தேர்தல் விஞ்ஞாபனங்களின் ஊடாக பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் அன்றி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு நிரந்தரமாக நிவாரணம் வழங்க முடியும்

• நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான சரியான திட்டம் என்னிடம் உள்ளது.

• பொருளாதாரச் சவாலுக்குப் பயந்து ஓடிய குழுவுடன் முன்னோக்கிச் செல்வதா அல்லது நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்த குழுவுடன் முன்னோக்கிச் செல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

• தேர்தல் பிரகடணங்களில் போலி வாக்குறுதிகளை வழங்குவதை விடுத்து பொருளாதாரத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தினால் மாத்திரமே மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்  -கண்டியில் ஜனாதிபதி தெரிவிப்பு.

தேர்தல் பிரகடனங்களில் போலி வாக்குறுதிகளை வழங்குவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதனை செய்ய முடியுமெனவும் வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக ஐந்தாண்டு திட்டமொன்று தன்னிடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த திட்டத்தை செயற்படுத்தி பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதோடு உணவுப் பொருட்களின் விலையை குறைத்து மக்களின் வரிச்சுமையை குறைப்பதாகவும் உறுதியளித்தார்.

கண்டி பூஜாபிடிய மாரதுகொட மைதானத்தில் இன்று (27) நடைபெற்ற "இயலும் ஸ்ரீலங்கா" பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்‌ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

''நான் வங்குரோத்து அடைந்த நாட்டையே ஏற்றுக்கொண்டேன். அப்போது வரிசை யுகமும் உரத் தட்டுப்பாடும், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவிய நாட்டையே காண முடிந்தது. ஆனால் இன்று எந்த தட்டுப்பாடும் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

அதன் அடுத்த கட்டத்தையே ஜனாதிபதி தேர்தல் தீர்மானிக்க போகிறது. அன்று வாழ முடியாத நிலைமை காணப்பட்டது. இன்று ரூபாயின் பெறுமதி வலுவடைந்தது வாழ்க்கை சுமை குறைந்துள்ளது. அதிலிருந்து முன்னோக்கி செல்வதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியே சிந்திக்க வேண்டும்.

பொருளாதாரத்தைப் பலப்படுத்தியே வாழ்க்கை சுமையை குறைத்தோம். கேஸ், எரிபொருள் விலைகள் குறைந்துள்ளன. அன்று அந்த நிலைமை இருக்கவில்லை. இந்த நிலையைப் பாதுகாப்பதா அல்லது கைவிடுவதா என்ற கேள்வியே இப்போது இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும். அவர்கள் அதற்கான வழிகாட்டல்களை வழங்குவர்.

மறுமுனையில் ஜே.வி.பி.யும் ஐக்கிய மக்கள் சக்தியும் சலுகைகயை வழங்குவதாக உறுதியளிக்கின்றன. பொருட்களின் விலையைக் குறைக்கப் போதாகவும் கூறுகிறார்கள். சலுகை வழங்குவதாகச் சொல்லிக் கொண்டு நாட்டின் வருமானத்தை குறைக்க முடியாது.  

இன்று ஓரளவு மொத்த தேசிய உற்பத்தியை நாம் 90 பில்லியன் ரூபா வரையில் அதிகரித்து வருகிறோம். ஐக்கிய மக்கள் சக்தியும் ஜே.வீ.பியும் வருமானத்தை குறைக்கும் திட்டத்தையே சொல்கிறார்கள். நாம் அஸ்வெசும, உறுமய போன்ற நலன்புரித் திட்டங்களையும் நாம் செயற்படுத்தினோம். வருமானத்தை குறைத்தால் அவற்றை செய்ய முடியாது.

அதனால் இரவில் விழுந்த குழியில் பகலில் விழ முடியாது. மக்களுக்கு நிவாரணம் வழங்கு ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்துவதே சிறந்தாகும். அவர்கள் 2022 இன் நிலைமைக்கு மீண்டும் கொண்டு செல்ல மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதற்கு பதிலளித்தால் அவர்களை நம்பலாம். என்னிடத்தில் அடுத்த ஐந்து வருட அபிவிருத்திக்கான திட்டங்கள் உள்ளன. தொழில் வாய்ப்புக்களை உருவாக்கவும் வருமானத்தை அதிகரிப்பதற்குமான திட்டங்கள் என்னிடம் உள்ளன.  

