அடுத்த தவணைக்கான நிதியை வழங்க IMF பிரதிநிதிகள் இரண்டு வாரங்களில் இலங்கை வரவுள்ளனர்!

• IMF உடன்படிக்கையை மாற்றி இந்த சலுகைகளை இழக்க அனுமதிப்பதா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

• சஜித்துக்கும் அநுரவுக்கும் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது: அதை அவர்கள் தற்போது நிரூபித்துள்ளனர்.

• ஒரு நாடாக முன்னேறுவதா அல்லது 2022 இல் இருந்த நிலைக்குச் செல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - ஜனாதிபதி களுத்தறையில் தெரிவிப்பு.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திய வேலைத்திட்டத்தின் அடுத்த தவணைக்கான நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மாற்றுவதற்கு இடமளித்து, நாடு பெறப்போகும் சலுகைகளை இழப்பதா என்பதை மக்கள் செப்டெம்பர் 21ஆம் திகதி தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

களுத்தறை பொது விளையாட்டரங்கில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததை இன்று அனுரகுமார திஸாநாயக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார் எனத் தெரிவித்த ஜனாதிபதி, தன்னால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது போனால், இன்னும் ஒன்றரை வருடங்களில் அதனை கைவிடுவதாக அநுரகுமார ஒப்புக்கொண்டிருப்பதன் மூலம், அவரால்  அதனைச் செய்ய முடியாது என்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

மேலும், சஜித்தின் வேலைத் திட்டம் பற்றி அறிந்து கொள்வதற்காக நேற்றைய தினம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் அதற்கு வரவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். எனவே, தமது வேலைத் திட்டத்தை நாட்டுக்கு கூற முடியாத தலைவர்களிடம் நாட்டை ஒப்படைத்து எதிர்காலத்தை இருளடையச் செய்ய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

மழை பெய்யாத காலத்தில் இருந்து மழைக்காலத்தில்  குடையை விட்டு விட்டு  ஓடும் தலைவர்களை நம்பலாமா என்று மக்களிடம் கேட்கிறேன். டைட்டானிக் கப்பலைப் போல மூழ்கிக் கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை இன்று சரியான பாதையில் கொண்டு சென்றுள்ளோம். கப்பல் துறைமுகத்திற்கு வரும் போது கேப்டனை மாற்றி, அதன் பயணத்தை மாற்றுவதா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். புதிதாக சிந்தித்து முன்னேற வேண்டும். இந்த நாட்டு மக்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. எனவே 2022 இல் இருந்த நிலைமைக்கு மீண்டும் திரும்ப முடியாது. எனவே, இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஆணையை செப்டெம்பர் 21ஆம் திகதி தருமாறு இந்த  மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இன்று சஜித்தும் அநுரவும் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை தலைகீழாக மாற்ற தயாராகி வருகின்றனர்.

அடுத்த தவணைக்கான பணத்தை வழங்க இன்னும் இரண்டு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர். அப்போது இந்த ஒப்பந்தம் மாற்றப்படும் என்று சொன்னால் பணம் தருவதை நிறுத்திவிடுவார்கள். அதன் பிறகு நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். அதை அனுமதிப்பதா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

இன்று ரணில் விக்ரமசிங்கவின் கீழ் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், அந்த முறைமையை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டி வரலாம் எனவும் அனுரகுமார ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாவிட்டால் ஒன்றரை வருடத்தில் ஆட்சியை விட்டுவிடுவேன் என்றும் அனுர கூறுகிறார். நான் அனுரவிடம் கேட்கிறேன், அவர் ஓடுவதென்றால், ஏன் நாட்டைப் பொறுப்பேற்க வேண்டும்.

சஜித் பிரேமதாசவின் திட்டங்கள் என்னவென்பதை அறிந்து கொள்வதற்காக நேற்றைய தினம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு வருமாறு சஜித் பிரேமதாசவிடம் கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. தனது வேலைத்திட்டத்தை மக்களிடம் முன்வைக்க முடியாத ஒருவரிடம் நாட்டை ஒப்படைக்க முடியுமா? சஜித்தினாலும் அனுரவினாலும் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. அதை இதுவரை நிரூபித்திருக்கிறார்கள். எனவே, நாம் ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதா அல்லது 2022 இல் இருந்த நிலைக்கு மீண்டும்  செல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக முன்னேற செப்டெம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

இந்தக் கூட்டத்திற்கு எனது நண்பர் ரோஹித அபேகுணவர்தன என்னை அழைத்து “மொட்டு” சார்பாக உரை நிகழ்த்த வருமாறு கூறினார்.  நாங்கள்  இடதுசாரிக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை. நாங்கள் அரசியல் ரீதியாகவும் எண்ணக்கரு  ரீதியாகவும் வெவ்வேறு முகாம்களில் இருந்தவர்கள். மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டதும் “மகிந்த சுலங்க” வுடன் நாடு முழுவதும் சென்று ஆட்சி அமைக்க வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்த போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட போது, “மொட்டு” கட்சியை உருவாக்கினோம். மொட்டுக் கட்சி, கிராம மட்டத்தில் ஏற்பாடுகளை செய்யும் போது உங்களின் மாவட்டத் தலைவர் தான் அத்திட்டத்தை உருவாக்கி, மற்றும் அதனை  கிராமத்திற்கு எடுத்துச் சென்று இந்த நாட்டில் வலுவான அரசியல் கட்சியை உருவாக்க பாடுபட்டார்.

