இந்நாட்டில் பெண்களை வலுவூட்டுவதற்கான பிரதான திட்டத்தை தயாரிப்பதற்காக அடுத்த ஆண்டு தேசிய மகளிர் மாநாடு

• கடந்த பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்; பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து அனைத்து பெண்களுக்கும் நிவாரணம் வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

• மேலும் பெண்களுக்கு நீதியை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறேன் - பெண்கள் மாநாட்டில் ஜனாதிபதி  தெரிவிப்பு.

இலங்கையில் பெண்களை வலுவூட்டுவதற்கான பிரதான திட்டத்தை தயாரிப்பதற்காக அடுத்த வருடம் பெண்கள் மாநாடு ஒன்று நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களை வலுவூட்டுவதற்கும் அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் பல புதிய சட்ட சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகத்  தெரிவித்த ஜனாதிபதி, இந்நாட்டில் கடந்த பொருளாதார நெருக்கடில் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து முழுப் பெண் சந்ததியினருக்கும் நிவாரணம் வழங்க முடிந்ததில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

காலி முகத்திடல் ஹோட்டலில் நேற்று (13) இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மகளிர் மாநாட்டில் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த நாட்டின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கத் தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என மகளிர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க;

“உங்களில் பலர் சுயதொழில் செய்பவர்கள் அல்லது சிறு - நடுத்தர தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை செவிமடுப்பதை மிகவும் முக்கியமானதாக நான் கருதுகிறேன்.

அரசாங்கம் என்ற வகையில், அண்மைய பொருளாதார நெருக்கடியால்  ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்து நீங்கள் முன்னேறுவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதிலேயே எமது கவனம் உள்ளது. மேலும், கடந்த கொவிட்-19 நோய்த்தொற்று சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களில் ஈடுபட்டுள்ள பலருக்கு சிக்கல்களை ஏற்படுத்தியது. பொருளாதார நெருக்கடியால், இந்தப் பிரச்சினைகள் மேலும் அதிகரித்தன.

எந்த ஒரு தலைவராலும் நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்க முடியாது போனதால் ஏற்பட்ட பொருளாதார - அரசியல் நெருக்கடிகளால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும், அரசியல் கட்டமைப்பும் சரிந்தது. எனவே, நாம் இப்போது அந்த சமூகக் கட்டமைப்பை மீட்டெடுக்க வேண்டும். நாம் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். பழைய முறையை நம்பி இருக்க முடியாது. அதுதான் எனக்கும் மற்ற வேட்பாளர்களுக்கும் உள்ள வித்தியாசம். அவர்கள் பழைய முறையை மீட்டெடுக்க விரும்புகிறார்கள், ஆனால் அது நாட்டை அழிக்குமே தவிர, மேம்படுத்தாது.

நாம் ஏற்கனவே இருந்த நிலைக்கு மீண்டும் திரும்பக் கூடாது. எனவே, ஏற்றுமதி பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் நீண்ட கால மாற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும். விவசாய நவீனமயமாக்கல் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளில் கவனம் செலுத்தி, ஏற்றுமதி சார்ந்த டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறோம். இந்த மாற்றத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.

அங்கு நாம் இரண்டு முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தியுள்ளோம். முதலாவதாக, பெண்களை வலுவூட்டும் சட்டத்தின் மூலம் இந்நாட்டில் உள்ள பெண்கள் சமூகத்தை வலுவூட்டுவதும் ஆண்-பெண்  சமத்துவ சட்ட மூலத்தையும் முன்வைத்துள்ளோம். பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் சமத்துவத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இது முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பாலின மக்களையும் அரசு சமமாக நடத்தும் சூழல் உருவாகிறது. மேலும் பெண்களுக்கு நீதி கிடைக்க அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றுவேன்.

பெண்களை வலுவூட்டல் மற்றும் சமத்துவம் என்று வரும்போது, இவற்றை நாம் எவ்வாறு பரந்த அளவில் செயல்படுத்துகிறோம், நாம் என்ன பங்கு வகிக்க வேண்டும் என்பதுதான் நாம் எதிர்கொள்ளும் முக்கிய கேள்வி. அரசியலில் பெண்களைப் பற்றி மட்டும் பேசாமல், வர்த்தகம் மற்றும் முகாமைத்துத் துறையில் உள்ள பெண்களைப் பற்றியும் பேச வேண்டும். அதன் விகிதம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். இலங்கையில் நாம் இன்னும் பாலின விகிதங்களை நிறுவவில்லை.

