நாட்டில் துன்பப்படும் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்- ஜனாதிபதி

நாட்டில் துன்பப்படும் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் கடந்த 02 வருடங்களாக மக்களின் மீட்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்வதற்கே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

குருணாகலில் இன்று (27) நடைபெற்ற சத்கோரள மகா சங்கத்தினர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசத்திற்காகவும் புத்த சாசனத்திற்காகவும் ஆற்றிவரும் அளப்பரிய பணிகளைப் பாராட்டிய மகாசங்கத்தினர், பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

மகா சங்கத்தினரின் ஆசிகளைப் பெற இன்று குருணாகல் பிரதேசத்திற்கு வருகை தந்தேன்.  அத்துடன், மகாசங்கத்தினரின் ஆலோசனைகளைப் பெற்று தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பது எனது நோக்கமாக இருந்தது. மேலும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பயணத்தில், மகா சங்கத்தினரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் நான் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

இக்கட்டான நேரத்தில் இந்த நாட்டை பொறுப்பேற்றேன்.  2019ஆம் ஆண்டு நாம் நாட்டைக் கையளிக்கும் போது திறைசேரியில் 07 பில்லியன் டொலர்கள் இருந்தன. ஆனால் 2022 இல் நான் நாட்டை பொறுப்பேற்ற போது அரசாங்கத்திடம் நூறு மில்லியன் டொலர்கள் கூட இருக்கவில்லை. எரிபொருள், உரம், மருந்து எதுவும் இல்லை. இந்நாட்டின் மக்களால் மகா சங்கத்தினருக்கு அன்னதானம் கூட வழங்க முடியாத நிலை உருவாகியிருந்தது.

அன்று இந்த நாட்டை பொறுப்பேற்கும் நேரத்தில், நான் மகா சங்கத்தினரின் ஆசிகளைப் பெற்றேன். சம்பிரதாய ரீதியில் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டிராத அரசாங்கத்தை நாங்கள் நிறுவினோம்.

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அனைத்து குழுக்களும் இணைந்து முன்னெடுத்துச் சென்றன. மேலும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் போது அரசாங்கம் என்ற வகையில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை முதலில் ஸ்திரப்படுத்த முடிந்தது.

இன்று சிலர் 2022 இல் நடந்ததை மறந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் அதே வேளையில், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நாங்கள் செயற்பட்டோம். மேலும் எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம்.  

ஒரு அரசாங்கம் என்ற வகையில், இந்நாட்டில் துன்பப்படும் மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நாம் மேலும் முன்னோ்ககிச் செல்ல வேண்டும். நாட்டை மீட்பதற்காக கடந்த இரண்டு வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காகவே இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்தப் பாதையில் நாம் தொடர்ந்து செல்ல  வேண்டும். இல்லையேல் இந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது. இன்று ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் சிலர் வரியைக் குறைப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறு செய்தால் என்ன நடக்கும் ? அவ்வாறானதொரு செயலைச் செய்தால் இந்நாட்டு மக்களுக்கு நிவாரணம்வழங்க முடியாத நிலை உருவாகும்.

நாட்அரசாங்கத்தை அமைத்த பிறகு, அந்நியக் கையிருப்பை அதிகரிக்கச் செய்தோம். ரூபா வலுவடைந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ரூபா வலுவாக இருக்க வேண்டும். ரூபாவை வலுப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். எனவே, உண்மையை அறிந்து முன்னேற வேண்டும். மீண்டும் பொய்யான பிரச்சாரங்களில் ஏமாற வேண்டாம்.

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். 1977 முதல், நாடு எதிர்கொண்ட சவாலான காலங்களில்  நாட்டைக் காப்பாற்ற மகா சங்கத்தினர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

அன்று இருந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர். மக்கள் வரிசையில் நின்றனர். அந்த சவாலான காலத்தில் இந்நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ரணில் விக்ரமசிங்க அவர்கள் வரிசையில் நிற்கும் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். அடுத்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரம் வளமான பொருளாதாரமாக மாற்றப்பட்டது. அன்று அவர் இந்த நாட்டை பொறுப்பேற்காமல்  இருந்திருந்தால் இலங்கை இன்னொரு பங்களாதேஷாக மாறியிருக்கும்.

மகா சங்கத்தினர் மற்றும் அமைச்சர் டிரான் அலஸ், இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, டி. பி. ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர், ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Read more