ஏற்றுமதி பொருளாதாரத்தைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டத்தை கொள்கை பிரகடணத்தில் சொல்வேன். தொங்கு பாலத்தில் சென்ற பயணத்தை நிறைவு செய்வோம் என்று நாம் கூறும்போது, பாலத்தின் இரு பக்கங்களையும் வெட்டிவிடுவோம் என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர். எனவே நாட்டை சுமூக நிலைக்கு கொண்டு வந்த குழுவுடன் பயணிப்பதா அல்லது சவால்களை ஏற்றுகொள்ளாமல் ஓடி ஒளிந்தவர்களுடன் பயணிப்பதா என்பதை நாட்டு மக்கள் தீர்தானிக்க வேண்டும்.

அதற்காகவே சிலிண்டரை சின்னமாக தெரிவு செய்தேன். சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர் இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்." என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன:

"எதிர்கட்சித் தலைவர் பதில் பிரதமராக கருதப்பட வேண்டியவர். மக்கள் கஷ்டப்படும் போது அவர் என்ன செய்தார். நாட்டில் முதல் முறையாக பிரதமர் பதவியை யாசகம் அனுப்பிய வேளையிலும் எவரும் ஏற்க முன்வரவில்லை. அப்போது தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாம் தெரிவு செய்தோம்.

நாம் அன்று அதனை செய்திருக்காவிட்டால் இன்று நாடு எங்கிருக்கும் என்பதையும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உரிய நன்றிக் கடனை மக்கள் செலுத்த வேண்டும் என்பதையும் மறக்கக் கூடாது. இன்னும் ஐந்து வருடங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை ஆள வேண்டும். நாட்டு மக்கள் வரிசைகளில் அல்லல்படாத, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நிபந்தனையை மட்டுமே நாங்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்திருக்கிறோம்.

அதேபோல் தடைப்பட்ட அனைத்து அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பிக்கவும் ஜனாதிபதி வழி செய்திருக்கிறார். எனவே தற்போது அவசர சிகிச்சை பிரிவிற்குள் இருக்கின்ற நாட்டின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதையே இந்த ஜனாதிபதி தேர்தல் தீர்மானிக்கப் போகிறது." என்றார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே:

"சஜித் பிரேமதாசவிற்கும் அனுரகுமார திசாநாயக்கவிற்கும் ரணில் விக்ரமசிங்கவே அரசியல் ஆசான். அவர்கள் இன்று தமது ஆசானைத் தோற்கடிக்க பார்க்கிறார்கள். அது அவர்களால் முடிந்த காரியம் அல்ல.

சஜித்தும் அனுரவும் 25 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருந்துள்ளனர். சொந்த கிராமங்களில் இருக்கின்ற மக்களுக்காக கூட அவர்கள் எதனையும் செய்ததில்லை. ஆர்ப்பாட்டக் காரர்கள் பாராளுமன்றத்தை முடக்க முற்பட்டபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இடமளிக்கவில்லை.  இல்லாவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்படும் யுகம் நீடித்திருக்கும்.

சஜித் பிரேமதாச உயர்ந்தவருக்கு காவலர் தொழிலும் உயரம் குறைந்தவருக்கு சாதாரண தொழிலும் வழங்கியது நாட்டு மக்களுக்குத் தெரியும். அப்படியொரு தலைவருக்கு நாட்டை கையளிக்க வேண்டுமா? அதனால் நாட்டு மக்கள் மூச்சுவிடும் நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிப்பதே காலோசிதமானதாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்ய பாராளுமன்றத்தில் வாக்களித்த போது எனது கைகள் நடுங்கின. ஆனால் இம்முறை எந்த தயக்கமும் இன்றி அவருக்கு நான் துணிச்சலாக வாக்களிப்பேன்." என்றார்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம:

"இன்று வாக்குச்சீட்டில் 39 வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளன. நாடு நெருக்கடியில் தவித்த வேளையில் இந்த தலைவர்கள் எவரும் முன்வரவில்லை. அன்று அவரை முதுகெலும்பு இல்லாத தலைவர் என்று சித்தரித்தேன். அந்த பாவத்தை நிவர்த்திக்கவே இன்று ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவிற்கு வாக்கு கோரி வந்திருக்கிறோம்.

