பொருளாதார சவாலை எதிர்கொண்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பை நான் நிறைவேற்றியுள்ளேன்

• அதற்காக கிடைத்த அனைத்து கௌரவங்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

• மக்களுக்கான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சவாலை நான் எதிர்கொண்டேன்.

• மக்கள் வரிசைகளில் தவிக்கும் போதுகூட கண்டு கொள்ளாத சஜித்திடமும் அனுரவிடமும் எதிர்காலத்தை ஒப்படைக்க மக்கள் தயாராக இல்லை.

• கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்த குழுவினருக்கு நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் சக்தி உள்ளது - நாரம்மலவில் ஜனாதிபதி தெரிவிப்பு.

பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகளை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றியமைக்காக இன்று பெரும்பான்மையான மக்களின் கௌரவம் தனக்குக் கிடைத்துள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த  கௌரவங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் துன்பப்படும் போது தன்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் மக்களுக்காக நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.

நாரம்மல பிரதேசத்தில் இன்று (10) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டு மக்கள் வரிசைகளில் தவிக்கும் போது அதனை கண்டுகொள்ளாத  சஜித் மற்றும் அநுரவிடம் தமது எதிர்காலத்தை நம்பி ஒப்படைக்க இந்த நாட்டு மக்கள் தயாரில்லை. கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்த மக்களுக்கு நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான பலம் உள்ளது என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான வேலைத்திட்டம் 'இயலும் ஸ்ரீலங்கா' செயல்திட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

''நான் அணிந்துள்ள தொப்பி தொடர்பில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். கிளிநொச்சி கூட்டத்தில் கலந்து கொண்டு இறங்கி வரும் பெண் ஒருவர் இந்தத் தொப்பியை எனக்கு வழங்கினார். நான் உணவு, உரம், எரிபொருள் வழங்கி, மக்கள் வாழ வழிசெய்தமைக்கு அவர் எனக்கு நன்றி தெரிவித்து கௌரவப்படுத்தி இந்தத் தொப்பியை தந்தார். நன்றிக் கடன் செலுத்துவதற்காக எனக்கு வாக்களிப்பதாக அவர் சொன்னார்.

மக்கள் கஷ்டப்படும் போது அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. மற்றவர்கள் பொறுப்பேற்காத நிலையில் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் பொறுப்பை ஏற்றேன்.  ஆனால் மக்கள் பட்டினியில் இருக்கையில் தேர்தல் நடத்துமாறு எதிரணியினர்  கோரினர். கேஸ், பெற்றோல் இன்றி மக்கள் கஷ்டப்படும்போது, உள்ளுராட்சி தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் நடத்தினால் பிரச்சினைகள்  தீர்ந்து விடுமா? மக்கள் கஷ்டப்படும்போது, நாம் இணைந்து செயற்படுவது தவறா? ஆனால் அவர்களின் கட்சியை உடைப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாம் யாரைப் பாதுகாத்தோம். ராஜபக்‌ஷவினரை நாம் பாதுகாக்கவில்லை. மக்களைத்தான் பாதுகாத்தோம்.

ஐஎம்எப் நிபந்தனைகளை விதித்த நிலையில் வரியை அதிகரிக்க நேரிட்டது. மக்கள் என்னை திட்டித்தீர்த்தனர். ரூபாவின் பெறுமதி அதிகரித்தது. சில பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. மக்களுக்கு நாம் ஓரளவு நிவாரணம் வழங்கியுள்ளோம். மேலும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க வேண்டும் என மக்கள் என்னிடம் கோருகிறார்கள். சிலர் தாம் ஆட்சிக்கு வந்ததும் வரியைக் குறைப்பதாக கூறுகின்றனர். கோட்டாபய வரியைக் குறைத்ததால் தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அடுத்த 5 வருடத்தில் அனைவரையும் இணைத்து நாட்டைக் கட்டியெழுப்ப எம்மால் 'இயலும்'.  ரூபாவைப் பலப்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைக்க இருக்கிறோம்.

