்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்." என்றார்.

முன்னாள் அமைச்சர் தயா கமகே,

"கடந்த 15 - 20 வருடங்களில் தமிழ் மக்கள் திருக்கோவில், கல்முனை, நாவிதன்வௌி உள்ளிட்ட பல பகுதிகளில் வாழ்ந்தாலும், போதியளவு பொருளாதார வலுவை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே மக்களின் வளங்களை மேம்படுத்தும் நோக்கிலேயே இன்று அனைத்து கட்சியினரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறோம்.

இப்பகுதி மக்களின் கஷ்டங்களை எடுத்துக்காட்டி ஜனாதிபதியின் ஊடாக இப்பகுதியின் அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கிலேயே இன்று இங்கு கூட்டத்தை ஏற்படுத்தினோம். இப்பகுதி மக்கள் நாட்டின் நெற் உற்பத்தியில் பெருமளவான பங்களிப்பை வழங்குகிறார்கள். திருகோணமலையில் அமைக்கப்படும் தொழில் வலயத்தை அம்பாறை வரையில் விரிவுபடுத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார்.

எதிர்தரப்புகளில் இருந்த மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் வெற்றிக்காக ஒன்றுபட்டிருப்பதால் அபிவிருத்திச் செயற்பாடுகளையும் ஒன்றுமையாக முன்னெடுக்க முடியும். எனவே இரு வருடங்களுக்கு மக்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள் இனியும் வரக்கூடாது என்றால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆட்சியில் அமர்த்த வேண்டியது அவசியமாகவுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர்,

"இந்த நாட்டின் எதிர்காலம் என்பது நாட்டின் தலைவரின் வழிகாட்டலில் உள்ளது. இன்று எமது  மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட்டுள்ளது. அரச காணிகள் அவர்களுக்கு முழு உரிமையுள்ள உறுதிப்பத்திரங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளின் உரிமைகளும் சொந்த வீடுகளாக வழங்கப்பட்டுள்ளன. இவை எதிர்காலத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எமக்கு இரண்டு வருடங்கள் சேவை செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்து இன்னும் 05 வருடங்களுக்கு ஜளாதிபதியாக தெரிவு செய்தால், நாம் உரிமையுடனும் நெஞ்சை நிமிர்த்தியும் அவர்களிடம் எமது மக்களுக்கான தேவைகளை கேட்க முடியும். வெறும் வெட்டிப்பேச்சுக்காக தேவையற்ற தேசிய வாதத்தைப்  பேசிக்கொண்டு எமது இருப்பைப் பாதுகாக்கக் கூடிய சூழலை இழந்து விடுகின்றோம்.

ஒரு கடதாசியில் சீனி என்று எழுதிவிட்டு அதனை சுமைத்துப் பார்த்தால் இனிக்காது. ஏனைய வேட்பாளர்கள் அந்த வெற்றுக் கோசங்களையே இடுகிறார்கள். ஒருவர் எதிர்காலத்தில் என்ன செய்வார் என்பதை விட நிகழ்காலத்தில் என்ன செய்தார் என்பதே முக்கியம். அவ்வாறு செய்துகாட்டியவரே எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.  

ஒரு வேலையைச் செய்ய அதனை செய்யக் கூடிய பொருத்தமானவருக்கே வழங்க வேண்டும். புதிது, புதிதாக வந்து வெறுமனே கோசமிடுவோரிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் தலைநிமிர முடியாத சூழல் ஏற்படும். ஜனாதிபதித் தேர்தல் என்பது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது. எனவே, அதில் எமது வாக்கு மிக முக்கியமானது. எனவே, இந்த தேர்தலில் நாம் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

எமது தேவைகளை கேட்டறியும் ஒருவரிடமே நாம் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். இன, மத பேதமின்றி செயற்படும் ரணில் விக்ரமசிங்கிவிடமே எமக்கான உரிமைகளைப் பெற முடியும். நாம் இந்த ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் ஒவ்வொரு தமிழனும் வேதனைப்படுவான். நிம்மதியற்று அழுவான்.  எனவே எமக்கு சேவைச் செய்தவரை எதிர்காலத்திலும் மறக்காது அவரை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்வோம்." என்றார்.

Read more