சஜித்துக்கும் அனுரவுக்கும் ஜனாதிபதியின் பகிரங்க சவால்!

• மேடைகளில் வழங்கும் வாக்குறுதிகளின் உண்மைத்தன்மையை மக்கள் அறிந்து கொள்வதற்கு IMF உடன்  வெளிப்படையாக கலந்துரையாடலுக்கு வாருங்கள்.

• மக்களை ஏமாற்றி நாட்டை சீரழிக்காதீர்கள்!

• உண்மையான ஐ.தே.க ஆதரவாளர்கள் எப்போதும் நாட்டைப் பற்றி சிந்தித்து செயற்பட்டனர் -ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு.

இனியும் மக்களுக்கு பொய் சொல்லிக் கொண்டிருக்காமல் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைய மூலம் பகிரங்கமான கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு சவால் விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன் ஊடாக, மேடைகளில் அவர்கள் சொல்லும் விடயங்களில் உள்ள உண்மைத் தன்மையை மக்களால் கண்டு கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், அவ்வாறு நடந்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, வரிகளை குறைப்பதாகவும் பொருட்களின் விலைகளை குறைப்பதாகவும் தமது கொள்கைப் பிரகடனங்களில் சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திஸாநாயக்கவும் மக்களை ஏமாற்றி நாட்டை நாசமாக்க முயற்சிப்பதாகவும், இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும்  ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.  

பொருட்களின் விலைகளையும் வரிகளையும் குறைக்க தானும் விரும்புவதாகவும்,  எனினும், ரூபாயை பலப்படுத்தி, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் மாத்திரமே தன்னால் அதனைச் செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதனைத் தவிர வேறு மாற்றுவழி இருந்தால் உடனடியாக ஐ.எம்.எப் உடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் அதனை சமர்ப்பித்து கருத்தரிந்து கொள்ளுமாறு சஜித் பிரேமதாஸவிடமும் அநுர திசானாயக்கவிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

பிட்டகோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று பிற்பகல் (25) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விசேட சம்மேளனத்தில் பெருமளவிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய  ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கையைக் கட்டியெழுப்பும் பணியை மேற்கொள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கும் அவரின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கும் ஐ.தே.க ஆதரவாளர்களின் உடன்பாட்டை தெரிவிப்பதற்குமான பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்  பாலித ரங்கேபண்டாரவினால் கட்சி சம்மேளனத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பிரேரணையை ஐ.தே.க தேசிய அமைப்பாளர் சாகல ரத்னாயக்க வழிமொழிந்தார். அதனையடுத்து அனைவரும் கைகளை உயர்த்தி ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இதன் போது மறுசீரமைக்கப்பட்ட சிறிகொத்த கட்சி தலைமையகமும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு மேலும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

"நான் எதற்காக ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன். 1946 ஆற்றிய உரையில் இலங்கையை பாதுகாத்தால் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சியின் இருப்பு பாதுகாக்கப்படும் என்று டீ.எஸ். சேனநாயக்க கூறினார். எனவே ஐக்கிய தேசிய கட்சியினர் என்ற வகையில் டட்லி சேனநாயக்கவும், ஜே.ஆர்.ஜயவர்தனவும், பிரேமதாசவும் எமக்கு அதனையே கற்பித்தனர்.

அதனால் இலங்கையன் என்ற வகையிலேயே நாட்டை காக்க ஜனாதிபதி பதவியை ஏற்றேன். அது தவறா? நீங்கள் வரிசைகளில் நிற்பதை கண்டேன். அந்த நேரத்தில் வரிசையில் மக்கள் அல்லல் பட்டதை கண்டேன். பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினேன்.  அதனை செய்யாமல் ஜே.வி.பி.யும், ஐக்கிய மக்கள் சக்தியும் சாபத்தை தேடிக்கொண்டுள்ளன.

சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் பிரேமதாச ஜனாதிபதியுடன் பணியாற்றியவர்கள் இல்லை. அவரை நானே ஐக்கிய தேசிய கட்சிக்கு கொண்டு வந்தேன். கட்சியைப் பாதுகாப்பது பற்றி அவர்களுக்கு தெரியாது. டீ.எஸ். சேனநாயக்கவை பற்றியும் அவர்களுக்குத் தெரியவில்லை. ஐக்கிய தேசிய கட்சியினர் முதலில் நாட்டை பற்றியே சிந்திக்க வேண்டும்.

பொருளாதாரத்தைப் பாதுகாக்க 3 பில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்பதை 2020 ஆம் ஆண்டு தேர்தலில் நான் வௌிப்படையாக கூறினேன். ஐக்கிய மக்கள் சக்தியும் ஜே.வி.பி.யும் அதனை சொல்லவில்லை. அதனால் நான் தோற்றுப்போனேன். ஆனால் பிரச்சினையின் தன்மையை நான் அறிந்திருந்தேன். உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி உதவிகளைக் கோரினேன். அந்த உதவியுடன் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டை விட்டுச் சென்றதும் எவரும் நாட்டை ஏற்க வரவில்லை. சபாநாயகர் தலைமையிலான குழுவை அமைக்கச் சொன்னார்கள்.  எனக்கு உதவ மறுத்தார்கள். டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளித்தார்கள். தாம் ஐக்கிய தேசிய கட்சியினர் இல்லை என்று நிரூபித்தனர். பிரேதமதாச ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை  கொண்டுவரப்பட்டபோதும் நானே முன்வந்து அவரைப் பாதுகாத்தேன். அவர் மரணித்த போதும் அந்த இடத்திற்கு நானே உடனடியாக சென்றுப் பார்த்தேன். அவர்கள் அவற்றை மறந்துவிட்டனர்.

கட்சியைப் பாதுகாக்கவே நான் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன். 1971 களில் ஜே.வி.பி கலவரம் ஏற்பட்ட காலத்தில் அரசாங்கத்துக்கு பக்கபலமாக நிற்க தீர்மானித்தோம். அப்போதும் நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே எமக்கு இருந்தது. 1989 களில் மீண்டும் அந்த கலவரம் வந்தபோதும் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு அனுருத்த ரத்வத்தவுடன் வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பையேற்று அவரும் வந்தார். இராணுவத்தின் உதவிகளை வழங்கவும் இணங்கினார். அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச இறந்த பின்பும் அவர்கள் கட்சியிலிருந்து எந்தவொரு வேட்பாளரையும் களமிறக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி அலுவலகத்திற்கே வந்து அறிவித்தார். அப்படியொரு நல்ல ஒற்றுமை எம்மிடையே காணப்பட்டது.

அவற்றைப் பற்றி தெரியாதவர்கள் வௌியில் சென்று கூச்சலிடுகிறார்கள். அவர்கள் தான் நெருக்கடி வந்தபோதும் ஓடி மறைந்தனர். அருகிலிருந்த கழிப்பறையை தேடி ஓடினர். நான் நாட்டைப் பொறுப்பேற்றேன். நாட்டை சீர்ப்படுத்த எனக்கு ஒரு குழு தேவைப்பட்டது. அதற்காக ரஞ்சித் சியம்லாபிட்டிய, செஹான் சேமசிங்க, அலி சப்ரி , கஞ்சன விஜேசேகர இவர்களோடு பணியாற்றினேன். அந்த முயற்சிகள் வெற்றியளித்தன.

பிரதமர் பாராளுமன்றத்தை வழிநடத்தினார். மனுஷ வௌிநாட்டு துறையை பாதுகாத்தார். ஹரீன் சுற்றுலா துறையை பலப்படுத்தினார். நிமல் சிறிபால டி சில்வா விமானத்துறையை பலப்படுத்தினார்.  

