செப்டம்பர் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்த வேண்டும்!

• இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்!

• தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் அமைக்கப்படும்!

• அம்பாறை வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும்!

• "ரணில் நல்லவர் அவரை சுற்றியிருப்பவர்கள் மோசமானவர்கள்" என ரிஷாத் பதியூதீன் கூறியுள்ளார். இம்முறை நடப்பது பாராளுமன்ற தேர்தல் அன்றி ஜனாதிபதி தேர்தலாகும்.  

• நான் நல்லவன் என்றால் எனக்கு ஆதரவளியுங்கள்: ரிஷாத் உள்ளிட்ட குழுவுக்கு அழைப்பு.

செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அடுத்த வருடம் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்பதுடன் சுயதொழில் பெறுவதற்காக 50 பேருக்கு நிதி நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தான் நல்லவராக இருந்த போதும் தன்னை சுற்றியிருப்பவர்கள் மோசமானவர்கள் என்று ரிஷாத் பதியூதீன் எம்.பி கூறியிருப்பதை நினைவுபடுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இம்முறை நடப்பது பாராளுமன்ற தேர்தல் அல்ல. மாறாக ஜனாதிபதி தேர்தலே நடக்கவுள்ளது என்றும் தெரிவித்தார்.  

பாராளுமன்ற தேர்தலிலேயே என்னை சுற்றியிருப்பவர்கள் யார் என்பது குறித்து தெரிவு செய்ய வேண்டும். எனவே நான் நல்லவனாக இருந்தால் எனக்கு ஆதரவளியுங்கள் என ரிஷாத்பதியூதீன் உள்ளிட்ட தரப்பினருக்கும் முஸ்லிம் காங்கிரஸூக்கும்  ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

ரிஷாத் பதியூதீன் அமைச்சராக இருந்தபோது பொருட்களின் விலையை குறைக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்திருந்தாலும், ஒருபோதும்  இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து பேசவில்லை என்றும் தனது தலைமையிலான அரசாங்கமே முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் அமைக்கப்படும் எனவும், அம்பாறை வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சம்மாந்துறை பொது விளையாட்டரங்கில் இன்று (31) நடைபெற்ற "இயலும்  ஸ்ரீலங்கா" வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இந்தப் பேரணியில் சம்மாந்துறையின் பெருந்திரளான மக்கள் அணிதிரண்டிருந்தனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

''இங்கு நடந்த கூட்டமொன்றில்

இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும். ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை அடுத்த வருடம் வழங்குவோம். விவசாயத்தை நவீனமயப்படுத்துவோம். புதிய தொழில்களை உருவாக்குவோம். சுய தொழில் கல்விக்காக 50 ஆயிரம் பேருக்கு நிதி நிவாரணம் வழங்குவோம்.

சம்மாந்துறையில் 35 -40 ஆயிரம் ஏக்கர்கள் உள்ளன. நெல் உற்பத்தியை ஹெக்டயாருக்கு 8 மெட்ரிக் தொன்கள் வரை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நல்ல விலைக்கு கொள்வனவு செய்வோம். இந்த பகுதியில் நெல் உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்கும் வசதிகளை செய்ய எதிர்பார்கிறோம். திருகோணமலையில் 1500 ஏக்கரில் முதலீட்டு வலயமொன்றை அமைப்போம்.  அதனுடன் இணைந்த கைதொழில்பேட்டை அம்பாறையில் அமைக்கப்படும்.

தகவல் தொழில்நுட்பத் துறை பலப்படுத்தப்படும். விவசாயிகளுக்கு இலவச காணி உறுதிகள் வழங்குவோம். இவ்வாறான பல வேலைத்திட்டங்களுடன் வந்துள்ளேன். அவற்றை முன்னோக்கி கொண்டு செல்வேன். செப்டெம்பர் 22இற்குப் பின்னர் முன்னோக்கி கொண்டு செல்வேன்.

பால் உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிப்போம். அதிகளவில் பால் உற்பத்தி செய்யப்பட்டால் எதிர்கட்சித் தலைவருக்கும் பால் அனுப்பி வைக்க முடியும்.  

விவாசயத்திற்குத் தேவையான உரம் பெற்றுத்தருவோம். தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு மருத்துவ பீடத்தை அமைத்துத் தருவோம். அம்பாறை வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றியமைப்போம். அனைத்து இனத்தவரும் அதனால் பயனடைவர். பாயிஸ் முஸ்தபாவுடன் பேசி இந்த பல்கலைக்கழகத்தை மேலும் விரிவுபடுத்துவோம்.  

அதற்கு ஆதரவளிக்க செப்டெம்பர் 21 கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது எதிர்கட்சி தலைவருக்கு அனுப்ப பாலும் இருக்காது." என்று ஜனாதிபதி தெரிவித்தார்.  

அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி. அலி சப்ரி,

''இம்முறை ஜனாதிபதி தேர்தல் மிக முக்கியமானது. அதில் தலையான தீர்மானத்தை எடுத்தால் மக்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும். 2022 இல் நடந்தது மீண்டும் நடந்தால் நாடு பல வருடங்கள் கஷ்டப்பட நேரிடும். லெபனன் இன்று மிக இக்கட்டான நிலைமைக்கு முகம்கொடுத்துள்ளது. கிரிஸூம் அபிவிருத்தி நாடாக இருந்தே இவ்வாறான நிலைமையை எதிர்கொண்டது.  

மாற்றம் வேண்டும் என வாக்களித்தன் பலனாகவே அந்த நாடுகள் கஷ்டத்தை எதிர்கொண்டன. பல வேட்பாளர்கள் போலி வாக்குறுதிகளை வழங்கினாலும், இக்கட்டான சூழலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே இருந்தார்.