இரண்டாவதாக, சமூக நீதி ஆணையம் அமைப்பதில் எங்கள் கவனம் உள்ளது. இது சமூக நீதியை மேம்படுத்த உதவும் மற்றொரு சட்டமாகிறது. வர்க்கம், சாதி மற்றும் பிற பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட சார்புகளைக் கையாள்வதற்கான சவாலை நாம் கடக்க வேண்டும். இதைச் செய்தால், நியாயமான சமுதாயத்தையும், பல்வேறு நிலைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்ய வேண்டும்.

அடுத்த வருடம் இலங்கையில் பெண்கள் வலுவூட்டலுக்கான பிரதான திட்டம் ஒன்றை தயாரிக்கும் வாய்ப்பு பெண்கள் அமைப்புகளுக்கு கிடைக்கும் என்பதையும் கூற வேண்டும். நான் கூறுவதைக் கேட்க இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, செப்டம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டரின் முன் உங்கள் வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல;

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆண்-பெண் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் சமுதாயத்திற்கு பெண்களின் மகத்தான பங்களிப்பை பாராட்டும் பண்பு, உண்மையில் பாராட்டுக்குரியது.

உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சில குறிப்பிடத்தக்க பெண் கதாபாத்திரங்களுடன் பணிபுரிந்துள்ளீர்கள், எனவே இது நடந்ததில் ஆச்சரியமில்லை. ஜனாதிபதி அவர்களே, மறைந்த உங்களது தாயார் திருமதி நாளினி விக்ரமசிங்க ஊடகத்துறையில் முன்னோடியாக திகழ்ந்தவர், இந்த சந்தர்ப்பத்தில் இன்று எம்முடன் இருக்கும் உங்கள் அன்பு பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க இலங்கையின் அறிவுமிக்க பெண்களில் ஒரு முக்கிய இடத்தில் உள்ளார். மற்றும்  ஜனாதிபதி பாரியாராக பெரிதும் கௌரவிக்கப்படுகிறார்.

பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பெண்கள் வலுவூட்டல் ஆகியவற்றிற்காக வலுவாக செயற்படும் திருமதி ஷானிகா விக்ரமசிங்கவையும் நாம் நினைவுகூர வேண்டும். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் அவர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டார். உங்கள் தொழில் வாழ்க்கை முழுவதும், இலங்கையில் உள்ள சுமார் 11 மில்லியன் பெண்களுக்காக அயராது வாதிட்டீர்கள். பெண்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும், பெண்களைப் பாதுகாப்பதற்கும், குறிப்பாக சவாலான காலங்களில் அவர்களை வழிநடத்துவதற்கும் நீங்கள் அன்றும் இன்றும் உங்களை அர்ப்பணித்துள்ளீர்கள்.

2022 இல் நீங்கள் இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது இலட்சக்கணக்கான இலங்கைத் தாய்மார் பெரும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டிருந்தனர். அனைத்து சவால்களையும் ஏற்றுக்கொண்டு, அந்த நிச்சயமற்ற தன்மையை நீக்குவதற்கு நீங்கள் உறுதியுடன் செயல்பட்டீர்கள்.

பெண்களுக்கு நீண்டகால ரீதியில் ஞாபகங்கள் இருக்கும். எனவே 2022 இல், இந்த நாட்டைப் பொறுப்பேற்றதன் மூலம், அவர்களுக்காக நீங்கள் முன்னெடுத்த பணிகளை எளிதில் மறக்க முடியாது. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைப் பெண்கள் ஜனாதிபதிக்கு தமது நன்றியை வெளிப்படுத்துவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல;

இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்ன செய்துள்ளார் என்பதை என் கண்ணால் பார்த்ததால்தான் நான் இந்த அரசியல் முகாமில் இன்று நான் நிற்கிறேன்.

இங்கு கூடியிருக்கும் பெண்களாகிய நீங்கள், இரண்டு வருட அனுபவத்தின் மூலம் அவரை மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கும் நம்பிக்கையைப் பெற்றுள்ளீர்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த இரண்டு வருடங்களில் எரிவாயு, எரிபொருள், உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்படுவதாக பலரும் பேசி வருகின்றனர். ஆனால் அஸ்வெசும, உறுமய போன்ற வேலைத்திட்டங்கள் மூலம் இந்நாட்டுப் பெண்களுக்கே அதிக நிவாரணம் கிடைத்தது என்பதை யாரும் பேசுவதில்லை.