உலக வங்கி ஐஎம்எப் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் 18 கடன் வழங்கிய நாடுகளுடன் பேசினோம். தற்போது அவர்களுடனான ஒப்பந்தத்துடன் செயற்படுகிறோம். எமக்கு கஷ்டமான காலம் இருந்தது. பணத்தை அச்சிட முடியவில்லை. கடன்பெற முடியவில்லை. அதற்கான வரியை அதிகரித்து, கட்டணங்களை அதிகரித்து வருமானத்தை அதிகரித்தோம். அந்த சுமைகளைத் தாங்கிய மக்களுக்கு நன்றி.  இன்று சுமை குறநை்திருக்கிறது.

இன்று மின்,கேஸ் கட்டணங்கள் குறைந்துள்ளன. சுமைகள் ஓரளவிற்கு குறைந்துள்ளன. ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்திய பின்னர் ஏனைய சலுகைகளை வழங்குவோம். மேற்கூறிய ஒப்பந்தங்களின் இலக்குகளையும் அடைய வேண்டும். அவற்றை அடைந்தால் நாடு வலுவடையும். அதுவே அரசாங்கத்தின் திட்டமாகும்.

எதிர்கட்சியினர் பொருட்களின் விலையை குறைப்பதாகச் சொல்கிறார்கள். வரியை குறைத்தால் வருமானம் குறையும். அதனால் நாம் மீண்டும் 2022ஆம் ஆண்டின் நிலைக்குச் செல்ல வேண்டும். எனவே ரூபாயின் பெறுமதியை அதிகரித்த பின்னர் வரியை குறைப்பதே நல்லதாகும்.

நாம் இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழக்கூடாது. கோட்டாபய ராஜபக்‌ஷவும் ஐ.எம்.எப் பேச்சை கேட்காமலேயே வரியைக் குறைத்தார். அதனால் ஒப்பந்தங்களை மாற்ற வேண்டுமானால் மீண்டும் 18 நாடுகளுடனும் பேச வேண்டியிருக்கும். அதனால் எதிர்க்கட்சிகள் பொய் சொல்கிறார்கள் என்பது தெரிகிறது. எதற்காக பொய் சொல்கிறார்கள் என்பதே எனது கேள்வியாகும். இந்த முயற்சிகளை மேற்கொள்ள எமக்கு இரு வருடங்கள் தேவைப்பட்டன. இந்த ஒப்பந்தங்களை மாற்ற எந்த தரப்பும் இணக்கம் தெரிவிக்காது.

சர்வதேச நாணய நிதியம் நினைத்தாலும் அதனை தனியாக செய்ய முடியாது.  கிரேக்கத்திலும் இதுவே நடந்தது.  அந்த நாட்டில் பொருளாதாரம் சரிவடைந்தது.  அப்போது அந்த நாட்டின் எரிக்கட்சி போலி வாக்குறுதிகளை வழங்கி தேர்தலை வென்றது.  ஐ.எம்.எப் நிபந்தனைகளை மாற்றுவோம் என்றது. அந்த நிபந்தனைகளை மாற்ற பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்துவதாகவும் அந்நாட்டில் புதிய பிரதமர் மேற்படி அமைப்புக்களுக்கு அறிவித்தார். ஆனால் மறுதினமே அந்த அமைப்புகள் நிபந்தனையை மாற்ற முடியாதென அறிவித்தன.

ஆனாலும் அந்த நாட்டில் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ததன் விளைவாக அந்த நாட்டின் பொருளாதாரம் முற்றாக சரிந்து போனது. அதனால் அந்த நாட்டின் நிதி அமைச்சர் மீண்டும் மேற்படி மூன்று அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் நிபந்தனைகளுக்கு இணங்கினார். ஆனாலும் நாட்டில் 13 வீதமாக காணப்பட்ட வரியை 23 சதவீதமாக அதிகரிக்க வேண்டிய நிலை வந்தது.

அதனால் நமது நாட்டிலும் எதிர்கட்சியினர் என்ன செய்ய போகிறார்கள் என்பதை வௌிப்படையாக கூற வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் கைசாத்திட்டதன் பலனாக எமக்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து  மாதாந்தம் 700 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதற்கு ஜப்பானும் உதவிகளை வழங்குவதாக கூறியுள்ளது.