குருணாகலில் பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். பிங்கிரியவில் 1000 ஏக்கரில் முதலீட்டு வலயம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். குளியாபிடியவில் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட உள்ளது. கல்வியை மேம்படுத்த டிஜிட்டல் மத்திய நிலையம் ஏற்படுத்த வேண்டும். கிராமத்தைப் பலப்படுத்த வேண்டும்.

2022 இல் சஜித்தும் அநுரவும் எங்கிருந்தனர். எங்கு மறைந்திருந்தனர். தற்போது உங்கள் எதிர்காலத்தை ஒப்படைக்குமாறு கோருகின்றனர். ஒப்படைக்கப் போகிறீர்களா? நாம் அனைவரும் இணைந்து நாட்டை முன்னேற்றுவோம். செப்டம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள்" என்றார்.

அமைச்சர் டிரான் அலஸ்:

''2 வருடத்தில் எவ்வாறு இவர் நாட்டை மீட்டார் என உலக தலைவர்கள் ஆச்சரியப்பட்டார். போதைப் பொருள் பாவனை பாரிய பிரச்சினையாக இருந்தது. வீடுகளில் பிரச்சினை ஏற்பட்டது. தற்பொழுது அதனை முறியடித்துள்ளோம். பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுத்து தடுத்துள்ளோம். வெளிநாடுகளில் இருந்து இவற்றை வழிநடத்தும் 12 பேரைக் கைதுசெய்துள்ளோம். மேலும் பலரை கைதுசெய்ய இருக்கிறோம். ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஜனாதிபதியின் இந்தச் செயற்பாடுகளை மற்றவர்களுக்கு எடுத்துரைத்து அவரை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்வோம்" என்று அவர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார:

''எமது மனதில் உள்ள விருப்பத்தை செப்டம்பர் 21 ஆம் திகதி வெளியிடுவோம். நன்றிக் கடன் செலுத்துவதற்காக ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிப்போம். அவருக்கு இணையாக வேறு தலைவர் இன்று கிடையாது. எனது வீடு எரிக்கப்பட்டு அனைத்தும் அழிக்கப்பட்ட போதும் நாம் மக்களுடன் இருந்தோம். எந்த சவால் வந்தாலும் நாம் பின்நிற்க மாட்டோம். குருணாகல் மாவட்டத்தில் நாம் பெருவெற்றிபெறுவோம்" என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா:

''2 வருடத்திற்கு முன்னர் இருந்தே ஏனைய இரு தரப்பும் பிரசாரங்களை ஆரம்பித்தன. அவர்களுக்கு இந்தளவு பணம் எங்கிருந்து வந்தன என்று அவர்கள் வௌியிடவில்லை. வரலாற்றில் முதன்முறையாக நாம் தேர்தலுக்கு செலவிடும் அனைத்து செலவுகள் தொடர்பாகவும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும். ஏனைய தேர்தல்களிலும் அவ்வாறே செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும். 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்ற பாராளுமன்றமும் பதவி விலகச் செல்ல நேரிட்டது. பொருளாதார வீழ்ச்சிக்கு மோசடி தான் காரணம் என்றும் பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் திருடர்கள் என்றும் கூறுகின்றனர்.