நாட்டை ஏற்றுக்கொண்ட இரு வருடங்களில் சுமூக நிலைமைக்கு கொண்டு வந்துள்ள ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியம், பெரிஸ் கழகம், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட தரப்புக்களின் தலைமைகளுடன் பேசி நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டு கடன் மறுசீரமைப்பு என்ற கட்டத்தை அடைந்துள்ளார்.

கஷ்ட காலத்தில் பிரசித்தமற்ற தீர்மானங்களை மேற்கொண்டு நாட்டு மக்களுக்கு சிறந்த பலன்களைப் பெற்றுத் தந்துள்ளார். சஜித் பிரேமதாச கூறுவதை போன்று பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டுமானால் அதற்கு அலாவுதீனின் அற்புத விளக்கு தான் தேவைப்படும். எதிர்கட்சியின் செப்டெம்பர் 21 வரையில் பொய்களை சொல்ல முடியும். மறுதினம் முதல் நாட்டை கொண்டுச் செல்லக்கூடிய தலைவர் யார் என்பதையை மக்கள் சிந்திக்க வேண்டும்.

பாராளுமன்றத்திற்கு தீவைக்கச் சென்ற தலைவர்கள் இன்று நாட்டைப் பொறுப்பேற்க வந்திருப்பது வேடிக்கையானது. இராணுவத்தில் சேவையாற்றி இந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரராக இருந்தும் கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அனுபவமின்றி நாட்டை நிர்வகிக்க முடியாத நிலைமை உருவானது. அதே தவறை மீண்டும் செய்யக்கூடாதென நாம் கற்றுக்கொண்டுள்ளோம். நாட்டு மக்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளது." என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே:

"நான் எனது அரசியல் வாழ்வில் ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கவில்லை. கடந்த முறை எமது தாய் கட்சியான சுதந்திர கட்சியின் மேடையில் கூட ஏறவில்லை. ஆனால் இம்முறை மாறுபட்ட நிலைமையே காணப்படுகிறது. பொதுஜன பெரமுனவின் 72 உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருக்கின்றனர்.

எதிர்கட்சிகளின் தலைவர்கள் சஜித்தின் மேடையில் ஏறும்போதும், அவர்களின் கட்சி உறுப்பினர்கள் கூட்டாக வந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோடு இணைந்து கொள்கிறார்கள். 2022 ஆம் ஆண்டில் மக்கள் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொண்ட வேளையில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சஜதித்துக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அனுரவும் சவாலை ஏற்கவில்லை.

ரணிலுக்கு ஒரேயொரு அழைப்புதான் விடுக்கப்பட்டது. நாட்டை ஏற்று, நாட்டை மீட்டெடுத்துத் தந்தார். அன்று நாட்டின் மத்திய வங்கியில் கூட பணமிருக்கவில்லை. 14 மணித்தியாலம் மின் வெட்டு காணப்பட்டது. அப்போது நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துணிச்சலான பல தீர்மானங்களை எடுத்தார். மக்களை ஏமாற்ற இலசவமாக நிவாரணங்களை வழங்காமல் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான பணிகளைச் செய்தார்.

அதனால் அதனால் அவர் நாட்டை தொங்கு பாலத்திலிருந்து காப்பாற்றி நீண்ட தூரம் கொண்டு வந்துவிட்டார். இந்த தேர்தலில் அவரின் பாதையை மாற்றினால் நாடு பெரும் பாதகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்." என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில்:

"பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி தீர்வு கண்டிருக்காவிட்டால் இன்று நாட்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தக்கூடிய நிலைமை உருவாகியிருக்காது. அதனால் நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாத்த தரப்பினர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்கு கோரும் தகுதி எமக்கு உள்ளது." என்றார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதித் தலைவர் பாரத் அருள்சாமி:

"தோட்ட தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்தது. அதற்கான தீர்வைப் பெற்றுத்தர ஜனாதிபதி வழி செய்தார். அதேபோல் தோட்ட மக்கள் வாழும் பகுதிகளை கிராமங்களாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இவ்வாறான தலைவரையே நாட்டின் அனைத்து இன மக்களும் எதிர்பார்த்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. எதிர்கட்சியினர் தோட்ட தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்கள் ஆக்கப்போவதாக கூறுகின்றனர். அதனை எவ்வாறு செய்வார்கள் என்று இன்றுவரை கூறவில்லை. ஆனால் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் அதற்குரிய பணிகள் அனைத்தையும் நாம் ஆரம்பித்திருக்கிறோம்." என்றார்.

Read more