தற்போது நம்மிடம் இருக்கும் பணம் ஜனவரி வரையில் போதுமானதாக இருக்கும்.  ஒக்டோபர் மாதத்தில் அவர்கள் நாட்டுக்கு வந்து நாட்டின் நிலையை ஆராய்வர். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியிலிருந்தால் இதனை முன்னோக்கி கொண்டுச் செல்லும் விதம் குறித்து பேசுவோம். ஜே.வி.பியும், ஐக்கிய மக்கள் சக்தியும் என்ன சொல்ல போகிறார்கள். இதனைத் திருத்தம் செய்வோம் என்று சொல்லுவார்கள். அதனை கேட்டால் அவர்கள் நிதி வழங்குவதை நிறுத்திவிடுவர்.  மீண்டும் பழைய யுகத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.  இதனை பேசி முடிக்கவே மூன்று நான்கு மாதங்கள் தேவைப்படும். 5 மாதங்கள் நாட்டு மக்கள் பணமின்றி கஷ்டப்பட முடியாது.

எனவே, எதிர்க்கட்சிகள் அதற்கான மாற்று வழிகளை குறிப்பிட வேண்டும். நாட்டை அழித்துவிட வேண்டாம். மூன்று கட்சிகளும் இணைந்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவோம். அந்த விடயத்தை முழு நாட்டுக்கும் சொல்வோம். இறுதியில் மூச்சுவிடவும் வரி விதிக்கும் நிலைக்கு வந்துவிடக்கூடாது. மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள்.  அதனால் நாட்டு மக்கள் சிலிண்டர் சின்னத்து வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர் அற்ற யுகம் மீண்டும் வரும். அதை நினைத்து அழ வேண்டாம்." என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார:

''கட்சித் தலைவருக்கு நிலையான கொள்கை, தலைமைத்துவப் பண்பு இருக்க வேண்டும். 39 வேட்பாளர்களில் எத்தனை பேருக்கு இந்த தகைமைகள் உள்ளன. தலைமைத்துவப் பண்புகள் அனைத்தையும் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மட்டுமே இருக்கிறது. 2020 பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் நெருக்கடியை தீர்ப்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. நெருக்கடிக்கான காரணமும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒருவர் தான்.'' என்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க,

"எல்லா தலைவர்களுக்கும் பொறுப்பை ஏற்க மறுத்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே நாட்டை ஏற்றுக்கொண்டார். இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த பிரச்சினைகளை மக்கள் மறந்துபோகும் அளவிற்கு நாட்டில் பொருளாதார நிலைத்தன்மை ஏற்பட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழி செய்துள்ளார்.

தற்போது வெகு விரைவில் இறக்குமதிக்கான அனுமதியும் வழங்கப்படும். மக்கள் நிதியை அரசாங்கம் சரியான முறையிலும் கவனமாகவும் முகாமைத்துவம் செய்வதற்கான புதிய சட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். இன்றும் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. வாழ்வாதாரப் பிரச்சினைகள் உள்ளன. ஒவ்வொருநாளும் அரசாங்கம் வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான முயற்சிகளுடன் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான முயற்சிகளையும் ஆரம்பித்துள்ளது. அதற்காகவே பொருளாதார மாற்றச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நாட்டு இளையோர் வௌிநாடுகளுக்குச் சென்று தோடம்பழ தோட்டத்தில் வேலை செய்வதற்கு மாறாக உள்நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை செய்வதற்கான வழிவகைகளை செய்வோம்." என்றார்.

ஐ.தே.க தேசிய செயலாளர், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க:

"எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள், நாடு முன்னேறப் போகிறதா இல்லாவிட்டால் வரிசை யுகத்திற்கு செல்லப்போகிறதா என்பதை தீர்மானிக்கும். நாடு சுதந்திரம் பெற்றபோது, நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட வேளையிலும் நாட்டை மீட்க ஐக்கிய தேசிய கட்சி மட்டுமே முன்வந்தது.

