காணி, வீட்டுரிமையைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவேன்!

• ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கப்படும்!

• பொருளாதாரம் வலுப்பெற்று பொருட்கள் விலைகளையும் குறைப்போம் - ஜனாதிபதி.

லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது தனது முன்னுரிமையான எதிர்பார்ப்பு என ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஹப்புத்தளையில் இன்று (08) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால்  முடியும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

''இந்த பிரதேசங்கள் பற்றி நான் 75 வருடங்கள் அறிவேன். இன்று குறைப்பாடுகள் இல்லாத அப்புத்தலை தேர்தல் தொகுதிக்கு வந்ததில் மகிழ்ச்சியடைகின்றேன்.

2022 ஆம் ஆண்டில் இராணுவ நிகழ்ச்சி ஒன்றுக்காக இங்கு பிரதமராக வந்தபோது அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள் நீண்டு கிடந்தன. தொழில் இன்றி மக்கள் அல்லல் பட்டனர். வீடுகளில் முடங்கினோம். எதிர்காலம் கேள்விக்குறியாக தெரிந்தது. இவற்றை நிவர்த்திக்க மக்களுக்காக அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டேன்.

அதன் பின்னர் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. இதிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அவர்களின் நிபந்தனைகளுக்கு அமைய எவ்வாறு செயற்பட வேண்டுமெனவும் முன்கூட்டியே அறிந்திருந்தேன். அவர்கள் மேலும் இலங்கைக்கு கடன் தரவும் தயாராக இருக்கவில்லை.

கடன்பெறவோ, பணம் அச்சிடவோ முடியாது என்று வலியுறுத்தினர். கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டிருந்தனர். அரசாங்கத்திடம் பணம் இருக்கவில்லை. இறுதியாக வேறு வழியின்றி வரியை அதிகரிக்கும் கடினமாக முடிவை எடுத்தோம். வருமான வரியையும் அதிகரித்தோம். ரூபாவின் பெறுமதி இரட்டிப்பாக அதிகரித்தது. ஆனால் பணம் கிடைக்கவில்லை.

அதற்கு மத்தியிலேயே கஷ்டமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அதன் பயனாக நாட்டின் வருமானம் அதிகரித்தது. டொலரின் பெறுமதி குறைந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைந்தன. ஆனால் மக்கள் கஷ்டம் முற்றாக குறையவில்லை. ஆனால் எமது வருமானம் அதிகரிக்கிறது. 2023  ஓரளவு மக்களிடம் பணம் இருந்தது.  

அதனை யாருக்கு பகிரலாம் என்று சிந்தித்தேன். அதன்படியே குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு 'அஸ்வெசும' வழங்கும் திட்டத்தை செயற்படுத்தினோம். லயன் அறைகளில் வசிக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கப்படும். எனவே, இவ்வருடத்தில் மேலும் வருமானம் அதிகரிக்கும். தோட்ட தொழிலாளர் சம்பளமும் அதிகரிக்கும்.

அரச ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா வரையில் சம்பளம் அதிகரிக்கும். அடுத்த வருடம் மேலும் அதிகரிக்கும். ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்தி விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குவோம்.

நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்கான இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம். இப்போது வௌிநாட்டு வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய முடியும். ஐஎம்எப் இடமிருந்து நிவாரணங்கள் கிடைக்கின்றன. கடன் வழங்கிய நாடுகள் மீள் செலுத்த சலுகைக் காலத்தை வழங்கியுள்ளன. இந்த ஒப்பந்தங்களைப் பின்பற்றி முன்னோக்கி சென்றால் எமக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்.

எனவே, எனது எதிர்காலத்தை விடுத்து உங்கள் எதிர்காலத்தை தீர்மானியுங்கள். அனுரவும் சஜித்தும் இவற்றை மாற்றுவதாக கூறுகிறார்கள். அதனால் நெருக்கடிகள் மீண்டும் தலையெடுக்கும்.

இந்நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றுவதே இப்போதைய தேவையாகும். அதனால் தன்நிறைவான வருமானத்தை ஈட்ட வேண்டும். பழைய முறைகள் மாற்றப்பட வேண்டும். குறிப்பாக தோட்ட தொழிலாளர் சம்பளத்தை அதிகரிக்கும் முயற்சிகளை முன்னெடுக்கிறோம். லயன் அறை முறைகளை முற்றாக ஒழித்துவிட்டு கிராமங்களாக மாற்றியமைப்போம். காணி உறுதிகளையும் மக்களுக்கு தருகிறோம். விரும்பியவாறு வீடுகளைக் கட்டிக்கொள்ள முடியும். அதனால் தோட்டங்கள் கிராமங்களாக பரிணமிக்கும்.