14 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டது. கொவிட் தொற்றினால் நாட்டை மூட நேரிட்டது. வெளிநாட்டில் இருந்து வரும் பணம் குறைந்தது. பொருட்களைக் கொள்வனவு செய்ய பணம் இருக்கவில்லை. 2019 இல் அன்றைய ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றிருந்தால் வெளிநாட்டுக் கையிருப்பு அதிகரித்திருக்கும். ஜஎம்எப்பிற்கு சென்றால் பதவி விலகுவதாக அரசில் இருந்த சிலர் அச்சுறுத்தினர். இதனால் ஐஎம்எப் செல்வது தாமதமானது. இறுதியில் அனைத்து நெருக்கடியும் 2022 மே மாதம் வெடித்தது. நாட்டில் பாதுகாப்பிற்கே அதிகம் செலவிடப்பட்டாலும் பாதுகாப்புத் தரப்பிற்குக் கூட வெளியில் வர முடியாத நிலை உருவானது. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே நாட்டுக்குத் தலைவர் ஒருவர் தேவைப்பட்டார். சஜித்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது நிபந்தனைகள் முன்வைத்தாரே தவிர சவாலை ஏற்கவில்லை. 2001 இல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்டார். இரண்டாவது தடவையாக 2022 இல் நாட்டை ஏற்று பொருளாதார மீட்சியை ஏற்படுத்தார்.

பங்களாதேசில் இவ்வாறான நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பொறுப்பேற்க எதிரணி முன்வரவில்லை. நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டது. எனவே ஜனாதிபதிக்கு மீள நாட்டை ஒப்படைக்க வேண்டும்." என்றார்.

இராஜாங்க  அமைச்சர் டி.பி.  ஹேரத்:

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாதக் குழுக்கள் வீடுகளையும் பஸ்களையும் தீயிட்டுக் கொளுத்திய வேளையில் அமைதியான நாட்டை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார்.

உரம் இன்றி விவசாயிகள்  போராட்டம் நடத்தினர். எரிபொருள் இல்லாமல் வரிசைகள் நீண்டு கிடந்தன. பணவீக்கம் 90% ஆக உயர்ந்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகை தடைப்பட்டது. இவ்வாறான தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று மக்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தார்.

இருபத்தைந்து இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டிற்கு வரும் சூழல் உருவாக்கப்பட்டது. சர்வதேச உறவுகளைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை நிர்வகித்ததன் மூலம், நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து காப்பாற்ற முடிந்தது. நாட்டுக்காக ஆற்றிய அளப்பரிய சேவைக்கு நன்றி செலுத்தும் சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. செப்டம்பர் 21ம் திகதி அவருக்கு நன்றி செலுத்தவும் மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. காலங்காலமாக வாக்களித்த நாற்காலி, கை, வெற்றிலை, மொட்டுச் சின்னம் எல்லாவற்றையும்  ஒதுக்கி வைத்துவிட்டு கேஸ் சிலிண்டருக்கு வாக்களிப்போம்.

பாராளுமன்ற உறுப்பினர்  அசங்க நவரத்ன:

''அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்போம். எதிர்க்கட்சிகள் இரண்டு ஆண்டுகளாக தங்கள் சொந்த அரசியல் திட்டத்தை நிறைவேற்றின. இரண்டு வருடங்கள் வாழும் உரிமைக்காகப் போராடினார்கள். மக்களுக்கு வாழ்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. நாடு பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது, அடுத்த 5 வருடங்களை வழங்குமாறு ஜனாதிபதி மக்களிடம் கோருகின்றார். அந்தக் கோரிக்கையை குருநாகல் மக்கள் நிறைவேற்றுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.'' என்றார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன:

''இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கும். நாடு பொருளாதார ரீதியில் சிதைந்து போயிருந்த வேளையில் நாட்டை ஏற்று மக்களுக்கு வாழும் உரிமையை வழங்கியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அவருடைய வெற்றிக்காக நாம் அனைவரும் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். சவால்களை எதிர்கொள்ளும் தலைவர்களிடம் இருந்து வாக்குறுதிகளை மட்டுமே பெற முடியும்.  எனவே, இந்த ஜனாதிபதித் தேர்தலில் அலையில் அடிப்பட்டு, உணர்வுபூர்வமாக முடிவெடுக்காமல், அறிவைப் பயன்படுத்தி  வாக்களியுங்கள்" என்றார்.

மதத் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச அரசியல் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Read more