பல வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தாலும், நாட்டின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார். மக்கள் மூச்சு விடும் நிலைமையை உருவாக்கியுள்ளார். எண்ணெய் கப்பல்கள் நாட்டுக்கு வந்து திரும்பிச் சென்ற வேளையில் மற்றைய வேட்பாளர்கள் எங்கிருந்தனர் என்பதே எமது கேள்வியாகும். அதேபோல் கஷ்டமான காலத்திலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு உண்மையை கூறியுள்ளார்." என்றார்.

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்:

''எதிரணியையும் இணைத்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். 69 இலட்சம் வாக்குளில் சிலரை தவிர அனைவரும் ஜனாதிபதியின் ஆதரவுக்காக இணைந்துள்ளனர். கடந்த காலத்தில் எமது கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்தவர்கள் இணைய ஆரம்பித்துள்ளனர்.

தாம் ஆட்சிக்கு வந்ததும் வரியைக் குறைப்பதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் அன்றிருந்த ஜனாதிபதி வரியைக் குறைத்ததால் தான் 2020 இல் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. எனவே இவ்வாறான வாக்குறுதிகளுக்கு மக்கள் ஏமாறக் கூடாது.

ரணிலால் முடியாது என்று ஒரு காலத்தில் சுவரொட்டி ஒட்டினார்கள். இன்று ரணிலால் தான் முடியும் என்று அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சில காலம் புலி என்றனர். புலிகள் இயக்கத்தை பிரித்து யுத்தத்தை வெல்ல பங்களித்ததாக இன்று கூறுகின்றனர்.  தொங்கு பாலத்தில் இருந்து நாமல் ராஜபக்ஷவை கரைசேர்க்க முயல்வதாக தெரிவித்தனர். மக்களை தொங்கு பாலத்தில் இருந்து பாதுகாக்க அவர் பாடுபட்டதாக இன்று  அனைவரும் ஏற்கின்றனர்.

யுத்தத்தை வென்ற பின்னர் நாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு நன்றிக் கடன் செலுத்தினர். நாடு நெருக்கடிக்கு முகங்கொடுத்த போது நாட்டை மீட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றிக் கடன் செலுத்த மக்கள் முடிவு செய்துள்ளனர். சுயாதீன வேட்பாளரான அவரை வெல்ல வைப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, அவரை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்.'' என்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர,

"இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடையாமல் இருக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பி வருகிறார். பண்டாரநாயக்கவில் காலத்தில் ஒன்றுபட்டு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அதேபோன்ற நிலைமை நாட்டில் மீண்டும் உருவாகியுள்ளது.  

அதற்காக தேசிய வரவு செலவு திட்டமும், பொருளாதார மாற்றத்துக்கான சட்டமூலமும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்களையும் பாராளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளார். 'உறுமய' திட்டத்தின் கீழ் மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கினார். இலவசமாக அரிசி வழங்கினார். அரச ஊழியர்களுக்கு மேலும் 25 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பை வழங்குவதாக கூறியுள்ளார். இவை எவையும் தேர்தல் வாக்குறுதிகள் அல்ல. எனவே நாட்டு மக்கள் பட்ட கஷ்டங்களை நிவர்த்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறவிப் பயனை அடைந்துள்ளார்." என்று தெரிவித்தார்.