மரக்கறி மற்றும் பழ உற்பத்திக்கும் தேவையான வசதிகளை மேம்படுத்தி தருவோம். அதனால் உள்நாட்டு, ஏற்றுமதி உற்பத்திக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். சுற்றுலாத்துறையையும் இங்கு பலப்படுத்த வேண்டும். அதனால் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

எதிர்காலத்தில் நாட்டை முன்னேற்றுவோம். டிஜிட்டல் யுகத்தை உருவாக்குவோம். பெண்களையும் கைவிடவில்லை. அதற்குரிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். பெண்கள் சிறுவர் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்துவோம். பெண்களை தொழில் சந்தைக்குள் உள்வாங்குவோம். சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களை அமைத்து தருவோம்.

இவற்றுக்காகவே எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறேன். ஹப்புதல மற்றும் தியதலாவ போன்ற நகரங்களின் அபிவிருத்திக்கு வழி செய்வேன். எனவே சிலிண்டருக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது கிராமங்களும் இருக்காது." என்றார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

''இன்று யாழப்பாண மக்களும், கிழக்கு மாகாண மக்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த தீர்மானித்துவிட்டனர். ஊவா மாகாண மக்களும் ஒருபோதும் நன்றிக்கடன் மறப்பவர்கள் அல்ல.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட ஜனாதிபதி பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது தோட்ட மக்களின் தேவைகள் பலவற்றையும் தீர்த்து வைப்பார். இன்று பதுளை வைத்தியசாலை வசதிகளை மேம்படுத்தித் தரவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கிறார். எனவே அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்." என்றார்.

இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார்,

"இதுவரையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நவக்கிரகங்களை போல ஒவ்வொரு பக்கமாக திரும்பி நின்றோம். இன்று அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முடிந்திருக்கிறது. மலையக மக்கள் காணியின்றி தவித்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சட்டதிட்டங்களை ஜனாதிபதி தயாரித்திருக்கிறார்.  

அதனால் மலையக மக்களுக்கு வீட்டுரிமையும் காணியுரிமையும் கிடைக்கப்போகும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த பொருளாதார நெருக்கடியால் சகல மக்களும் கஷ்டப்பட்டனர்.

இன்று 38 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மட்டுமே கல்விப் புலமையும், வலுவான சர்வதேச தொடர்புகளும் உள்ளது. அதேபோல் நாட்டு மக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதால் அவருக்கு அசுர பலம் கிடைத்திருக்கிறது.

எனவே, மலையக மக்கள் செய் நன்றி மறவாத சமூகம் என்ற வகையில் கஷ்டத்திலிருந்து எம்மை மீட்டெடுத்த தலைவருக்கு பிரதி உபகாரம் செய்வதற்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்று 38 பேருக்கு ஜனாதிபதி பதவி மீது ஆசை வந்திருக்கிறது. நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தபோது அவர்களுக்கு அந்த ஆசை ஏன் வரவில்லை. அன்று நாட்டை ஏற்றிருந்தால் அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடும் என்ற அச்சம் மட்டும்தான் அவர்களிடம் இருந்தனர்.

அதனால் அன்று நாட்டைக் காக்க திராணியற்றவர்கள் இன்று சுயநலமாக நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். சிலிண்டர் சின்னம் வாக்குச் சீட்டில் கடையிலிருந்து மூன்றாவதாக காணப்படுவதால் இலகுவாக அடையாளம் கண்டு புள்ளடியிடுவது சுலபமானது." என்றார்.

இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்,

"மலையக மக்களுக்கு வாக்குறுதி பெற்றுத் தந்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை மக்கள் மறக்ககூடாது. மலையக மக்களின் வீட்டுத் திட்டங்கள், சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை, கல்வியற் கல்லூரிகள் என்று பல சேவைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்திருக்கிறார். 1700 சம்பள அதிகரிப்பையும் ஜனாதிபதி உறுதி செய்வார் என்று நம்புகிறோம்.

மலையகத்தின் தமிழ் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒன்றிணைத்துள்ளார். எனவே நன்றிக்கடன் செலுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே வாக்களிப்போம். அன்று கொன்று தள்ளிய தோட்ட அதிகாரிகளையும், தீயிட்டு கொழுத்திய தொழிற்சாலைகளையும், மக்களின் அடையாள அட்டைகளையும் அவர்களால் பெற்றுத்தர முடியுமா?" என்றும் வினவினார்.

கிழக்கு மாகாண ஆளுநர்,

"இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்விற்கு அளிக்கின்ற ஆதரவில் மாற்றம் வருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. எமது முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை. லயன் அறைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்திருக்கிறோம்.

மேலும், நாட்டில் பொருளாதார நெருக்கடியும் வரிசை யுகமும் வந்தால் எந்த ஜனாதிபதியும் வரிசைகளில் நிற்கப்போதில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் எந்த வரிசைகளும் உருவாக அவர் இடமளிக்கவில்லை.  அதனை நடைமுறையிலும் அவர் காட்டியிருக்கிறார். எனவே போலி வாக்குறுதி வழங்குவோரை நம்புவதில் அர்த்தமில்லை." என்றார்.

Read more