நாட்டை மீண்டும் இருளில் தள்ளும் வரிசை யுகம் உருவாக இடமளிக்காதீர்கள்!

• வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

• தொங்கு  பாலத்தை சிரமத்துடன் கடக்கும் குழந்தையை முன்னோக்கி அழைத்துச் செல்ல இரு நதாலியாக்களினாலும் முடியாது- ஜனாதிபதி பதுளையில் தெரிவிப்பு.

• பி. திகாம்பரம்  தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் அம்பகமுவ, வலப்பனை மற்றும் நுவரெலியா உள்ளூராட்சிமன்ற முன்னாள் உறுப்பினர்கள், ஐ.ம.ச கட்சி முன்னாள் உறுப்பினர்கள், தொழிற்சங்க தலைவர்கள் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு.

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

பதுளையில் இன்று (16) பிற்பகல் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை இருளில் மூழ்கடிக்கும் வரிசை யுகத்திற்கு இடமளிக்க வேண்டாம் என  அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டத்தை வலுவாக நடைமுறைப்படுத்த மக்களிடம் ஆணை கேட்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் ஜக்கிய மக்கள் சக்தி கட்சி ஆகியவற்றின் தொழிற்சங்க தலைவர்கள் சிலரும் ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

''நாங்கள் வெற்றி பெறுகிறோம்! இந்தப் பெருங்கூட்டத்தைப் பார்த்தால் எமது வெற்றி உறுதியாகிறது. இந்த வாரம் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான தேர்தலை எதிர்கொள்கிறீர்கள். நாம் வளமான, நிலையான நல்ல வாழ்க்கை வாழப் போகிறோமா அல்லது வரிசை யுகத்திற்குத் திரும்பப்போகிறோமா என்பதை இது தீர்மானிக்க வேண்டும். நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு கொண்டு செல்லும் தவறை செய்ய வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக கடந்த இரண்டு வருடங்களில் நாம் முன்னெடுத்த வேலைத் திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஏனைய தலைவர்கள் முடியாது என்று கூறுகையில் நான் ஆட்சியை ஏற்றேன். இந்நாட்டு மக்கள் உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு இன்றி தவிக்கும் போது சஜித்தோ, அநுரவோ கண்டுகொள்ளவில்லை. மருந்து இல்லாமல் மக்கள் இறந்தபோது அவர்கள் வருத்தப்படவில்லை. அவர்கள் தங்கள் அரசியல் இலக்குகளை அடைய மக்களை தியாகம் செய்ய விரும்பினர்.

மக்களைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் என்னுடன் இணைந்தனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தோம். 2025ஆம் ஆண்டில் மக்களின் வாழ்க்கைச் சுமையை இலகுவாக்க முடியும்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது, ​​ பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 05 வருடங்கள் ஆகும். ஆனால் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மிக விரைவாக மீட்டோம். நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு காலப்பகுதியில் அதன் வித்தியாசத்தை  மக்கள் காணலாம்.

நாங்கள் இன்னும் தொங்கு பாலத்தில் இருக்கிறோம். இன்னும் கொஞ்ச தூரம் பயணிக்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்தப் பயணத்தை நிரந்தரமாக்க வேண்டும்.  ஹுனுவடயே கதையில் வருவதைப் போலல்லாமல், குழந்தையின் உரிமையைப் பெற தப்பித்து ஓடிய இரண்டு நதாலியாக்கள் உள்ளனர். அவர்களிடம் திட்டம் இல்லை. நாட்டைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை இல்லை. வரிகளைக் குறைப்பதாகச் சொன்னாலும் அதற்கான அதிகாரத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறவில்லை. அதனால்தான் மக்கள் முன்பொய் சொல்கிறார்கள்.

தப்பித்து ஓடிய தலைவர்களை நம்ப முடியாது. தப்பித்த நதாலியாக்கள் இருவரினாலும்  குழந்தையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. எனவே செப்டெம்பர் 21ஆம் திகதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை தொடருமாறு கேட்டுக்கொள்கின்றேன்" என்று ஜனாதிபதி  தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசனாயக்க:

''நீங்கள் பின்வாங்குவதாக எதிரணி பிரசாரம் செய்கிறது. நீங்கள் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியாக தெரிவாவதற்கு அன்று நாம் பாடுபட்டோம். உங்கள் வெற்றிக்காக பெருந்திரளான மக்கள் திரண்டுள்ளனர். ஏனைய மாவட்டங்களை விட பாரிய வாக்குகளினால் பதுளை மாவட்டத்தை வெற்றி கொள்வோம்" என்றார்.

அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா:

''பதுளை மக்கள் உங்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் உறுதியாக உள்ளனர். அடுத்த தேர்தலில் எம்மை வெல்ல வைப்பதற்காக அன்றி உங்கள் வெற்றி நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியம் என்பதாலே நாமும் மக்களும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். முழு நாடும் உங்களுடன் தான் இருக்கிறது. நாம் வீடு வீடாக பிரச்சாரம் செய்தோம். நாம் செல்வதற்கு முன்னரே மக்கள் உங்களுக்கு வாக்களிக்க தீர்மானித்துவிட்டதாக கூறுகின்றனர். இந்த மாவட்டத்தில் மக்களுக்கு நாம் பாரிய சேவை செய்துள்ளோம். மஹிந்த ராஜபக்ஷவை வெல்ல வைக்க அநுர பாடுபட்டார். சந்திரிகாவுடன் ஒப்பந்தம் செய்தார். நல்லாட்சியில் திருடனைப் பிடிக்கும் பொறுப்பை  செய்தார். ஒரு திருடனையும் பிடிக்கவில்லை." என்று தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர்  வடிவேல் சுரேஷ்:

''இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது  ரணில் விக்கிரமசிங்க இம்முறை பதுளை மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிறது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க  முன்வந்துள்ளனர். இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எமது கடமையை நிறைவேற்றி தோட்டத் தொழிலாளர்களின் 100% வாக்குகளை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்" என்று குறிப்பிட்டார் .

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்:

''எந்த மாகாணத்திற்கு சென்றாலும் வெற்றி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. இந்த மேடையில் இருக்கும் அனைத்து கட்சி சார்ந்தவர்களும் இம்மண்ணுக்கு பெறும் சேவையாற்றியுள்ளனர். எதிரணியில் இருப்பவர்கள் எந்த சேவையும் செய்யாமல் வாய்ப்பேச்சு வீரர்களாக உள்ளனர். பதுளை மாவட்டம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிக வாக்குகளைப் பெறுவார் என்பது உறுதி" என்றார்.

முன்னாள் ஐமச பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள:

''பணம் செலுத்த முடியாமல் கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்களில் இருந்த கேஸை கரைக்குக் கொண்டு வர ஜனாதிபதி தான் பங்களித்தார். IMF உடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காது என்றும் கடன் கிடைக்காது என்றும் எதிரணியில் இருந்த பொருளாதார நிபுணர்கள் கூறிவந்தனர். ரணில் ராஜபக்ஷ என்றனர். அவர்களின் குற்றச்சாட்டுகள் பொய்யாகியுள்ளன. ரணில் - ராஜபக்ஷ அல்ல சஜித் - ராஜபக்‌ஷ என்று தான் கூற வேண்டும். அவரைப் பிரதித் தலைவராக கொண்டுவர சிரச பாடுபட்டது. இன்று ஹிருவின் உதவியை பெற அவர் சிரசவை மறந்து விட்டார். டீல் அரசியலை நிறுத்த வேண்டும். ரணில் விக்ரமசிங்கவிடம் டீல் அரசியல் கிடையாது. வங்கித் திருடன் என்று விமர்சித்தவர்கள். அவரை தேடி வந்து ஜனாதிபதி பதவியைக் கொடுத்தார்கள். அவரை தோற்கடித்தால் மீண்டும் அவர் உங்களை மீட்க வரப் போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாந்து:

''24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்கி எரிபொருள், கேஸ் என்பவற்றை வழங்கி நாட்டை சுமூகமாக்கியுள்ளனர். நாம் நன்றிக் கடன் செலுத்த வேண்டும். வாழ்நாளில் ஒருநாளும் அவருக்கு வாக்களிக்காதவர்கள் கூட இன்று அவருக்கு வாக்களிக்க முன்வந்துள்ளனர். சஜித்தின் இயலாமை காரணமாக தான் அநுரவின் கூட்டத்திற்கு மக்கள் ஓரளவேனும் செல்கின்றனர். ரணில் விக்ரமசிங்கவிற்கு சஜித் உதவியிருந்தால்  அவருக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற தேவை மட்டுமே உள்ளது.

தமது பனியனிலும் உள்ளாடையிலும் ஓட்டை இருப்பதாக ஜே.வி.பியினர் சொல்கின்றனர். அவர்களின் மூளையிலும் ஓட்டையுள்ளது. வெள்ளைகாரனுடன் பேசக் கூட அநுரவுக்குத் தெரியாது. நாட்டை ஆட்சி செய்யும்  எந்தவொரு அனுபவமும் கிடையாது. திஸ்ஸமகாராம பிரதேச சபையை ஜே.வி.பி வென்றது. அவர்கள் சிறப்பாக செய்திருந்தால் அடுத்த முறையும் அவர்களுக்கு அதன் அதிகாரத்தை வழங்கியிருக்க வேண்டும். ஒரு பிரதேச சபையை கூட நிர்வகிக்க முடியாத ஜே.வி.பியினால் எப்படி நாட்டை ஆட்சி செய்ய முடியும். கூட்டங்கள் நடத்தி ரணில் வெல்லத் தேவையில்லை. வீட்டில் இருந்து அவர் வெல்கிறார். வீட்டில் அடுப்பெரியும் போது வீட்டிலுள்ள தாய்மார் அவரைத்தான் ஆதரிப்பார்கள்" என்று தெரிவித்தார்.

இந்த வெற்றிப் பேரணியில் சர்வ மதத் தலைவர்கள், முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், பிரதேச அரசியல் முக்கியஸ்தர்கள் உட்பட பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Read more