பாராளுமன்ற மகளிர் மன்றத்தின் ஊடாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து இலங்கைப் பெண்களுக்கான பொறுப்பான பங்களிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. எங்களின் ஆலோசனைகளை அவர் கவனமாக அவதானித்தார் என்றே கூற வேண்டும். எனவே, பாராளுமன்றத்தில் மகளிர் மன்றம் மகளிர் நலனுக்காகப் பணியாற்றுவதற்கு மிகவும் வசதியான சூழல் உருவாக்கப்பட்டது.

மேலும், பெண்கள் சுயதொழில் தொடங்க கடன் வழங்குதல், ஈடு வைத்த தங்கப் பொருட்களுக்கு சலுகை வழங்குதல் போன்ற பல பணிகளும்,  நாடு முழுவதிலும் உள்ள  கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு அவரது தலைமையில் மேற்கொள்ளப்பட்டதுடன், அவை அனைத்தும் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண்ணையும் பலப்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் தனிப் பிரிவை நிறுவி அதற்காக பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமித்தார். இங்கு ஒரு பிரிவினருக்கு வேலை வாய்ப்பும், மற்றொரு பிரிவினரின் தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சட்டத்தின் பாதுகாப்பை மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். குறிப்பாக பெண்களை வலவூட்டும்  சட்டத்தின் மூலம் பெண்களின் பாதுகாப்பிற்காக அவர் எடுத்துள்ள நடவடிக்கைகள் பெண்களாகிய எமக்குக் கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும்.

பெண்கள் எழுப்பிய சில கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி

இலங்கை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நீங்கள் செயற்படுகிறீர்களா?

பதில்

நாங்கள் இப்போது பெண்களை வலுவூட்டும் சட்டத்தை முன்வைத்துள்ளோம். நான் ஜனாதிபதியாக இருந்த கடந்த இரண்டு வருடங்களில் மேற்பார்வை தெரிவுக் குழுவின் ஆதரவுடன் அந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தேன். அடுத்த கட்டம், சட்டத்தை எவ்வாறு திறம்பட செயல்படுத்துவது என்பதை தீர்மானிக்க வேண்டும். முதல் படியாக பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதும், பெண்கள் அதிகாரமளிக்கும் ஆணைக்குழு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பெண்களிடையே தேசிய அளவிலான கருத்தாடலை தொடங்குவதும் ஆகும்.

இருப்பினும், நாம் அதற்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் முக்கியம். எந்தெந்த பகுதிகளுக்கு உடனடி கவனம் தேவை, எவற்றை பின்னர் கையாளலாம் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். தெளிவான ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்குதல், முன்னுரிமைப் பகுதிகளைக் கண்டறிந்து, அது தொடர்பில் பயிற்சி அளிப்பது மற்றும் அமைப்புகளை உருவாக்குவது பெண்களை வலுவூட்ட இன்றியமையாததாகும்.

கீழ் மட்ட அளவில் பெண்கள் அமைப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அதிகமான பெண்கள் அமைப்புகளை நிறுவுவதை ஊக்குவிக்க வேண்டும். மேலும், கிராம மட்ட விவகாரங்களைக் கையாளும் மக்கள் சபையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது. இது ஆரம்பம்தான்.

பல்வேறு நிறுவனங்களில் பெண்கள் ஆலோசனைக் குழுக்களை நிறுவுவது எங்கள் இலக்குகளில் ஒன்றாகும். இதைச் செய்ய முடியும் என்றாலும், செயல்படுத்தும் திட்டங்களை வரைவதற்கு அதிகாரிகளை அனுமதிப்பதன் மூலம் மாத்திரமன்றி, ஒரு குழுவாக இந்த பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டியது அவசியம்.

கேள்வி

தாய்மாரான பெண்களை நாட்டின் தொழிலாளர் படையில் மீண்டும் இணைக்கவும், பெண் பட்டதாரிகளை மீண்டும் பணிக்குழுவில் இணைக்கவும் உங்களின் திட்டங்கள் என்ன?

பதில்

இந்த நாட்டின் தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்தங்களிலும் இது பற்றிய தகவல்கள் உள்ளன. எனவே, அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாம் தற்போது கவனம் செலுத்தியுள்ளோம்.

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க மற்றும் பெருந்தொகையான பெண்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Read more