நாங்கள் ஒரு கட்சியை உருவாக்கினோம், ஒரு அரசாங்கத்தை உருவாக்கி ஜனாதிபதிகளை நியமித்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக கொவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எங்களால் நிர்வகிக்க முடியவில்லை. எங்களிடம் 156 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

69 இலட்சம் வாக்குகளை ஜனாதிபதிக்கு வழங்கி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ஆட்சியைப் பெற்றார். அப்போது எமது அரசாங்கத்தின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருந்தார். அப்போது எமது அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்தார். பெசில் ராஜபக்ஷ நிதி அமைச்சர். அமைச்சர் சமல் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக இருந்தார். அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஐந்து அமைச்சுகளை கொண்ட அமைச்சரவையில் இருந்தார். மொத்த அமைச்சரவையில் ராஜபக்ஷாக்கள்  ஆறில் ஒரு பங்கினர். நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து, பல்வேறு பிரச்சினைகள் வந்தபோது, அமைச்சரவையில் பேசினோம்.  அப்போது அந்நியச் செலாவணி குறைகின்றது. IMF க்கு செல்லலாம் என்று அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கிறது. வேண்டாம் என்கிறது ஒரு குழு.

அன்று "வியத்மக" குழு வந்து, சர்வதேச நாணய நிதியத்திற்குப் போக வேண்டாம் என்றது. போனால் நிவாரணங்களை கொடுக்க முடியாது. "நாட்டை வழிநடத்த முடியாது" என்று ஒரு அச்சமூட்டினர்.   ஆனால் கடைசியில் நாங்கள் சொன்னதை அவர்கள் கேட்காததால் எங்கள் எம்பிக்கள் குழு 123 ஆக குறைந்தது. மற்ற அனைவரும் எதிர்க்கட்சியில் சுயேட்சையாக சென்று அமர்ந்தனர். நாங்கள் மிகவும் கடினத்துடன் இருந்தோம். ஆனால் படிப்படியாக நிலைமை ஆபத்தானதாக மாறியது. போராட்டம் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. மகிந்த ராஜபக்ஷவும் பிரதமர் பதவியை விட்டு வெளியேறினார்.

இந்த நாட்டை நிபந்தனையின்றி யார் பொறுப்பேற்றாலும் நாங்கள் ஆதரிப்போம் என்றோம். சஜித் பிரேமதாசவுக்கு நாட்டைபொறுப்பேற்க உதவுவோம் என்று கூறினோம். பத்து வருடமானாலும் இந்த நாட்டை மீட்க முடியாது, இது பெரும் தீ.. இதை ஏற்றுக்கொண்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள முடியாது என்றார். அனுரகுமார திஸாநாயக்க அப்போது  சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக இருந்தவர்.

அவரும் தோல்வியடைந்த அமைச்சரே. அவரும் இந்த நாட்டை ஏற்க மறுத்துவிட்டார். ரணில் விக்ரமசிங்கவிடம் நாட்டை "ஒப்படைப்போம்" என்று சொன்னோம். அவர் ஒரு தனி நபர். மக்கள் படும் துன்பங்களுக்கு தீர்வைத் தரச் சொன்னோம். அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று  முதலில் செய்த காரியம் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதுதான். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியது மட்டுமன்றி, இந்நாட்டின் வன்முறைச் சூழலில் இருந்து நாட்டை விடுவிக்கவும் பாடுபட்டார். இல்லாவிட்டால் இன்று இந்த நாடும் பங்களாதேஷாக மாறி இருக்கும்.

பத்து வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார். வங்குரோத்தான நாட்டிற்கு யாரும் உதவவோ, கடன் கொடுக்கவோ வருவதில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இருந்த சர்வதேச உறவுகளின் மூலம் நாடு நாடாக சென்று அரச தலைவர்களை சந்தித்து சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க முடிந்தது. அப்போது நாட்டைப் பொறுப்பேற்க  இல்லை. ஆனால் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றியதன் பின்னர் இன்று 38 வேட்பாளர்கள் ஆட்சியை பிடிக்க வந்துள்ளனர்.

