மக்கள் வரிசைகளில் அல்லல்பட்டபோது தப்பியோடிய அனுரவும் சஜித்தும் ஜனாதிபதி பதவியை கோர தகுதியற்றவர்கள்

• 'இயலும் ஸ்ரீலங்கா' நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்.

• செப்டம்பர் 21 சிலிண்டருக்கு வாக்களித்து அந்த வேலைத் திட்டத்தைப் பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வோம் - ருவன்வெல்லவில் ஜனாதிபதி தெரிவிப்பு.

பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்காக ஒத்துழைக்குமாறு முன்வைத்த கோரிக்கையை ஏற்காமல் தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்கள் முன்வந்து ஜனாதிபதி பொறுப்பை கோருவது நகைப்புக்குரியது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ருவன்வெலயில் இன்று (09) பிற்பகல்  நடைபெற்ற 'ரணினால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முன் வராத சஜித்தும் அநுரவும் தற்போது மக்கள் முன்வந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர் என்றும் கூறினார்.

'இயலும் ஸ்ரீலங்கா' நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டம் என்றும், எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதியிலிருந்து அந்த வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் வழங்குவதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

"மக்களுக்கு உணவு, டீசல், கேஸ், மருந்து இல்லாத வேளையில் நாட்டை ஏற்றுக்கொண்டேன். வேறு எவரும் வரவில்லை. மக்கள் கஷ்டங்களை வேடிக்கைப் பார்க்க முடியாது என்பதாலேயே நாட்டை ஏற்றுக்கொண்டேன்.

இன்று எல்லாப் பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதற்காக ஒன்றுபடுமாறு அனுரவிற்கும் சஜித்துக்கும் அன்றும் அழைப்பு விடுத்தேன். அவர்கள் வரவில்லை. மாறாக எனக்கு எதிராக புறக்கணிப்பு செய்தனர். இன்று அவர்களுக்கு வாக்கு கோர என்ன உரிமை இருக்கிறது.

என்னுடன் இருக்கும் அமைச்சர்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினர். சர்வதேச நாணய நிதியம், உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரோடும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக பேசினேன்.  IMF நிபந்தனைகளுடன் உதவியது. பல கஷ்டங்களுடன் செலவுகளைக் குறைத்து வரவு செலவு திட்டத்தைத் தயாரித்தோம். ஒரேயொரு மாற்று வழியாக வற் வரியை அதிகரித்தோம்.

கஷ்டமான தீர்மானம் என்பதை அறிவோம். அதனால் இன்று ரூபாய் வலுவடைந்திருக்கிறது. பொருட்களின் விலை குறைத்திருக்கிறது. மக்களுக்கு நிவாரணம் கிடைத்தது. அன்று கஷ்டமான தீர்மானங்களை எடுத்திருக்காவிட்டால் கஷ்டங்கள் நீடித்திருக்கும். மக்கள் திட்டித்தீர்த்தாலும் சரியான தீர்மானங்களை எடுப்பதில் பின்வாங்க மாட்டேன்.

எவ்வாறாயினம், இன்று மக்களுக்கு சலுகைகளும் நிவாரணங்களும் கிடைக்கின்றன. அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கியுள்ளோம். இதே வளர்ச்சியை முன்நோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டும். அதற்காகவே இயலும் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை செயற்படுத்தியிருக்கிறோம்.

இப்போது ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதே எனது இலக்கு. அதற்கு இடமளியுங்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தையும் பாதுகாப்போம். புதிய தொழில் வலயங்கள், டிஜிட்டல் பொருளாதாரம் , சிறு மற்றும் மத்திய தர பொருளாதாரத்தைப் பலப்படுத்திக் கொண்டு முன்நோக்கி கொண்டுச் செல்வோம்.

இந்த பொருளாதாரத்தைப் பலப்படுத்தி நாட்டு மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கவே மக்கள் ஆணையை கேட்கிறேன். சஜித் எல்லாவற்றையும் இலவசமாக தருவேன் என்கிறார். மறுமுனையில் ஜே.வீ.பி 'மக்களுக்கு நல்வாழ்வு' என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ளது. ஆனால் எனது ஆட்சியில்தான் மக்கள் நல்வாழ்வை உணர முடிந்து.  

ஜே.வீ.பி முன்வைத்துள்ள வரவு செலவு திட்ட யோசனையும் முரண்பாடுகள் நிறைந்ததாக காணப்படுகிறது. வருமானத்தை பெருக்குவதற்கான வழிமுறைகள் அதற்கு இல்லை. 4000 பில்லியன் ரூபாய் இடைவௌியாக காணப்படுகிறது. அந்த இடைவௌியை நிவர்த்திக்கும் முறைமைகள் பற்றி அவர்கள் பேசவில்லை. எனவே அது குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறான யோசனைகள் நடைமுறைக்கு வந்தால் டொலரின் பெறுமதி 425 ரூபாய் வரையில் அதிகரிக்கும். அதனால் கோட்டாபய ராஜபக்‌ஷவவின் காலத்தை விடவும் கஷ்டமான காலத்தை நோக்கி செல்ல முடியும். மக்கள் கஷ்டம் புரியாதவர்களிடம் எப்படி ஆட்சியை கொடுப்பது. மக்கள் மீது கஷ்டத்தை சுமத்தவே அனுர முயற்சிக்கிறார். கேள்வி கேட்கும்போது பாய்ந்தோடுகிறார்கள். எனவே, சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது ரூபாவும் வலுவடையாது." என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,

"இரண்டு வருடங்களுக்கு முன்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச முடியாது. நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியாது என்று சொன்னவர்கள் எம்மோடு இல்லை. கஷ்டத்திலிருந்து நாட்டை மீட்டவர்களே எம்மோடு உள்ளனர்.

இன்று ஐக்கிய மக்கள் சக்தியும், ஜே.வீ.பியும் தேர்தல் வெற்றி உறுதி என்று சொல்லில்கொண்டிருந்த வேளையில் தபால் வாக்குகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சாதகமாக வந்திருந்தால் அமைதியாகியுள்ளனர். இன்று அவர்களிடம் சிறந்த அணி உள்ளதென கூறுகிறார்கள். நல்ல தலைவர் இல்லாத அணி எப்படி சாதிக்கும்.

எனவே, நல்ல குழுவும் அதற்கு தகுந்த தலைவரும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மேடையிலேயே உள்ளனர். அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை தேர்தல் விஞ்ஞாபனங்களில் பதிவிட்டு அதனை மக்களுக்கு புதிதாக காண்பிக்க எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர். எனவே இளையோர் வரலாற்று காலங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டுமா, இல்லாவிட்டால் எதிர்காலத்தை வலுவாக்கிக்கொள்வதாக என்பதை தீர்மானிக்க வேண்டும்.

இளையோரை பொய்யான வாக்குறுதிகளை கூறி தம் பக்கம் ஈர்க்க பலரும் முயற்சிக்கலாம். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே இளையோர் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் சென்று உலக பொருளாதாரத்தோடு இணைவதற்கான திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே கூறியுள்ளார்." என்று தெரிவித்தார்.

Read more