இரண்டு வருடங்களுக்கு பின்னர் கேஸ், உரம், மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. போலி வாக்குறுதிகளை பலர் அளிக்கலாம். ஆனால், அதனை நிறைவேற்றுவது கஷ்டாகும். செலவுகளை முறையாக நிர்வகிக்காவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடிக்கு முகம்கொடுக்கும்.

சஜித் பிரேமதாசவின் தந்தைக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டபோது ரணில் விக்ரமசிங்கவே அவரைக் காப்பாற்றினார். நாட்டை கட்டியெழுப்பிய தலைவருக்கு ஐந்து வருடங்கள் நாட்டை விட்டுக்கொடுக்கும் பொறுமை சஜித் பிரேமதாசவுக்கு இல்லை." என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ். எம். எம். முஷாரப்,

" 2022 இல் கோட்டாபய ராஜபக்‌ஷவின் வாகனத்தில் நாம் ஏறிச் சென்றோம். ஆனால் நடுக் காட்டில் எங்களை அவர் கைவிட்டார். அதிலிருந்து மீட்க அனுர குமாரவும், சஜித்தும் அங்கு வந்தனர். அவர்களிடம் வாகனத்தை ஏற்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கோரினார்.  

ஆனால் அவர்கள் இருவரும் மறுத்துவிட்டனர். புதிய வாகனத்தை தந்தால் மட்டுமே அவர்கள் ஓட்டத் தயாராக இருந்தனர். வாகனத்தை சுற்றிப் பார்த்துவிட்டு ஓடிவிட்டனர்.  ரணில் விக்ரமசிங்க என்ற முதிர்ந்த மெகானிக் அந்த இடத்திற்கு வருகிறார். அவர் அனுபவம் நிறைந்த மெகானிக். அவருக்கு ஒருபோதும் நாட்டு மக்கள் முழுமையான அதிகாரத்தை வழங்கவில்லை.  மைத்திரிபால சிறிசேன போன்றவர்களுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கிவிட்டு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு சில அதிகாரங்களை மட்டுமே மக்கள் வழங்கினர்.

நடுக்காட்டில் சிக்கிய வாகனத்தில் இருந்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் தங்களை மீட்குமாறு கோரினர். ஜனாதிபதியும் அவர்களை மீட்டு காட்டைக் கடந்து செல்ல வீதியை நெருக்கு வரும்போது, முதலில் வாகனத்தை விட்டு ஓடிய அனுரவும் சஜித்தும் வாகனத்தை திருத்துகிறோம் என்று கேட்கிறார்கள்.

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏடுகள் குறைவாக இருக்கலாம். ஆனால் அதற்குள் இருக்கின்ற விடயங்கள் வலுவானவை. எதிர்கட்சியினர் வரியை குறைப்போம் என்கின்றனர். கோட்டாவின் இரண்டாம் பாகம் போல அனுர செயற்படுகிறார். இவர்கள் வெனிசுலா, கிரீஸ் போன்ற நிலையை உருவாக்கவே முயற்சிக்கிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனியொரு எம்.பியாக பாராளுமன்றத்திற்கு வந்தபோதே பொருளாதார சர்தேச நாணய நிதியத்திடம் சென்று உதவி கோராவிட்டால் நாடு வங்குரோத்தாகும் என்று எதிர்வு கூறினார். அதனை கருத்தில் கொள்ளாத காரணத்தினாலேயே நாடு வங்குரோத்தடைந்தது. இனியும் அந்த தவறுகளை செய்யக்கூடாது." என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாவுல்லா,

"நாட்டின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்வு கண்ட பின்னர், 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற அனுரகுமாரவும், இன்னும் "எல் போர்ட்" இனை கழற்றாத சஜித்தும் ஜனாதிபதி பதவியை கோருவதில் இருந்தே அவர்களுக்கு அனுபுவம் இல்லை என்பது புலனாகிறது.

எவ்வாறாயினும் ஹக்கீம் இருக்கும் பக்கம் ஒருபோதும் வெல்வதில்லை என்ற உண்மை மக்களுக்கு தெரியும். நாட்டுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அனுபவத்தினால் தீர்வு சொல்லக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே. இலங்கையின் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ வழி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை மட்டுமே நாம் ஜனாதிபதியிடம் வைத்திருக்கிறோம்.  

ஜனாசா விவகாரத்தில் கடந்த அரசாங்கத்தின் பிழைக்காக மன்னிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டது வரலாற்று நிகழ்வாக பதிவிடப்பட வேண்டும்." என்றார்.

முன்னாள் ஆளுநர் எம்.அசாத் சாலி,

"கடன் செலுத்த முடியாத நாட்டை மீட்டெடுத்து இந்தளவு மக்களை கொண்டு கூட்டம் நடத்தும் நிலைக்கு கொண்டு வந்திருப்பதே பாரிய வெற்றியாகும். சஜித் அணியில் இறுதியாக 20 பேர் மட்டுமே எஞ்சப் போகிறார்கள்.  ஏனையோர் ஜனாதிபதியுடன் கைகோர்க்கவுள்ளனர்.

அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இருப்பதாக போலி தரவுகளை வௌியிடுகிறார். ஜே.வி.பியின் வரலாறுகள் மக்களுக்கு இன்றும் மறக்கவில்லை. அவ்வாறானவர்களிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க முடியுமா.?

மறுமுனையில் சஜித் பிரேமதாச சம்மாந்துறையில் 300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்று வரையில் வீடுகள் கட்டவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வந்து ஜனாதிபதியாக இருக்கின்றார். அவற்றை வெற்றிக்கொள்ளும் சர்வதேச தொடர்புகளும், நாட்டின் செயற்பாடுகள் பற்றிய அறிவும் பாராளுமன்றத்தில் வேறு எவருக்கும் இல்லை." என்றார்.

அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Read more