மொட்டுக் கட்சியைச் சேர்ந்த 104 பேர் இன்று எம்முடன் இணைந்துள்ளனர். 21 ஆம் திகதி வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று பேஸ் சிலிண்டருக்கு புள்ளடி இட்டு எதிர்வரும் 23ஆம் திகதி நாட்டை மீண்டும் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு உங்கள் அனைவரியதும் ஆதரிவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்

இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த,

அநுர திஸாநாயக்கவுக்கு நாடு சென்றால்  நாடு இருளில் மூழ்குவதைத் தடுக்க முடியாது. 1988-1989 இல் அவர்கள் செய்ததையும், 1971 இல் கூறியதையும் நாங்கள் நினைவு கூர்கிறோம். மேலும், 2022 இல் செய்த விடயங்கள் எங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறது. பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த போது, தீர்வு காண்பதற்குப் பதிலாக, வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் தீ வைத்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு உண்மையிலேயே நெருக்கடியைத் தீர்க்கும் திறமை இருந்திருந்தால், சொத்தை எரிக்காமல் வந்து ஆட்சியைப் பொறுப்பேற்றிருப்பார்கள். ஏனெனில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து எதிர்க்கட்சிகளையும் நாட்டைப் பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

ஆனால் நாட்டைப் பொறுப்பேற்பதற்கும்  பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பதிலாக, அவர்கள் சொத்துக்களை எரிப்பதைத் தேர்ந்தெடுத்தனர். ஜே.வி.பி நாட்டுக்கு செய்த அழிவை மறக்க வேண்டுமானால் நாம் இறந்து மீண்டும் பிறக்க வேண்டும். 1989 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகளால் சுமார் அறுபதாயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். எனவே எதிர்வரும் 21ஆம் திகதி அநுர திஸாநாயக்கவையும் சஜித் பிரேமதாசவையும் ஒன்றிணைத்து தோற்கடிக்க களுத்தறை தயார் என்பதைக்கூற வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்,

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது சஜித் பிரேமதாசவும், அனுர திஸாநாயக்கவும் ஓடினர், நேற்றைய தேர்தல் விவாதத்தில் இருந்து சஜித் பிரேமதாசவும் ஓடிவிட்டார். ஏனென்றால் அவரால் நேரலைக் கலந்துரையாடல்களில் உரையாட  முடியாது.இந்த தருணம் முக்கியமானது. இன்னும் மூன்று நாட்களில் இந்த நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தல் இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

நாட்டில் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு பொருளாதாரப் போரில் வெற்றி பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உங்களின் பெறுமதியான வாக்கை வழங்கி உங்களின் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன,

நாடு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் நாட்டைப் பொறுப்பேற்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவரின் பொருளாதார நிபுணர்கள்  ஆலோசனை வழங்கினர். மக்கள் துன்பப்படும் போது போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த அனுரகுமார திஸாநாயக்க நாட்டைப் பொறுப்பேற்க  முன்வரவில்லை. தட்டில் வைத்து வழங்கப்பட்ட  ஜனாதிபதி பதவியை ஏற்காத சஜிதும் அநுரவும் இன்று ஜனாதிபதி தேர்தலில் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு அதிகாரத்தைக் கோருகின்றார்.

இரண்டு வருடங்களுக்கு முன் இவர்களின் செயல்களை மக்கள் பார்த்தார்கள். எனவே அந்த இரு தலைவர்களின் செயற்பாடுகளைக் கண்டபின்னரும் நாட்டைக் கையளிக்க வேண்டுமா?   என்பதை சிந்தித்துப் பாருங்கள். தலையை மாற்றுவதன் மூலம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை மாற்ற முடியாது. 2022 இல் பணவீக்கம் 71% ஆக இருந்தது. இன்று அதனை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர ஜனாதிபதி செயற்பட்டுள்ளார். உலகத்தைப் பாருங்கள். கிரீஸ், வெனிசுலா, லெபனான், பங்களாதேஷ் போன்ற நாடுகளைப் பாருங்கள், சோசலிசக் குழுக்கள் போராடி நாட்டைக் கைப்பற்றிய பின்னர் எந்த நாடும் வளர்ச்சியடையவில்லை. எனவே, நவீன மற்றும் முன்னேறிய அரசை உருவாக்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. அந்த தலைவரின் வெற்றிக்காக நம்மை அர்ப்பணிப்போம்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கும் போது இந்த நாடு எரிந்து கொண்டிருந்தது.

அப்போது உங்களது  வீட்டையும் போராட்டக் காரர்கள் எரித்தனர். உங்கள் வீடு தீப்பிடித்தபோது, நாட்டில் தீயை அணைக்க உழைத்தீர்கள். அன்று உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. மக்கள் ஒடுக்கப்படும் போது விட்டுக்கொடுக்கும் ஆள் அல்ல நீங்கள் என்பதை அப்போது புரிந்துகொண்டோம். மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பது மட்டுமின்றி, நாட்டை வங்குரோத்து  நிலையில் இருந்து காப்பாற்ற பாடுபட்டீர்கள். இது இந்த மக்களுக்கு தெரியும். ஜனாதிபதியின் வெற்றியை மாபெரும் வெற்றியடையச் செய்ய இந்த களுத்தறை மாவட்ட மக்கள் திரண்டு வந்துள்ளனர்.

மகாசங்கத்தினர் உட்பட ஏனைய மதத்தலைவர்கள், பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இப்பேரணியில்  கலந்துகொண்டனர்.

Read more