ஐ.தே.க பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன,

''ஐக்கிய தேசியக் கட்சி என்பது எப்பொழுதும் சவால்களுக்கு முகங்கொடுத்து வெற்றி கொண்ட கட்சி. பல தலைவர்களை உருவாக்கிய கட்சி. வெள்ளைக்காரர்களிடம் இருந்து நாட்டை மீட்டு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர் டி.எஸ்சேனநாயக்க.. உணவு பாதுகாப்பு சவாலை ஏற்று உணவு கொடுத்தவர் டட்லி சேனாநாயக்க. ஜே.ஆர். ஜெயவர்தன திறந்த பொருளாதாரத்தை அறிமுகம் செய்து நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தினார். வறுமையை ஒழித்து வீட்டுத் திட்டம் கொண்டுவர ஆர்.பிரேமதாஸ பங்காற்றினார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு சவாலில் இருந்து நாட்டை மீட்டவர் ரணில் விக்ரமசிங்க. அவரின் தலைமைத்துவம் இன்று நாட்டுக்கு அவசியம். நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்த போதெல்லாம் நாட்டை மீட்டது ஐ.தே.க தான். ஏனைய தலைவர்கள் வாய்ப்பேச்சில் மாத்திரம் தான் வீரர்களாக இருந்தனர்.  ரணில் விக்ரமசிங்க செயலில் பங்காற்றி வருகிறார். அடுத்த 5 வருடங்களுக்கு அவரின் தலைமைத்துவம் நாட்டுக்கு அவசியம். அவரின் வெற்றியை பெருவெற்றியாக்குவதற்கு கிராமம் கிராமமாகக் சென்று பணியாற்றுமாறு கோருகிறேன்.'' என்றார்.

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார,

''2020 தேர்தலில் மக்கள் உங்களை தோற்கடித்தனர். நாமும் ஐ.தே.கவில்  இருந்து விலகச் சென்றோம். பொதுத் தேர்தலில் தோற்றாலும் நாடுபூராவும் இருந்து பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியலின் ஊடாக நீங்கள் பாராளுமன்றத்திற்கு வந்தீர்கள். நாடு வீழ்ச்சியடைந்திருந்தது. பால்மா இன்றி, மருந்து இன்றி, கேஸ், எரிபொருள் இன்றி மக்கள் அவதிப்பட்டனர். கட்சித் தலைவர்களான சஜித், அநுர போன்றவர்களுக்கு  மக்களின் கஷ்டம் தெரியவில்லை. நாட்டு மக்களின் துயரத்தைக் கண்டு ரணில் விக்ரமசிங்க ஒருவரின் மனம் தான் ஈரமானது. அவர் 5 தடவைகள் பிரதமரானதோடு  ஒவ்வொரு தடவையும் நாட்டை கட்டியெழுப்பும் போதும் அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். கடந்த 2 வருடங்களில் வீழ்ச்சியடைந்த நாட்டை அவர் மீட்டெடுத்தார். நாட்டின் நலனுக்காக அனைத்து ஆதரவாளர்களையும் இணைத்து வீடு வீடாகக் சென்று ஜனாதிபதியின் வெற்றியை பெருவெற்றியாக்குவோம்.'' என்றார்.

முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ,

''ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இதுவரை 14 பேர் ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்துள்ளன. இது வரலாற்று முக்கியமான சந்தர்ப்பமாகும்.  கட்சியைப் பாதுகாத்த ஒரே தலைவர் அவர். ரணில் விக்ரமசிங்க சவாலை ஏற்ற போது நாம் ஆதரவு வழங்கினோம். சுற்றுலாத் துறையை மேம்படுத்தினோம். பணம் அனுப்ப வேண்டாம் என ஜே.வி.பி கோரிய போதும் வெளிநாட்டில் இருந்து டொலர் கொண்டு வர மனுஷவினால் முடிந்தது. உள்ளுராட்சி தேர்தல் நடத்தவில்லை என ஜனாதிபதிக்கு எதிராக ரஞ்சித் மத்தும பண்டார வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் தேர்தல் நடத்தாவிட்டாலும் அவர் மக்களின் பட்டினியைப் போக்கி வாழ வைத்தார். அவர் சிறந்த துடுப்பாட்டவீரர். பிரதமராக இன்றி ஜனாதிபதியாகத் தான் அவர் சிறப்பாக துடுப்பெடுத்தாடுகிறார். எமது தலைவரை வெற்றி பெற வைக்கும் பொறுப்பை ஏற்று பணியாற்றுவோம்.'' என்றார்.

இந்த விசேட சம்மேளன மாநாட்டில் நாடுபூராவும் இருந்து கட்சி அமைப்பாளர்கள்,ஆதரவாளர்கள் உள்ளிட்ட  பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Read more